சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Friday, December 29, 2006

இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்கடந்து செல்கிறது ஓர் ஆண்டு
நடந்தனம் நாம் அதன் வழியில்..

மற்றுமோர் ஆண்டு, வரவேற்போம் மகிழ்ச்சியோடு
சுற்றமும் நட்பும் சிறக்கட்டும், வளங்கள் பெருகட்டும்.

காற்றையும் காலத்தையும் கட்டி வைப்பாரில்லை.
சுற்றும் உலகில் மாற்றமின்றி மற்றவை நிலையில்லை.

உள்ளிருக்கும் அழுக்காறுகளை உதறித் தள்ளுவோம்.
உலகமே நமது சொந்தம் என உவகை கொள்வோம்.

இருகரம் நீட்டி வருமாண்டை வரவேற்போம்..
இதயங்கள் இணையட்டும், இவ்வாண்டு சிறக்கட்டும்

இணைப்பதால்தான் இணையம் என்று பெயரிட்டோம்
இனிய தமிழ் இதயங்கள் கருத்துபரிமாறி கலக்கட்டும்.

சாற்றினேன் சாத்வீகக் கவிதைப் பாமாலை
ஏற்பீர் எமது வாழ்த்துக்களை இந்நாளில்.

இந்த ஆண்டு இனிய ஆண்டாய் சிறக்க
இல்லங்கள் யாவும் மகிழ்ச்சி பொங்க
இணையத் தமிழால் இணைந்த யாவர்க்கும்
இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-சாத்வீகன்.

Thursday, December 28, 2006

தமிழிசை துவண்டு கிடப்பதேன் ?


தொன்மையும் இனிமையும் உடையது தமிழ் இசை...
துக்கடாவாக துவண்டு இருக்கிறது...

அனைத்து இடங்களிலும் தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு. ஆனால் என்னுள்ளே சில கேள்விகள்.

எந்த ஒரு கலைவடிவமும் ஆதரிப்பவர்களை கொண்டே வளர்கிறது...

தமிழில் இசை வேண்டும் என்று கருத்து சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவதால் இது சாத்தியமில்லை...

இன்றைய நிலையில் தமிழ் இசைக்கு புரவலர்கள் தேவை...

அதைவிட முக்கியமாக ரசிகர்கள் தேவை.. தியேட்டர்களில் கானா பாடல்களுக்கு விசிலடித்துக் கொண்டிருக்கும் நமது சகதமிழனின் ரசனை மாறவேண்டும்.. இது சாத்தியமா என்பது யோசிக்கப்பட வேண்டிய விஷயம்...

நிச்சயமாக எனக்கு தெலுங்கோ தமிழோ, கர்நாடக இசை வடிவத்தை ரசிக்கும் பொறுமை கிடையாது. இதுதான் சராசரி தமிழ் ரசிகனின் மனநிலையும் கூட.

"மேயாத மான்... புள்ளி மேவாத மான்..." என்ற பாடலை இன்று எத்துணை பேர் ரசிக்கிறார்கள். ஒலி அல்லது ஒளி பரப்பப்பட்டால் என்னடா இது இழுவை என்று சொல்பவர்கள்தான் அதிகம்.

எம்.கே. தியாகராஜரின் அருமையான பாடல்களை இன்று கேட்பவர்கள் எங்கு இருக்கிறார்கள்.
தீப்பிடிக்க தீப்பிடிக்க பற்றி எரியும் சரச பாடல்களின் இடையில் அமுங்கிய தொனியில் மட்டுமே அவர் பாடல்கள் இன்று இருக்கின்றன.

எம்.எஸ். அவர்களின் "காற்றினிலே வரும் கீதம்" போன்ற கானங்கள் இன்று திரைப்படங்களில் இடம் பெறாதது ஏன்.
குத்துப்பாட்டுக்களை கேட்டுப் பெறும் தயாரிப்பாளர்களால் இது போன்ற பாடல்களை கேட்டுப் பெற்று திரைப்படத்தில் இணைக்க முடியாதா ?
சராசரி ரசிகன் இது போன்ற பாடல்களை கேட்கும் மனநிலையில் இன்று இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள்.
கானாவும் குத்துப்பாட்டும் தமிழ் கலாச்சாரமாக தமிழ் திரைப்படங்களில் வெளியாவது இதனால்தான். மக்களால் பெருமளவு ரசிக்கப்படுகின்றன என்ற அளவில் இவையும் தமிழிசையின் ஓர் அங்கமே.
ஆனால் தமிழிசை தனது பரந்த தளத்தை இவற்றோடு மட்டும் குறுக்கிக் கொண்டது ஏன் ?


இசை இன்று குறிப்பிட்ட ரசிகர்களுக்காக குறிப்பிட்ட கலைஞர்களால் குறுகிய அளவில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது கூட குறிப்பிட்ட மாதத்தில் மட்டும்.

நாம் வெளியே நின்று நமக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றை விமர்சித்து கொண்டு இருக்கிறோம்.

தமிழில் பாடினால் தனக்கு இன்னும் அதிக பேரும் புகழும் கிட்டுமென்ற நிலை உண்டானால் பாடகர்கள் தன்னால் தமிழில் பாடிவிட்டு போவார்கள்.

கலை மக்களுக்காக மக்களிடமிருந்துதான் உண்டாகிறது. எந்த ஒரு கலை வடிவத்தையும் மக்கள் மீது திணிக்க முடியாது.

சராசரி ரசிகன் தன்னை இக்கலைவடிவத்தோடு இணைத்து பார்க்க முடியாமையால்தான் விலகி நிற்கிறான். தமிழில் பாடல்கள் இந்த இசைவடிவில் கேட்கக் கிடைக்காமையால் அல்ல.
இந்த இசைவடிவத்தை அவனால் ரசிக்க முடியவில்லை என்பதால்தான்.

சிறந்த மாடர்ன் ஆர்ட் ஓவியம் என்கிறார்கள். பார்த்தால் நமக்கு ஒன்றும் புரிவதில்லை.
அதற்காக எனக்கு புரிவது போல் வரை என்று அந்த ஓவியனை நாம் கட்டாயப்படுத்த முடியுமா என்ன. அந்த ஓவிய வகை புரிந்து கொள்ளக் கூடியவர்களுக்காக அவன் வரைகிறான். நமக்கு குப்பையாய் தெரியும் அந்த ஓவியம் ஏதோ ஒருவருக்கு கோடி ரூபாய் மதிப்புள்ளதாக தெரிகிறது. தந்து வாங்கி செல்கிறார்கள்.

ஓவியத்தை வாங்காத நாம் வரைபவனிடம் சென்று புரிகின்ற மாதிரி மட்டும் வரையென்றோ, வாங்குபவனை புரிகின்ற மாதிரி ஓவியத்தை மட்டும் வாங்கு என்றோ சொல்ல முடியாது.

ஓவியத்தை நாம் வாங்குவதாக இருந்தால் மட்டுமே புரியுமாறு வரையச்சொல்லி கேட்டுப் பெறல் இயலும்.

அது போல்தான் இசையும். நமக்கு புரியாத ஒன்றை பாடக்கூடாது என்று கலைஞனை நிர்ப்பந்திக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.

அதே நேரத்தில் நமக்கு புரியும் வகையில் அதை எளிமையாக்கினால் அவனைத் தாங்கி நிறுத்த நாம் இருக்கிறோம் என்ற எண்ணத்தை நாம் ஏற்படுத்தினால் தானாகவே அவர்கள் பறந்து வருவார்கள்.

சிம்பிள் எக்கனாமி. சப்ளை அண்ட் டிமாண்ட்.

டிமாண்ட் இல்லை. அதனால் சப்ளை இல்லை.

சராசரி ரசிகனின் ரசனை அவ்வளவு எளிதாக மாறும் என்று தோன்றவில்லை. எந்த காலத்திலும் எனக்கு கர்நாடக இசை வடிவம் பிடிக்கப் போவதில்லை.
தமிழில் வந்துது என்றால் முதல் ஒரு மணி நேரம் ஆவலாக கேட்பேன்.
பிறகு என்னடா இது இழுவை என்று போய்க்கொண்டே இருப்பேன்.

அதோ அங்கே எனக்கு பிடித்த குத்து மற்றும் கானா பாடல்கள் சுடச்சுட தயாராகி கொண்டு இருக்கின்றன. வரட்டுமா.

Monday, December 25, 2006

அய்யனார் குதிரை மூக்குல இருந்து வந்த புகை

அய்யனார் குதிரையோட மூக்குல இருந்து புகை வர்றதை முதல்ல முருகேசுதான் பார்த்தான். அடுத்த நிமிஷம் அவன் பின்னாங்கால் பிடறி பட ஓட ஆரம்பிச்சிட்டான்.
ஊருக்குள்ள நுழைஞ்சவன் மூச்சு வாங்க கூட நேரம் எடுத்துக்காம அடுத்த நிமிஷமே கூப்பாடு போடுறான்.

"அய்யனாரு.. அய்யனாரு குதிரயில இருந்து புகை. மூக்குல இருந்து புகையா வருது.."

பொட்டிகடைகாரருதான் முதல்ல அவன் கத்தனத கேட்டு வந்தாரு.

"என்னடா சொல்றே"

"அண்ணே.. அய்யனாரு குதிரை மூக்குல இருந்து புகையா வருது. அண்ணே"

விஷயம் சுப்பாயி கிழவி காதுல விழுந்திருச்சி. "ஏண்டா முருகேசு என்னடா சொல்லுற. அய்யனாரு குதிர புகைய கக்குதா."

"ஆமா. கிழவி."

கிழவி புலம்ப தொடங்கினாள். "அய்யனாரே உனக்கு நாங்க என்ன குறை வெச்சோம். உனக்கு படையல் வெக்கலியா. பொங்க வெக்கலியா. கடா வெட்டலியா. செய்யறத சரியாதான செஞ்சோம். ஏன் இந்த சோதன.."

கடைக்கு கிளம்பிய கந்தசாமி வாத்தியார் காதுல இந்த புலம்பல் விழுந்துச்சி. அவரும் நேரா அங்கிட்டு வந்து சேர்ந்தாரு.

அரசல் புரசலா விஷயம் பரவி ஊரு சனம் மொத்தம் ஒண்ணா சேந்திருச்சி. களத்து மேட்டுல கதிரடிச்சிக்கிட்டு இருந்தவங்க அத அப்பிடியே போட்டுட்டு வந்துட்டாங்க.

ஊருக்கு நடுவுல இருந்த அரசமரத்தடியில மொத்த சனமும் கூடிருச்சி.

இத்தன கூத்துக்கும் பூஜாரிய காங்கலை.

சுப்பாயி பேரன் மணி பூஜாரிய கூட்டிக்கிட்டு வர சைக்கிளை எடுத்துக்கிட்டு போனான்.

ஊரு தலைவருக்கு சொல்லி விட இரண்டு பேரு ஓடினாங்க.

பத்து நிமிஷம் போச்சி. சனங்க அவங்களுக்குள்ள குசு குசுன்னு பேசிக்கிறாங்க.

தலைவரும் பூஜாரியும் ஒருக்கா வந்து சேந்தாங்க.

தலைவரு தொண்டய சொருமி பேச ஆரம்பிச்சாரு "ஏன் எல்லாருமா இப்பிடி கூடியிருக்கீங்க.?"

"அய்யா, முருகேசு அய்யனார் குதிரை மூக்குல இருந்து புகை வர்றதை பாத்திருக்கறான் ஐயா."

"உண்மையா. முருகேசு."

"ஆமா ஐயா. புகையான புகை. குதிரை நகர்ற மாதிரி இருந்திச்சி."

சுப்பாயி கிழவி மீண்டும் ஆரம்பித்தாள் "நான் அப்பவே சொன்னேன். கேட்டீங்களா. இந்த வருசம் ஐயனாருக்கு வெறுமனே சோறு பொங்கி போட்டு கடா வெட்டாம வுட்டுட்டீங்களே. ஐயனாரு கோபத்தை ஊரு தாங்குமா."

பூசாரி எல்லாருக்கும் முன்னாடி வந்தாரு. "ஐயா நாஞ்சொல்ல சொல்ல நீங்களும் வாத்தியாரு ஐயாவுமா சேந்து கடாவெட்ட வேணாம்னு சொல்லிட்டீங்க. இப்ப பாத்தீங்களா."

வாத்தியார் எழுந்தார் பூசாரி. "அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?"

"ஐயா அய்யனாருக்கு கடா வெட்டாததாலதான் ஐயனாரு சாமி கோச்சுக்கிட்டு புகை கக்குது.. இன்னும் என்னென்ன கேடு வரப்போகுதோ."

ஆளாளுக்கு ஏதேதோ பேச ஆரம்பித்தார்கள். ஊரே பயந்து போய் இருந்தது.

"முதல்ல சம்பந்தப் பட்ட இடத்துக்கு போவோம் வாங்கய்யா" வாத்தியார் சொன்னதும் எல்லாருமா சேர்ந்து சிலைய பாத்து போனாங்க.

இப்பவும் புகை வந்து கொண்டிருந்தது. கிட்ட போற தைரியம் யாருக்கும் இல்லை.

வாத்தியார்தான் தைரியமாக போனார்.

கிட்ட போனதும் வாத்தியார் சிரிக்க ஆரம்பிச்சாரு. ஜனங்க புரியாம முழிக்குது.

"யாருடா அது. வெளிய வா"...

பதில் வரலை..

"இப்ப வெளிய வரல.. நடக்கறதே வேற..."

குதிரையோட உடைஞ்ச கால் வழியா இரண்டு பசங்க குதிச்சாங்க.

"ஏண்டா... அய்யனாரு குதிரைக்கு உள்ள உட்காந்து திருட்டுத்தனமா பீடி வலிக்கிறீங்களா.. திருட்டு கழுதைகளா.."

அந்த இரண்டு பேருக்கும் அடுத்தடுத்து அடி விழுந்தது வாத்தியாரிடமிருந்து.

ஊர் ஜனம் தலையிலடிச்சிக்னு திரும்பி போச்சி.

Tuesday, December 19, 2006

தொலைந்த நண்பன்... சிறுகதை
பேருந்து கிளம்பியது. சென்னை செல்லும் கூட்டம், திங்கள் கிழமை காலை. சென்னை செல்லும் பேருந்துக்கள் பிதுங்கி வழியும் நாள். ஞாயிறு விடுமுறை கழிந்த பின் அலுவலகங்களுக்கு செல்பவர், கல்லூரிக்கு திரும்பி செல்லும் மாணவர்கள் கூட்டத்திற்கு குறைவு இல்லை.
படிக்கட்டிற்கு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்த படி நான்.

ஓடி வந்து ஏறிய இளைஞனை எங்கேயோ பார்த்த நியாபகம். முன் வழுக்கை. அவனும் என்னை உற்று பார்ப்பதாக தோன்றியது.
நிமிடங்கள் கரைந்தன..

எனக்குள் ஒரு சந்தேகம்.. அவனுக்குள்ளும் ஏதோ..

"என்னை நியாபகம் இருக்கா.. தலீவா..."

அந்த கரகர குரல். தலீவா என்று அவன் சொன்ன விதம்.

"பிரகாஷ் !!!"

"கண்டுபுடிச்சிட்டியே.." சிரித்தான்

"அடப்பாவி, உன்னை எல்லாம் எப்படி மறப்பேன். எப்படியிருக்கே.."

"நல்லா இருக்கேன் தலீவா.. நீ எப்படி இருக்க.."

*********************************************************

பிரகாஷ்...

பிரகாஷ் நான் ஆறாவது சேர்ந்த அதே பள்ளியில் அவனும் சேர்ந்தான், என்னை விட இரண்டு வயது பெரியவன்.

தமிழ் வழிக்கல்வி. என்னை போல் அவன் பள்ளிக்கு அருகே இருப்பவனல்ல.

இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராமத்திலிருந்து தினமும் பள்ளிக்கு பேருந்தில் வருபவன்..

மிக பயங்கரமான பேருந்து அது. எந்த நேரமும் அச்சு முறிவதை போல. ஒரு ஆளுக்கு ஒரு மூட்டை என்ற கணக்கில் அந்த பேருந்து வரும்.

பத்தாவது வரை ஒன்றாக படித்தோம். ஆரம்பத்தில் அடித்துக் கொண்டு ஆசிரியரிடம் திட்டு வாங்கி ஒன்றாக முட்டி போட்டு அதன் காரணமாக நண்பர்களாகி, ஒன்றாக கிரிக்கெட் விளையாடி..

------


"நம்ப கிளாஸ்க்கு லீடர் தேவை.. பொண்ணுங்கள்ல இருந்து லதா.
பாய்ஸுக்கு ஸ்ரீதர்..."
வகுப்பாசிரியர் வாசுதேவன்.

"பிரபுதான் சார் லீடர்.." பிரகாஷின் குரல்..

தன்னிடம் டியூசன் படிக்கும் ஸ்ரீதர் லீடராக மறுக்கப்பட்டது அவருக்கு கோபம் மூட்டியது. மறைத்து கொண்டார்.

"சரி. போட்டின்னு வந்துருச்சி ஜனநாயகம்தான். ஸ்ரீதர் லீடர்னு சொல்றவங்க எல்லாம் கைய தூக்குங்க.. "

ஸ்ரீதர் மட்டும் கையை தூக்கிக் கொண்டு இருந்தான். மீதமுள்ள இருபத்தோரு கைகளில் எதுவும் எழவில்லை.

"பிரபுதான் லீடர்னு சொல்றவங்க கைய தூக்குங்க.. "

நான் கையை தூக்கவில்லை. வாசுதேவன் இருபத்தோரு கைகளை எண்ணினார். பிரகாஷ் என்னை பார்த்து கண்ணடித்த படி இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டிருந்தான்.

இப்படித்தான் நான் பிரகாஷுக்கு தலைவனானேன்.

----

அவன் முதன் முதலாக காதல் கடிதம் தந்தபோது என்னை அழைத்து சென்றான்..

நாங்கள் ஏழாம் வகுப்பு அந்த பெண் எட்டாம் வகுப்பு. பிஎஸ்ஏ எஸ்எல்ஆர் சைக்கிளில் பள்ளிக்கு வருவாள்.

"நீ இங்கயே இரு தலீவா.. இதோ வந்துடறேன். "

என்னை சைக்கிள் ஸ்டான்டின் ஒரு மூலையில் நிற்க வைத்து விட்டு அவளை சைக்கிளோடு நிறுத்தினான்.
அவள் முகம் மலர்ந்தது. சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தான். ஏதோ கடிதம் கொடுப்பது எனக்கு தொலைவில் இருந்து தெரிந்தது.
சற்று நேரத்தில் திரும்பி வந்தான்.

"சும்மா ஜாலிக்கு தலீவா. கண்டுக்காத. "

நான் அதற்குபிறகு கண்டுகொள்ளவில்லை. அவள் அப்பாவுக்கு மாற்றலானதால் அவள் அடுத்த வருடம் எங்கள் பள்ளியில் இல்லை. பிரகாஷும் அலட்டிக்கொள்ளவில்லை.

-----


பத்தாம் வகுப்பில் நாங்கள். பொதுத் தேர்தல் முடிந்தது.

"நான் ஓட்டுபோட்டேன்" என்றான்.

"அடப்பாவி உனக்கு பதினேழு வயசுதானே ஆகுது.. "

"கள்ள ஓட்டு" சிரித்தான். "நாலு தடவை வேற வேற பூத்ல போட்டேன். விரல் மசியை அழிக்கிறதுக்கு நம்ம கிட்ட டெக்னிக் இருக்கு இல்ல."

"அடப்பாவி.. "

"நம்ம கட்சி நிக்குது. இந்த வேலைய கூட நாம பண்ணமாட்டமா தலீவா. "

-----

பொதுத்தேர்வு நெருங்கியது.

"தலீவா கணக்கு சொல்லி தர்றியா. "

"உனக்கு கணக்கு நல்லா வருமே பிரகாஷ். "

"வரும். ஆனா எனக்கு உன்ன மாறி நூத்துக்கு நூறு வாங்கணும். "

"வீட்டுக்கு வாயேன்.. சேர்ந்து படிப்போம். "

வந்தான். அம்மா அவனுக்கும் காபி பலகாரம் தந்தார்கள். படித்தோம்.

பரீட்சையும் எழுதினோம். முடிவும் வந்தது.

நான் வகுப்பில் முதல் மாணவனாக தேறியிருந்தாலும் கணக்கில் மட்டும் 99. அவன் கணக்கில் 100. மற்ற பாடங்களில் சராசரி.

"குருவ மிஞ்சிட்டடா. "

மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தான்.

"பிரகாஷ். நம்ப பள்ளி கூடத்துலயே பிளஸ் ஒன் சேருவயில்லை. "

"இல்ல தலீவா. நான் பாலிடெக்னிக் படிக்க போறேன். சீட்டு கிடைச்சிரும். "

அதுதான் நான் அவனை கடைசியாக பார்த்தது.

********************************

"நல்லா இருக்கேன் பிரகாஷ். நீ எப்படிடா இருக்க.. என்னடாது இது தலை முடி உள்ள வாங்கிருச்சி. "

"வயசாவுது இல்ல" சிரித்தான் அந்த இருபத்தி நான்கு வயது இளைஞன்.

"அப்புறம். நீ என்ன பண்ற. வேலை பாக்குறியா தலீவா. "

"இல்லை பிரகாஷ். டிகிரி முடிச்சிட்டு மேல மாஸ்டர்ஸ் படிக்கிறேன். நாம பாத்து ஏழு வருஷம் இருக்கும் இல்ல. நீ என்ன பண்ற.. "

"உனக்கு தெரியுமே. பாலிடெக்னிக் படிச்சேன். அப்புறமா கொஞ்ச நாள் சும்மா. இப்போ மெட்றாஸ்ல ஒரு கம்பெனியில ஃபுளோர் இஞ்சினியர். "

மேல் விசாரிப்புகள் தொடர்ந்தன.

"ஏதோ பிழைப்பு ஓடுது தலைவா. பேருதான் புளோர் இஞ்சினியர். இரண்டாயிரம் ரூபா தர்றான். "

"அவ்வளவுதானா. "

"நான் எல்லாம் என்ன தலீவா உன்னமாதிரியா. உங்க வீட்ல படிக்க வைக்கறாங்க. அம்மா நல்லா இருக்கறாங்களா. நான் உங்க வீட்டுக்கு வந்தா சாப்பாடு போடாம அனுப்ப மாட்டாங்களே. "

"நல்லா இருக்காங்க. உங்க வீட்ல. "

"அப்பா மூணு வருசத்துக்கு மின்னாடி இறந்துட்டாரு. கொஞ்சம் நோய் வாய் பட்டு. அவருக்கு அண்ணன் மேல பெரிய கவலை. அண்ணன் சரியா படிக்கல. பத்தாவது நாலு தடவை எழுதி பாஸ் பண்ணான். இருக்கற இரண்டு நஞ்சைய அண்ணன் மேல எழுதிட்டாரு. "

கேட்டுக்கொண்டிருந்தேன். தொடர்ந்தான்.

"உனக்கு தெரியுமே. அண்ணனுக்கு போன வருஷம் கல்யாணம் ஆச்சு, பத்திரிகை அனுப்பினனே. "

"கிடைச்சிச்சு பிரகாஷ். எக்சாம் டைம் வரமுடியல. "

"அண்ணன் இப்ப கிளார்க்கு. அப்பா வேலையில இருந்தப்பவே இறந்துட்டாரு இல்ல. சாகறதுக்கு முன்னாடி அப்பா என்னை கேட்டுக்னது ஒண்ணே ஒண்ணுதான். பிரகாஷ், நான் செத்தா கம்பாஸினேட் கிரவுண்டுல புள்ளைக்கு வேலை வரும். நீ அதை உங்க அண்ணனுக்கு விட்டு கொடுப்பியான்னாரு. சரிப்பான்னேன். நீ புத்திசாலி என்னை மாதிரி, என் கவலையெல்லாம் உங்க அண்ணனை பத்திதான். அவனுக்கு ஒரு வழி பண்ணிட்டேன்னா போதும். நீ கையோடும் காலோடும் பிழைச்சிப்ப. சரிப்பான்னு சொன்னேன். சத்தியம் பண்ண சொன்னாரு. பண்ணினேன்.
அந்த வேலை அண்ணனுக்கு கிடைச்சிருச்சி. "


"நீ உனக்குன்னு உங்க அப்பா கிட்ட எதுவுமே கேட்கலியா பிரகாஷ். "


"இல்லை" சிரித்தான். "அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லுது. நான் இருக்கற இருப்பு அதுக்கு எங்க தெரியுது. இரண்டாயிரம் ரூபா வாங்கிக்கிட்டு நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது. எங்க கம்பெனியில அடுத்த வருஷம் சம்பளத்தை அதிகமாக்கறதா சொல்லியிருக்காங்க. மூவாயிரம் ஆக்குவாங்க. அப்ப வேணா கல்யாணம் பத்தி யோசிக்கலாம்."

"மூவாயிரம் போதுமா. "

"ஊருக்கு வெளியில ஒரு வாடகை வீடு. வர்றவளுக்கு சாப்பாடு அவ்வளவுதான் நம்மால முடியும். இருந்தாலும் இது போதும். நமக்குன்னு ஒருத்தி பொறந்து இருக்க மாட்டாளா.
என் கவலையெல்லாம் அப்படி வர்றவா அம்மாவ பாத்துப்பாளான்றதுதான்.
எங்க அண்ணி நான் சொல்ல கூடாது, இப்ப அவங்கதான் அம்மாவ பாத்துங்கறாங்க. ஆனா அம்மாவ ஒழுங்க நடத்தறது இல்லை. "


கண்கலங்கினான். "நான் கொஞ்சம் வாழ்க்கையில முன்னேறி எங்க அம்மாவ கூட்டி வந்து வெச்சிக்கணும்னு ஆசை. பார்ப்போம். "

போரூர் வந்தது. "என் கம்பெனி இங்கதான்." பேர் சொன்னான். "இந்த பக்கம் வந்தினா பாரு." சரியென்று தலையாட்டினேன்.

நிறுத்தத்தில் இறங்கி கூட்டத்தோடு சேர்ந்து கரைந்து போனான்.

அதற்கு பிறகு நான் அவனை பார்க்கவில்லை. அவனைப்பற்றிய செய்தி எதுவுமில்லை.

அவன் நல்லமனசிற்கு எங்கு இருந்தாலும் அவன் நன்றாக இருப்பான். நம்பிக்கை மட்டும்.Wednesday, December 13, 2006

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா


குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா..


பழகவே அவனும் நல்ல தோழனல்லவா
வழங்கும் தமிழில் நானும்அதை சொல்லவா...

(குழந்தை கண்ணன்..)

வெண்ணை பானை உடைத்து சிரிக்கின்றான்
உண்டிவில் கொண்டு தயிர்பானை தகர்க்கின்றான்
அண்ணன் பலராமன் பலசொல்லி கேளாதவன்
கண்ணன் குறும்புகளில் என்றும் குறையாதவன்

(குழந்தை கண்ணன்..)

அரக்கரை அழித்திடவே அவனும் வந்தான்
அரவம் ஒன்றின்மேல் நடமாடி நின்றான்
உரலொன்றில் அன்னைதான் கட்டி வைத்தால்
மரம்மோதி ஆங்கே மோட்சம் தந்தான்.

(குழந்தை கண்ணன்..)

தின்ன இவன் மண்கொண்டான் என்றே

அன்னை கேட்க வாய்திறந்து வையகம்
தன்னை காட்டியவன் மயங்க வைத்தான்.
இன்னும் என்னென்ன இவனே செய்வான்.

குன்றொன்றை அவனும் குடையாய் கொண்டான்
கன்றுபசுக்கள் யாவிற்கும் அபயம் தந்தான்.
இன்றுஇக் கண்ணன் யாது செய்வான்
என்று யாவரையும் நோக்கச் செய்தான்.

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா...
Tuesday, December 12, 2006

மனிதனாய்......

Sunday, December 10, 2006

கொழுகட்டை கதை...

சின்னதா ஒரு கதை சொல்லலாம்னு.. எப்பவோ கேட்ட கதை..

புதுசா கல்யாணம் ஆன மாப்பிள்ளை...

வேல விஷயமா வெளியூரு போயிக்னாரு..

பக்கத்துலய மாமியாரு வூடு...

போலன்னா நல்லா இருக்குமா.. பொஞ்சாதி வேற.. எங்க ஊரு பக்கமாத்தான் வேலயா போறீங்க.. எங்க அம்மாவ பாத்து அப்பிடியே இந்த பலகாரத்தையும் குடுத்து வுடுங்கன்னு சொல்லி குடுத்து வுட்டு இருக்கிறாங்கோ...

சரின்னு நம்ப புது மாப்பிள்ளையும் வேலை முடிஞ்சதும் சோக்கா மாமியாரு வூட்டுக்கு கிளம்பிட்டாரு..

முததடவயா பொஞ்சாதி இல்லாம மாமியாரு வூட்டுக்கு போறாரு..

மாப்பிள்ளய பாத்த அவிங்களுக்கு கையும் ஓடல.. காலும் ஓடல...

கடுதாசி கூட போடாம இல்ல வந்து நிக்கறாரு..

அதுவும் நாளும் கிழமையுமா பாத்து வந்து இருக்கறாரு.. கோழியடிச்சு கூட குழம்பு வெக்க முடியாத நாளுல...

சரி.. நல்ல பலகாரமா ஏதாவது செய்யலாம்னு மாமியாரு கொழுகட்ட செஞ்சாங்க....

மாப்பிள்ளை இதுக்கு முன்னாடி கொழுகட்டைய சாப்பிட்டதே இல்ல..
ரொம்ப புடிச்சி போயி எல்லாத்தையும் தீத்து பூட்டாரு..

"அத்த, ரொம்ப நல்லா இருக்கே, இந்த பலகாரம் பேரு என்ன" ன்னு கேட்டாரு.. அத்தையும் வெட்கத்தோட "இது பேரு கொழுகட்டை மருகமனே"ன்னு சொன்னாங்க..

இதே மாதிரி பலகாரம் செய்ய என் பொண்ணுக்கும் தெரியும்னு மாமியார் சொன்னதும் மருமகனுக்கு சந்தோஷமாயிடுச்சி...

பலகாரம் பேர ஞியாபகம் வெச்சிக்கிட்டு வீட்ல போய் செய்ய சொல்ல வேண்டியதுதான்னு கிளம்பிட்டாரு...

பலகாரம் பேரு மறக்காம இருக்க, "கொழுகட்டை, கொழுகட்டை"ன்னு சொல்லிக்கிட்டே போறாரு மாப்பிள்ளை...

நடுவில இரண்டு மூணு சின்ன பிள்ளைங்க விளையாடிட்டு இருந்திச்சி..
அதுல ஒருத்தன் விளையாட சொல்ல "அத்திரிபாஞ்சா" அப்பிடின்னு சொன்னானா.

அத கேட்ட மாப்பிள்ளை கொழுகட்டைய மறந்துட்டாரு..
அத்திரிபாஞ்சாவை புடிச்சிகிட்டு "அத்திரிபாஞ்சா, அத்திரிபாஞ்சா"ன்னு சொல்லிக்னே வீடு போய் சேந்தாரு...

வீட்டுக்கு போயி பொஞ்சாதிய பாத்து எனக்கு அத்திரிபாஞ்சா செஞ்சி குடுன்னு கேட்டாரு..

"அது இன்னாயா இது. புது பலகாரமா இருக்குதே" அப்படின்னு பொஞ்சாதி சொல்ல..

வந்துச்சு பாருங்க மாப்பிள்ளைக்கு கோபம்.

"இப்பதான் நான் உங்க ஆத்தா வூட்ல அத்திரிபாஞ்சாவை சாப்டுட்டு வர்றேன்.. அவிங்க உனக்கு செய்ய தெரியும்னு சொன்னாங்க.. கழுத தெரியாதுன்னா சொல்ற"ன்னு பாஞ்சாரு..

அப்படி ஒரு பலகாரம் எனக்கு தெரியாதுன்னு பொஞ்சாதி சொல்ல கோபம் வந்து பொஞ்சாதிய போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டாரு மாப்பிள்ளை..

அவளும் அடிக்கு தப்பிக்க அங்க ஓடி இங்க ஓடி அடுப்பங்கரையில புகுந்துட்டா.. அங்க இருந்த வெறகு கட்டைய எடுத்து புருஷன் தலையில ஒரே போடு... அவன் கத்த.. இவ கத்த.. ஒரே ரணகளமா போச்சி..

பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க...

அவிங்க எல்லாம் சேந்து இது இன்னா கூத்துன்னு கேக்க.. புருஷன்காரன் அத்திரிபாஞ்சா செஞ்சு தராத கதைய அவிங்க கிட்ட சொன்னான்.

அவங்களும், "இது என்ன அத்திரிபாஞ்சா கேள்வி படாத பலகாரமா இருக்குதே... அதுக்காக பொஞ்சாதிய போட்டு இப்படியா அடிப்பாங்க , கொழுகட்டை மாதிரி வீங்கி போய் இருக்குதே"ன்னு சொல்ல..


அவன் குதிக்க ஆரம்பிச்சிட்டான்.. "அதேதான்... அதேதான்.. அந்த பலகாரம் பேரு கொழுகட்டை" அப்பிடின்னான்..

எல்லாரும் தலயில அடிச்சுக்னு திரும்பி போனாங்க.

அமானுஷ்யங்களின் அலறலில்.....உள்ளிருந்து கதறும்
கவியுள்ளம்,
காகிதத்தில் எழுதப்பட்ட
மரபு கவிதையொன்று..
கிழித்தெறிகிறேன்..
மண்ணின் மாண்பு தெரிய
மரபு தந்தால் கொள்ளாத மக்கள்..
உயர்ந்த கவிகளை ஒளித்து விட்டேன்...
இனி என் கவிதைகள் புலம்பல்
மட்டும் செய்யும்..
தனிமையை சொல்லும்..
காதலில் கதறும்..
காமத்தை எட்டி
மறைவாய்ச் சொல்லி மகிழும்
கவிதைகள்..
அவயங்களின் அலறலை
பதிக்க பதிக்க
கூடுகிறது என் மதிப்பு கவிஞனாய்..
என் கவிதையின் உள்ளிருக்கும்
மறைபொருளை உணரமுடியாதவனா நீ..
எனில் நீ கவிஞனில்லை..
உன்னை நான் கவிஞன் என
ஒத்துக்கொள்ள புரியாவிட்டாலும்

புரிந்ததாகவாவது தலையை ஆட்டு..
எனக்கே புரியாத ஒன்றை
நான் எழுதவில்லையா....
தொடர்கிறது எனது கவிதை..

உள்ளும் புறமும் உணர்வுகளின்
மொத்தப் பிழம்பாய்,
அமானுஷ்யங்களின் அலறலில்..
நான் புதுக்கவிஞன்..
எழுதப்பட்ட என் மரபுகள்..
என் குப்பைக் கூடைக்கு மட்டும்...Thursday, December 07, 2006

நச்சு மரம்நண்பனிடம் கோபம் கொண்டேன், உரிமையில்
உரத்துச் சொல்ல உருகியது என்கோபம்..
உண்டான கோபமொன்று எதிரிமீது என்னுள்ளே,
எப்படி சொல்ல என்றிருக்க மேலும் வளர்ந்தது..


பயமென்னும் நீர்வார்த்தேன், நித்தம் வளர்ந்தது கோபம்
அல்லும் பகலும் என்கண்ணீரை கவர்ந்தபடி.
புன்னகையால் கோபம் புதைத்தேன், அதுவே ஒளியாக
எனது மெல்லிய திறத்தால் மறைவாக வளர்ந்ததுசெடி.

இரவும் பகலும் வளர்ந்தது அது
இறுதியில் கனியொன்று கிளையில்.
கவரப்பட்டான் எனது எதிரி
எனதுஅது என்று அவனறிவான்.

திருடும் மனம்கொண்டான் எல்லை தாண்டினான்.
இரவொன்றில் அவனும் கனியை கவர்ந்து கொண்டான்.
மறுகாலை என்மனம் கொண்ட மகிழ்ச்சி,
மரத்தடியில் என்கண் பருகியது அவனது வீழ்ச்சி.


வில்லியம் பிளேக் அவர்களின் பாய்ஸன் ட்ரீ. - தமிழில் சாத்வீகன்.


Tuesday, December 05, 2006

பள்ளிகளில் இந்தி தேவையான ஒன்றா..

இந்தி படிப்பது குறித்த இரு பதிவுகளை படிக்க நேரிட்டதின் எதிரொலியாய் இப்பதிவு..

1. तमिल - தேசிகன்
2. ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு.. அரைபிளேடு


அவர்கள் பதிவில் நான் இட்ட பின்னூட்டமே இங்கு..

-----------------------------------------------------------------------
தங்கள் பதிவில் பின்னூட்டிய பலரும், தாங்கள் உட்பட இந்தி படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். நானும் உடன்படுகிறேன்.

ஆனால் அம்மா ஆடு படிக்க வேண்டிய காலத்திலேயே இந்தி படிக்க துவங்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை..

குழந்தைகளிடம் தமிழே முழுதாய் துவங்காத நிலையில் இந்தியை துவங்குவதால் குழந்தைகள் தமிழிலும் இந்தியிலும் அரை குறைகளாக போய் விடும் ஆபத்து இருக்கிறது.


தமிழகத்தில் இன்றும் துவக்க கல்வியும் நடுநிலை கல்வியும் எட்டாத நிலையில் இருக்கும் நிலையில் அரசுப்பள்ளிகளில் அரசே இந்தியை திணிக்க வேண்டும் என்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று..

இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்க வயது ஒரு தடையில்லை..

நான் தமிழ் மீடியம். ஆங்கிலம் மூன்றாவது வகுப்பில்தான் துவங்கினேன்.
இந்தியை எட்டாம் வகுப்பில் பள்ளிக்கு வெளியில் துவங்கினேன். பிராத்மிக் முதல் பிரவீன் வரை நான்கு ஆண்டுகள் படிப்பு. இந்தியில் கவிதைகள் புரியுமளவுக்கு..

ஓரளவுக்கு இந்தியையும் தமிழையும் வேறுபடுத்தி பார்க்கும் வயதில் இந்தி படித்ததால் எனது தமிழ் எந்த விதத்திலும் தேயவில்லை.

பிஞ்சுகளிடையே தமிழுக்கு பதில் இந்தி என்பது எனக்கு எவ்விதத்திலும் ஒத்துக் கொள்ளக் கூடியது இல்லை.

நன்றி

सात्वीगन‌ / சாத்வீகன்------------------------------------------------------------------------------------------------------------

Sunday, December 03, 2006

தீபத் திருநாள். கிராமத்து கதையொன்று

கிராமங்களில் கார்த்திகை...

கார்த்திகை திருநாள் தீபங்களின் திருநாள்.
இருளை விளக்கி அருளை பெருக்கும் ஒரு நாள்.
கார்த்திகை செல்வன் கந்தனையும், அடிமுடி காணா அண்ணாமலை தீபத்தையும் இந்நாள் தொழுதல் சிறப்பு.

கிராமங்களில் வீடு தோறும் ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகள் கார்த்திகையின் புகழை சொல்லாமல் சொல்லும்.
அழகான அகல் விளக்குகள். மண்ணால் செய்து சுட்ட விளக்குகள்.
அவரை இலையையோ அல்லது வேறு அகன்ற இலைகளையோ கொய்து, அவற்றின் மீது சாண உருண்டையை திரட்டி வைத்து, அதன் மீத அகல் விளக்கினை பொருத்தி, எண்ணையும் திரியும் இட்டால் தீபம் தயார். வீட்டின் வாசலிலும், மாடங்களிலும் விளக்குகளை பொருந்தவே வைத்து அந்தி சாயும் நேரத்தில் இவ்விளக்குகளை கிராமங்களில் மக்கள் ஏற்றி வைப்பதை காணலாம்.

கார்த்திகை தீபம் என்றால் சுற்றப்படும் மாவலிகள் மனதில் முதலில் வரும். சிறுவர்கள் பனம் பூவையும், கரியையும், உப்பையும் மூன்றையும் தீப்பிடிக்க தக்கவகையில் துணி மூட்டையாக்கி அதை எருக்கம் குச்சிகளை மூன்றாக எடுத்து அதனிடையே வைத்து கட்டி மாவலியாக்குவர். இதனை நெருப்பேற்றி தலைக்கு மேல் சுற்ற பொறி பறக்கும். தொடர்ந்து சுற்ற பொறி பறந்து ஒரு நெருப்பு வட்டமாய் காட்சி தரும். நான்கைந்து சிறுவர்கள் ஒரே நேரத்தில் மாவலி சுற்ற பார்க்க கன ஜோராய் இருக்கும்.

கார்த்திகை விளக்குகள் சகல செல்வத்தையும் நமக்கு கொண்டு வருவதாக ஐதீகம்.
செல்வத்திருமகள் இலக்குமி இல்லந்தோறும் வரும் நாள் இந்நாள். அவளை வரவேற்கும் முகமாய் விளக்குகள் ஒளிருகின்றன.

இங்கே ஒரு சின்ன கதை கிராமத்து வழக்கிலேயே...

ஒரு ஊருல ஒரு பெரிய ராசா இருந்தாரு.

அவரு ஒரு தடவ காட்டுக்கு வேட்டையாட போகும் போது பரிவாரத்தை விட்டு தனியா போயிட்டாரு...
ராசாக்கு நல்ல தாகம்..
தண்ணி, தண்ணின்னு தேடறாரு..
எங்கியும் கிட்டல.. கொஞ்சம் தலசுத்தலா போயிருச்சு ராசாவுக்கு.
அப்ப அந்த பக்கமா காட்டுல தேன் எடுக்க போன பொண்ணு ஒருத்தி இராசாவ பார்த்தா..
கையில இருந்த தேனை இராசாவுக்கு குடுக்கவும் இராசாவுக்கு உயிர் வந்தது.
"ஏய்.. பொண்ணு நீ எனக்கு உசுரை கொடுத்து இருக்க. என்ன வேணும் கேளு"ன்னாரு ராசா..அந்த பொண்ணு யோசிச்சா.. ராசாகிட்ட என்ன கேக்கறது.. பொண்ணும் மணியும் கேட்டா என்ன மாதிரி கிராத்து பொண்ணு அத எங்க பத்திரப்படுத்திரது...யோசிச்ச அந்த பொண்ணு "ராசா. இந்த தீபத்துக்கு யாரும் தீபம் ஏத்த கூடாது நான் மட்டுந்தான் ஏத்தலாம்னு உத்தரவு போடுங்க" அப்படின்னு கேட்டுக்கிட்டா..ராசாவும் இன்னாடா இது புது வகையான கோரிக்கையா இருக்குதேன்னுட்டு சரி சொல்லி அப்படியே ஒரு உத்தரவா போட்டாரு.

தீபமும் வந்திடுச்சி. ராசா போட்ட உத்தரவால ஊரே இருண்டு கிடக்கு, அரண்மணயோட சேத்துதான். ஊரோட மூலயில ஒரு ஓல குடிசையில மட்டும் அகல் விளக்குங்க எரியுது. ராசாவோடா மேய்ச்சலுக்கு போன பசுமாடுங்க சாயங்காலம் ஆனதும் வீடு திரும்புது. வெளிச்சமா இருக்கிற இடம்தான் அரண்மனைன்னு நினைச்சி மாடுங்க எல்லாம் அந்த பொண்ணோட வீட்டுக்கு போயிடுச்சி.. அந்த கால வழக்கப்படி விளக்கு வச்சதும் மாடுங்க எந்த வீட்டுக்கு போகுதோ அவங்களுக்குதான் அந்த மாடுங்கள்லாம் சொந்தம். அத்தினி மாடுங்களும் அந்த பொண்ணுக்கு சொந்தமாயிடுச்சி.. அந்த பொண்ணு அந்த ஊருலயே பெரிய பணக்காரியாயிட்டா.. அதுக்கப்புறம் பெரிய இடத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாம் ஜாம்னு இருந்தாளாம் அந்த பொண்ணு.


இந்த கதை கார்த்திகை தீபத்தை பற்றி மக்களிடம் வழங்கிய கதை. நான் சிறுவயதில் கேட்டது. கதை சொல்லிகள் இன்று இல்லாததால் காற்றோடு மறைந்து கிட்டத்தட்ட மறைந்து விட்ட கதை...

அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

Saturday, December 02, 2006

சென்னையில் முருகன் கோவில்கள்

தமிழ்க்கடவுள் முருகன், பக்தர் மனதில் குடியிருக்கும் குமரன், செந்தமிழ் விளைந்த செந்தில் நாதன் சென்னையில் எங்கெல்லாம் இருக்கிறார்..

வடபழனி

சென்னையில் முருகன் என்றதும் யாவருக்கும் முதலில் நினைவில் வரக்கூடியவர் வடபழனி முருகனே. வடபழனி வீற்றிருக்கும் வடிவழகு. பக்தர் தமக்கு அருளும் தனிப்பாங்கு. மிகவும் பரபரப்பான கோவில் இது, எத்துணை சினிமா பெட்டிகள் இங்கு பூஜித்து எடுக்கப்பட்டிருக்கும். எத்தனை புது வண்டிகள் இங்கு பூஜை செய்யப்பட்டிருக்கும். ஒரு நல்ல முகூர்த்த நாளில் காலை கோவில் சென்றால் குறைந்தது ஐந்து திருமணங்களாவது இங்கு நிகழக்காணலாம். பிரகாரங்களில் ஆஞ்சனேயனும், அருணகிரியாரும் இக்கோவிலின் சிறப்பு.

பாலதண்டாயுதபாணி

தேனாம்பேட்டையில் எல்டாம்ஸ் ரோட்டில் அத்தனை பரபரப்புகளையும் தாண்டி அமைதி தவழ குடிகொண்டு இருக்கிறார், பால தண்டாயுத பாணி. கோவிலில் சிவனும், மரத்தடியில் பிள்ளையாரும் பாங்காய் இருக்க பக்தருக்கு அருள் பாலிக்கும் பாலதண்டாயுதபாணியை இங்கு காணலாம்.

கந்தகோட்டம்

சென்னையில் பூக்கடையில் சென்னை மருத்துவ கல்லூரியில் இருந்து சற்றே நடக்கக் கூடிய தொலைவில் இருக்கிறார் கந்தசாமி. மூர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது. கந்தன் இருக்குமிடம் கந்தகோட்டம் எனத்துவங்கும் கானா பாடலை திரைப்படத்தில் கேட்டிருப்பீர்கள். இத்தலம் சென்னையின் இதயப்பகுதியில் அமைந்து இங்கிருக்கும் வணிகர் தொழும் தெய்வமாய் உள்ளது.

சிங்காரவேலன்

மயிலையில் கயிலைநாதனும் கற்பகமுமே சிறப்பு என்றால், அருகிலேயே பிரகாரத்தில் இருக்கிறார் சிங்கார வேலன். ஆறுமுகனாக அருளும் பொருள். மயிலாப்பூர் கபாலி கோவிலில் கந்தன், சீர்மிகு சிங்கார வேலன். மயிலை அமர்ந்த மயில் வாகனன்.

குன்றத்தூர்

குன்றத்தூரில் குன்றில் இருக்கிறார் குமரன். நகரின் பரபரப்புகளை தாண்டி.
போரூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தாண்டி. பல்லாவரத்தில் இருந்து பம்மல் வழியாகவும் செல்லலாம். அழகிய குன்று. படிகளில் ஏறியும் செல்லலாம். அல்லது வாகனத்தில் மலையில் ஏற இருக்கிறது ஓர் பாதை. ஏறிச்சென்றால் சென்னை முழுதையும் உயர்ந்த இடத்தில் அமர்ந்து தன் அருள்பார்வை பார்த்தவாறு இருக்கிறான் குன்றுதோறும் அமர்ந்து குன்றத்தூரிலும் அமர்ந்த இறைவன்.


அறுபடையப்பன் கோவில்

பெசன்ட் நகரில் கடலோரத்தில் அட்ட லட்சுமி கோவிலைதாண்டி சென்றால், கடல் புரத்திலேயே அமைந்திருக்கிறது அறுபடையப்பன் கோவில். ஆறு படைவீடுகளில் அமர்ந்த முருகனை ஒரே இடத்தில் காணக்கிடைக்கிறது. பழனி, பழமுதிர்ச்சோலை, திருத்தணிகை, திருச்செந்தூர், சுவாமிமலை, திருப்பரங்குன்றம் ஆகிய ஆறுதலங்களின் முருகனையும் ஒரே இடத்தில் காணக்கிடைத்தல் எத்துணை அருமை.

சோளிங்க நல்லூர்

பழைய மகாபலிபும் சாலையில் அந்த முகப்பு முருகன் கோவிலை கட்டியம் கூறி நம்மை வரவேற்கிறது. சற்று தொலைவு சென்றால் ஓர் அழகிய நந்தவனம். நந்தவனத்தில் நடுநாயகனாய் ஆள் அரவமற்ற ஓரிடத்தில் அமைதியின் ஓர் உருவாய் குமரன். பிரகாரத்தில் வீரபாகு, அனுமன், சப்தகன்னிகள். நிசப்தம் எங்கும், அமைதி,அமைதி மட்டும்.
வண்டுகளின் சத்தம் மட்டும் கேட்கும் ஓரிடத்தில் வடிவழகனை காணுதல் எத்துனை ரம்மியமாக இருக்கிறது.


குமரக்குன்று

குரோம்பேட்டையில் சிறிய குன்று, அதில் ஒய்யாரமாய் வீற்றிருக்கிறான் குமரன். எம்.ஐ.டி. கல்லூரி முகப்பிலிருந்து சற்று உள்ளே நடந்து செல்லும் தொலைவில் இருக்கிறது, இச்சிறு குன்று. குன்றின் கீழே அனுமன் மற்றும் பெருமாள் கோவில்கள். பிறகு குன்றின் கீழுள்ள விநாயகனை வணங்கி ஏற, பாதி படிகளை தாண்டியதும், சிவனும் சிந்தையில் நிறைந்த தேவியும். அத்தனை படிகளையும் தாண்டி சென்றால் பாங்குடனே பரிமளிக்கும் முருகன். அற்புதமான கோவில்.


சென்னையின் சுற்றுப்புறம் யாவும் செந்தில் நாதன் அமர்ந்து சென்னையை சிறப்பித்துக் கொண்டுள்ளமை, சொல்ல சொல்ல இனிமையன்றோ.

Friday, December 01, 2006

நமது மண்ணின் தெய்வங்கள்

தெய்வங்கள் ஆயிரம் இங்குண்டு. மண்ணின் மகிமை சொல்லும் தெய்வங்கள் அதில் எத்தனையுண்டு...

முனீசுவரன், கருப்புசாமி, காத்தவராயன், ஐயனார், கன்னி சாமி...

இவை மக்களோடு இணைந்த தெய்வங்கள்.. கிராமங்களின் காவல் தெய்வங்கள்..

காலங்கள் மாறி கணினி மயமாகி போன பின்னும் வேல் கம்புடன் தன்னை தாண்டி செல்லும் கேபிள் கம்பிகளையும், தார் சாலைகளையும், மின்சார கம்பிகளையும் கண்டபடி அமைதியாகவும் கம்பீரமாகவும் நிற்கும் இக்கடவுளரை கிராமம் தோறும் காணலாம்.

பெரும்பாலும் ஊரின் எல்லையிலேயே நிற்கும் தெய்வங்கள் இவை..

மண்ணின் மணம் கமழ வரும் மாரியம்மனும் அவ்வண்ணமே...

மாரி யாவது மழை... மழை வேண்டி குடியானவர்கள் தொழும் கொற்றவையாக மக்கள் தெய்வமாக உயர்ந்து நிற்பவள் மாரி...

அமைதியான ஊர்..

ஊரோடு அருகிருக்கும் ஏரி...

ஏரியின் மதகுகளை தாண்டி சென்றால் ஆளரவமற்ற வேலிகாத்தான் முட் செடிகள்...

அழகாய் வீற்றிருக்கிறாள் அந்த அம்மன்..

பெயர் நடவாழி அம்மன்..
அன்பு ததும்பும் முகம்...
கருணை சொரியும் கண்கள்...
கிராமத்து மக்களின் காவல் தெய்வமவள்..

நடவாழி அம்மன் என்று பெயர்..
செல்லும் வழிக்கு துணை வரும் தெய்வம்...ஊர் சத்தமும் உலக்கை சத்தமும் கேட்காத தொலைவில் அமர்ந்து ஊரை காப்பவள்...

உலக்கைகள் ஒழிந்த கிரைண்டர் காலத்திலும் கிரைண்டர் சத்தம் கேளாத் தொலைவிலேய இருக்கும் தாய்...

எத்துணை மக்கள் தொழுகிறார்கள் அவளை...

அது விழாக்காலம்... வருடம் ஒரு முறை ஊர் கூடி பொங்கல் வைக்கிறது அத் தெய்வத்திற்கு...

திருவிழாக்கோலம் எங்கும்... திருவிழாவின் கடைகள்... குச்சி ஐஸ், மண்ணில் செய்த சொப்புகள், பலூன்காரர்கள், வளையல்காரர்கள், பிளாஸ்டிக் பொம்மைகள், மண்ணில் செய்த கடவுளர் பொம்மைகள், சிறிய தள்ளிச் செல்லக் கூடிய ரங்க ராட்டினம், சத்தமிட்டமிட்ட இங்கும் அங்கும் ஓடும் சிறுவர்கள், அவர்களை விரட்டி பிடிக்க முடியாமல் பெரிய மூங்கில் கூடைகளில் படையலுக்கு வேண்டியதை கொண்டு வரும் பெண்கள்...

ஏற்கனவே வந்து மண்ணில் எருமட்டைகளை பரத்தி பத்த வைத்து அதில் பாத்திரங்களை வைத்து சோறு பொங்கும் பெண்கள்...

அரிசி குக்கர்களிலேயே சோறு வைத்து உண்ட நமக்கு பொங்க சோறு தேவாமிர்தம்...

அம்மனை தரிசித்து வலம் வர அட்ட லட்சுமிகளும் அருகில், நவகோள்களும் நம்மையும் சுற்று என அழைக்க சுற்றி விட்டு வெளியேறினால், வெளிபிரகாரத்தில் நிற்கிறாள் துர்க்கை...

சற்றே தள்ளி வர அரச மரமும் அதனடியில் மேடையும், கற்களை குடைந்து அழகாக வடிக்கப்பட்ட நாக சர்ப்ங்களும்... நாக தேவதைகளை ஒரு சுற்றி வந்தால்..

ஓரமாய் இருந்து ஒய்யாரமாய் அழைக்கிறார் முனீஸ்வரர்... முன்னால் மக்களிட்ட படையல்கள்... வாழை, பொரி, சுருட்டு....

தாண்டி வர தனியாய் இருக்கிறது துளசி மாடம்...

தள்ளி சற்று தொலைவில் புற்றுக்கோவில், பால் ஊற்ற வைக்கப்பட்ட மண் வட்டு, உடைத்து ஊற்றப்பட்ட முட்டைகள்...

கடந்து வந்தால் இருக்கிறது கன்னி சாமி. கன்னி சாமி என்பது பொம்மைகள், மண்ணால் செய்யப்பட்டவை, ஒன்று அல்ல பல பொம்மைகள் அருகருகில், ஓரடிக்கும் மிகாமல்...

ஒரு சில ஒடிந்து...
"கன்னி சாமின்னா அப்படிதான்... புதுசா செஞ்சு வச்சாலும் இந்த கன்னிங்க அதுங்களுக்குள்ளயே சண்ட போட்டுக்கும்.. அப்புறம் ஒடஞ்சு போயிடும்..".
"சரி பெரியவரே."

"கன்னி சாமிக்கு புடிச்சதும் சுருட்டுதான்... இந்த கன்னிங்க இங்க இருக்கின்ற மக்களின் குல தெய்வம்... கன்னிய கும்பிடறவங்களுக்கு கறுப்பு கிடையாது.. அதாவது கறுப்பு கயிறு கட்ட கூடாது.."

"அப்படிங்களா."
"ரொம்ப நன்றி. சரி வர்றங்க"

அப்பாடா எல்லா சாமியும் கும்பிட்டுட்டடோம் அப்படின்னு வெளிய வந்தா...

ஒரு சாமி என்ன கண்டுக்கவே இல்லையே அப்படின்னு முறைச்சு பார்த்த மாதிரி இருந்தது...

அடடா.. பிள்ளையாரப்பா.. இந்த மக்கள் வெள்ளத்தில் உங்களை, முழுமுதற் பொருளை கண்டு கொள்ளாமலேயே உள்ளே போய் விட்டேனா என்ன.. கூரை வேண்டாம்.. கோபுரம் வேண்டாம்.. ஒரு அரச மரத்தடி போதும் என்று அமர்ந்த அண்ணலே... இதோ என் தோப்புகரணங்கள் உனக்கு சமர்ப்பணம்..

சென்று வருகிறேன் பிள்ளையாரே, மீண்டும் அடுத்த திருவிழாவன்று திரும்பி வருகிறேன்...