சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Tuesday, May 15, 2007

விரிசல் பானை.....



அந்த வீட்டில் இரண்டு பெரிய பானைகள் இருந்தன. அந்த வீட்டின் வேலையாள் அவற்றை ஒரு நீண்ட கழியின் இரு முனைகளிலும் கட்டி கிணற்றிலிருந்து வீட்டிற்கு நீர் கொண்டு வருவான். அதில் ஒரு பானை மிக ஒழுங்காவும் மற்றது சிறு விரிசலுடனும் இருக்கும். ஒவ்வொரு முறை நீர் கொணரும் போதும் விரிசல் பானையிலிருந்து நீர் ஒழுகி வீட்டையடையும் போது அதில் பாதி நீர் தான் இருக்கும்.

இரண்டு ஆண்டுகளாக இதே போல் நிகழ்ந்து கொண்டு இருந்தது. வேலையாளால் ஒன்றரை பானை நீரை மட்டுமே கொணர முடிந்தது.

ஒழுங்கான பானை இதனால் கர்வம் கொண்டு இருந்தது. விரிசல் பானை தனது இயலாமையை நினைத்து வெட்கியது.

இரண்டாண்டு தொடர் தோல்விக்கு பின் விரிசல் பானை ஒருநாள் வேலையாளிடம் பேசியது..
"என்னை மன்னித்து விடு."
"ஏன்?"
"இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக என்னால் முழுமையாக நீர் கொண்டு வர முடியவில்லை. நான் வெட்கப்படுகிறேன்"
வேலையாள் சிரித்தான்.
"நாளை வரும் வழியில் பாதையை நன்கு நோட்டமிடு".

மறுநாளும் அதே போல் நிகழ்ந்தது. விரிசல் பானை ஒழுகியவாறே வந்தது.
ஆனால் பாதையில் இருந்த மலர்ச்செடிகளை பார்த்தவாறே வந்தது.

வேளையாள் விரிசல் பானையிடம் சொன்னான்..
"வழியில் இருக்கும் இந்த மலர்ச் செடிகளை பார்த்தாய் அல்லவா. இவை நீ இருக்கும் பக்கத்தில் மட்டும் வளர்ந்திருப்பதைப் பார். உன்னிடம் விரிசல் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் அதுவும் சாதகமான ஒன்றே. நான் நீ இருக்கும் பக்கத்தில் மலர்ச்செடியின் விதைகளை தூவினேன். உன்னில் ஒழுகிய நீர் அவற்றிற்கான நீராயிற்று. இந்த மலர்கள் நமது வீட்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றன. இது உன்னால் மட்டுமே சாத்தியமாயிற்று".

நாம் அனைவரிடமும் சில குறைகள் இருக்கின்றன. நாம் அனைவரும் விரிசல் பானைகளே. ஆனால் நமது குறைகளுக்காக இயலாமைக்காக நாம் வருந்த வேண்டியதில்லை.
நமது குறைகளே நமது நிறைகளாகவும் அமையக்கூடும். அவற்றை ஏற்றுக் கொள்வோம். வாழ்க்கை மகிழ்ச்சியனாதாக இருக்கக் காண்போம்.

-----------------------------

வள்ளுவம்:

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

8 Comments:

Blogger மாசிலா said...

வணக்கம் சாத்வீகன்,

அற்புதமான வாழ்க்கை பாடம் கொடுத்திருக்கிறீர்கள். கொஞ்சமும் எதிர்பாராத முடிவு. 'இடுக்கண் வருங்கால் நகுக' என்பதை ஒட்டி இருக்கிறது இது. வாழ்க்கையில் எது நடந்தாலும் அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, எல்லாம் ஏதோ ஒரு வகையில் ஒரு நன்மைக்குத்தான் என நினைத்துக் கொள்ளவேண்டும் என்று கற்றது நினைவுக்கு வருகிறது. மரணப்படுக்கையில் இருப்பவனும் எழுந்து போருக்கு கிளம்ப உற்சாகம் அளிக்கும் வாக்கியங்கள். இதை நீங்களாகவே எழுதினீர்களோ அல்லது வேறு யாரோ தெரியவில்லை.
எழுதியவர் நன்றாக இருப்பாராக.

11:02 AM  
Blogger பாலராஜன்கீதா said...

கருத்து மிகவும் நன்றாக இருந்தது. இந்தப்பதிவை என் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்.

12:20 PM  
Blogger jeevagv said...

ஆஹா, அற்புதமாக இருக்குது, ஒவ்வொரு கதையும், கதைக்கான குறளும்...

கதைக்காக குறளா, இல்லை குறளுக்காக கதையா என வியக்கிறேன்!

ஒவ்வொரு பதிவும் நித்திலமாய் ஒளிர்கின்றன.
வாழ்க வளமுடன்!

5:59 PM  
Blogger சாத்வீகன் said...

விரிவான கருத்துக்கு நன்றி மாசிலா.

ஈமெயிலில் அவ்வப்போது வரும் கதைகளையே தமிழ்ப்படுத்தி இங்கு தந்து வருகிறேன்.

8:46 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி பாலராஜன் கீதா.

8:48 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி ஜீவா..

கதையை தமிழ்ப்படுத்தி படிக்கும் போது மனதில் தோன்றும் குறளை கதையோடு இணைக்கிறேன்.

நன்றி.

8:52 AM  
Blogger குமரன் (Kumaran) said...

நல்ல கதை சாத்வீகன்.

2:03 PM  
Blogger காட்டாறு said...

//நாம் அனைவரும் விரிசல் பானைகளே. ஆனால் நமது குறைகளுக்காக இயலாமைக்காக நாம் வருந்த வேண்டியதில்லை.நமது குறைகளே நமது நிறைகளாகவும் அமையக்கூடும்.
//

அருமையான வரிகள்.

7:36 PM  

Post a Comment

<< Home