சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Wednesday, November 14, 2007

கந்தபுராணம் இராமாயணம் ஒரு ஒப்பீடு.

இன்று கந்த சஷ்டி. முருகன் கோயில் தோறும் இது பெருவிழா. முருகன் அசுரன் சூரபத்மனை கொன்று தேவர்க்கு அருளிய நாள்.

கந்தன் பிறப்பு.. கந்தன் சிறுவயது திருவிளையாடல்கள்... கந்தன் போருக்கு புறப்பாடு. போரில் அசுரர்களை அழித்தல். பின்னர் வள்ளி தெய்வானையை மணத்தல். இதுதான் கந்த புராணம்.

கதையளவில் கந்தபுராணம் பெருமளவில் இராமயணக்கதையோடு ஒத்து வருவதைக்காணலாம்.

1. இராமாயணத்தில் இராவணனை கொல்ல இராமன் பிறப்பை தேவர்கள் எதிர்நோக்குதல்.
கந்தபுராணத்தில் சூரபத்மனை கொல்ல கந்தன் பிறப்பை தேவர்கள் எதிர்நோக்குதல்.

2. இராவணன் சிவபக்தன். தவங்கள் பல இயற்றி வரங்கள் பல பெற்றவன்.
சூரபத்மனும் சிவபக்தன். தவத்தின் மகிமையால் சிவத்தின் சக்தியன்றி வேறொன்றால் மரணமில்லையென வரம் பெற்றவன்.

3. இராவணனின் தம்பி கும்பகர்ணன். தங்கை அரக்கியாகிய சூர்ப்பனகை. முனிகுமாரர்கள்.
சூரபத்மனின் தம்பிகள் தாராகாசூரன், சிங்கமுகன். தங்கை ஆட்டுமுகம் கொண்ட அசமுகி. முனிகுமாரர்கள்.

4. இராவணனின் வீரமகன் இந்திரஜித் இந்திரனை வென்றவன்.
சூரபத்மனின் மகன் பானுகோபன் சிறுவயதில் சூரியனை பிடித்து தன் தொட்டில் காலில் கட்டிப்போட்டவன்.

5. இராமன் சீதையை சிறைமீட்க போர்தொடுத்தான்.
கந்தன் ஜயந்தன் முதலான தேவர்களை சிறைமீட்க போர்தொடுத்தான்.

6. போருக்கு முன் இராமனின் தூதனாக அனுமன் கடல்தாண்டி செல்லுதல். சீதையை கண்டு பின் இராவணனிடம் தூதுரைத்து திரும்புதல்.
போருக்கு முன் கந்தனின் தூதனாக வீரபாகு கடல்தாண்டி செல்லுதல். ஜயந்தனை கண்டு சூரபத்மனிடம் தூதுரைத்து திரும்புதல்.

7. போரில் தன்னை எதிர்ப்பவன் மகாவிஷ்ணுவின் அம்சமே என அறிந்தும் இராவணன் தொடர்ந்து போரிட்டு இறைவன் திருவடியை அடைதல்.
எதிர்த்துப் போர்புரியும் குமரன் சிவனின் திருக்குமரனே என அறிந்தும் சூரபத்மன் தொடர்ந்து போரிட்டு மயிலாகவும் சேவல் கொடியாகவும் முருகன் திருவடியை அடைதல்.


இரண்டு காவியங்களிலும் காணும் ஒப்புமைகள் மிக அதிகம்.

இராமயணம் என்ற வைணவ புராணத்திற்கு இணையான சைவ புராணமாக கந்தபுராணம் மிளிர்கிறது என்று சொல்வாரும் உண்டு.
இரண்டில் பழமையானது எது எனப் பார்க்கப் புகின் கந்தபுராணமே பழமையானதாகவும் 18 புராணங்களில் ஒன்றாக, சிவனுக்கு உரிய பத்து புராணங்களில் பத்தாவது புராணமாகவும் மிளிர்கிறது.


கந்தன், கடம்பன், குகன், அறுமுகன், சரவணன், செந்தில் ஆண்டவன், தமிழ் கொண்ட முருகன் அசுரனை கொன்று போரில் வென்ற இத்திருநாள் தீமைகள் யாவும் விலகி நன்மைகள் பெருகும் நன் நாள்.

இந்நாளில் கந்தனை வணங்குவோம்.

ஓம் சரவணபவ.

3 Comments:

Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆகா...
இந்தப் பதிவை எப்படி மிஸ் பண்ணினேன்! அடியேன், முருகனருள் வலைப்பூவில் சஷ்டிப் பதிவுகள் தொடர்ந்து ஆறு நாளும் இட்ட போதே, ஒரு பின்னூட்டத்தில் இந்த ஒப்புமை பற்றிக் கேட்டிருந்தீங்க சாத்வீகன்!

ஜிரா-விடம் அந்தப் பொறுப்பைத் தள்ளினேன்! இப்போ வந்து பார்த்தா, நீங்களே அருமையாச் சொல்லி இருக்கீங்க!

இன்னும் நிறைய இருக்கு!

6:10 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

எப்படி சூர்ப்பனகையின் அதீத ஆசையும் உரையாடலும் தான் கதையின் திருப்பத்துக்கு வித்திட்டதோ, அதே போல் அசமுகியின் ஆணவப் பேச்சும், இந்திராணியிடம் அவள் ஆணவப் போக்கும் தான் கந்த புராணத்திலும் திருப்பத்துக்கு வித்திடுகிறது!

வீரபாகுவின் தூதும், அனுமனின் தூதும் ஒத்தே அமைகின்றன!
ஆசனம் தர மறுப்பது, அசுரனை விட உயரமான ஆசனம் கிடைப்பது, அத்தாணி மண்டபத்தை அழித்துவிட்டு தூதன் திரும்பி வருவது - இப்படிப் பல!

இராமயணப் பகுதிகள் சில இலங்கையில் நடப்பது போல், கந்தபுராணப் பகுதிகளும் இலங்கையில் நடக்கின்றன! திருச்செந்தூர் திரும்பி வந்து வீரபாகு தூதின் தோல்வியைச் சொன்னவுடன், முருகப் பெருமான் இலங்கை சென்று ஏமகூடத்தில் முகாம் அமைக்கிறான்!
அங்கிருந்து தான் வீரமகேந்திர புரியைத் தாக்குகிறார்கள்!

இராமயணத்திலும் இராவணன் கிளையோடு மாண்டான்! அவனுக்கு முன்னரே அனைவரும் மாண்டுவிடுகிறார்கள். கந்த புராணத்திலும் அப்படியே!

அழிவுகளைப் பார்த்த பின்னரும் கூட, செய்த தவறுக்கு வருந்துவோம் என்ற எண்ணம் இருவருக்குமே வரவில்லை!
மும்மலங்களுள் முதல் மலம் ஆணவம்! அது சூழ்ந்து கொள்வதால் கன்மம், மாயை இரண்டும் கூடவே சூழ்ந்து கொண்டு அழிவுக்கு வித்திடுகிறது! சிவபக்தி இருந்தும், மும்மலத்தால் பதியின் அருள் இல்லாமல் போகிறது!

இராவணன் மனைவி மண்டோதரியைப் போல சூரனின் மனைவியும் கற்புக்கரசி்யே!

சூரனை அழித்து மயிலும் சேவலுமாய் ஆட்கொண்டது போல, இராவணனும் மறுபடியும் வைகுண்டத்தில் ஜய விஜயனாக ஆகின்றான்!

சுரனைக் கொன்ற மனக்கேதம் தீர, முருகன் திருச்செந்தூரில் சிவபூசை செய்வது போல, இராவணனைக் கொன்ற இராமன், இராமேஸ்வரத்தில் சிவபூசை செய்கிறான்!

இப்போதைக்கு இவ்வளவு தான்! தத்துவத் தொடர்புகளும் இருக்கு! இன்னொரு நாளில் விரிவாச் சொல்லுறேன்!

6:45 PM  
Blogger சாத்வீகன் said...

விரிவான விளக்கத்திற்கு நன்றி கே.ஆர்.எஸ்.

மூடிக் கிடந்த பக்கங்களை மீண்டும் திறந்திருக்கிறேன்.

:)

11:53 AM  

Post a Comment

<< Home