சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Monday, February 18, 2008

இருத்தலை உறுதி செய்யும் கவிதைகள்

எழுதப் படாத பக்கங்கள்
புரட்டி புரட்டி
பார்க்கிறேன்.
இதை விட எனது
வாழ்க்கையை நான் சிறப்பாக
எழுதி இருக்க முடியாது.

*******

காகிதத்தில் கொட்டிய வார்த்தைகள்
கதறிக் கொண்டிருந்தன.
"நாங்கள் வார்த்தைகள்."
"கவிதை என்று எப்படி சொல்வாய் ?"

********

மீண்டும் பேனா மூடி திறந்தேன்
மீண்டும் கவிதையா ?
காகிதங்கள் ஓடி ஒளிந்தன.
பேனாவை வீசியெறிந்தேன்
விசைப்பலகையொன்றில் தட்டச்ச துவங்கினேன்.

********

எதற்கு இந்த கவிதைகள்
அல்லது வார்த்தைகள்.
இவை எப்பொருளைப் பாடுகின்றன.
இவை எதையும்
பாடுவதில்லை.
இவ்வரிகள்
நான் இருக்கின்றேன்
என்பதை உறுதி செய்கின்றன.
அவ்வளவே.

********

ஓடி ஒளிந்த
காகிதங்களே !
திரும்பி வாருங்கள்.
இனி வார்த்தைகளை
பிரித்து போட்டு
பின் நவீனத்துவம் என்று
சொல்ல மாட்டேன்.

********

இனியும் எழுதுவேன்
வார்த்தைகளே
அச்சம் வேண்டாம்.
நீங்கள் உங்களை வார்த்தைகள்
எனச் சொல்லிக் கொள்ளுங்கள்.
நான் கவிதை என்று சொல்லிக்
கொள்கிறேன்.

********

எழுதத் துவங்குகிறேன்
வார்த்தைகளுக்கு வலிக்காத வண்ணம்.

********

4 Comments:

Blogger jeevagv said...

ஆகா, அருமை.
இருத்தலின் நினைத்தலே சிறப்பு.
இருத்தலில் நிறைத்தலில்
அனைத்துமானதை
அணைத்திடும் நிஜமான
இந்த நிமிடத்தில் மட்டும் வாழ்ந்திட.

4:31 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி ஜீவா.

5:49 PM  
Blogger கிருத்திகா ஸ்ரீதர் said...

வார்த்தைகளுக்கான உருவகங்களும் நம் இருப்புக்களின் மீதான உவமைகளும் அருமை.. சாத்வீகன்.... வாழ்த்துக்கள்.

7:28 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி கிருத்திகா.

6:44 AM  

Post a Comment

<< Home