சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Wednesday, May 16, 2007

மூழ்கிய தீவு... கைவிடப்பட்ட அன்பு....

ஒரு அழகான தீவு.

அதில் மகிழ்ச்சி, துக்கம், அறிவு போன்ற பலவற்றுடன் அன்பும் வசித்து வந்தது.

ஒருநாள் இன்று இத்தீவு மூழ்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு உணர்வும் தங்கள் படகுகளை தயார் செய்து வெளியேற தயாராகின.

அன்புக்கு வெளியேற மனமேயில்லை. அது எந்த ஏற்பாட்டையும் செய்துகொள்ளவில்லை.

தீவு மூழ்கும் நேரம் நெருங்கியது. அன்பு உதவி கேட்க முடிவு செய்தது.

பணம் மிகப்பெரிய படகொன்றில் சென்று கொண்டிருந்தது.
"பணமே. நீ என்னை உன் படகில் ஏற்றிக் கொள்வாயா ?" அன்பு கேட்டது.
"முடியாது. என் படகில் நிறைய தங்கம் வெள்ளி இருக்கிறது. உனக்கு இடமில்லை" பணம் மறுத்து சென்றுவிட்டது.

தற்பெருமை தன் படகில் கிளம்பிக் கொண்டிருந்தது.
"தற்பெருமையே நான் உன்னோடு வரட்டுமா." அன்பு அதனிடம் கேட்டது.
"நீ நனைந்திருக்கிறாய். என் படகு ஈரமாகி விடும். உன்னை ஏற்ற முடியாது". தற்பெருமை அன்பை கைவிட்டது.

அவ்வழியாக மேலும் மகிழ்ச்சி, துக்கம் போன்ற பலவும் கடந்து சென்றன. எவையுமே அன்பை ஏற்றி கொள்ளவில்லை.

அப்போது ஒரு முதிர்ந்த குரல் "அன்பு என்னுடன் வா".

அன்பு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நன்றி சொல்லி அந்த முதியவரின் படகில் ஏறி அன்பு தப்பித்தது.

அன்பை கரையிறக்கி விட்டு அந்த முதியவர் சென்று விட்டார்.

"உதவி செய்த அவர் பெயரை கூட நான் கேட்கவில்லையே" அன்பு வருந்தியது.

"அதுதான் காலம்" அறிவு அன்பிடம் சொன்னது.

"ஆனால் மற்ற எவரும் உதவி செய்யாத போது காலம் எனக்கு உதவியதே.".

"ஆம் அன்பின் அருமை எதையும் விட காலத்திற்குத்தான் தெரியும். அதனால்தான் காலம் உனக்கு உதவி செய்தது." அறிவு விளக்கியது.

-----------

நாம் வாழும்போது பணம், தற்பெருமை, புகழ் இவற்றின் போதையால் உண்மை அன்பை உதாசீனம் செய்கிறோம். காலம் கடக்கும் போது... ஒரு கட்டத்தில் அந்த அன்பை உணர்வோம்.

அதே போல் நமது அன்பை யாரேனும் உதாசீனம் செய்தால் அதற்காக வருந்த வேண்டியதில்லை.
தொடர்ந்து அன்பு செய்வோம். காலம் செல்ல செல்ல நமது அன்பை அவர்களே உணர்வார்கள்.

காலத்ததை போல அன்பின் அருமையை உணர்த்துவது எதுவும் இல்லை.


வள்ளுவம்:

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

3 Comments:

Blogger Chandravathanaa said...

nalla thathuva kathai

12:56 PM  
Anonymous Anonymous said...

very nice story!!!

3:30 PM  
Blogger காட்டாறு said...

ரொம்ப நல்லா இருந்தது கதை. எளிமையான வார்த்தையில் தெளிவான கதை.

7:34 PM  

Post a Comment

<< Home