சென்னையில் முருகன் கோவில்கள்
தமிழ்க்கடவுள் முருகன், பக்தர் மனதில் குடியிருக்கும் குமரன், செந்தமிழ் விளைந்த செந்தில் நாதன் சென்னையில் எங்கெல்லாம் இருக்கிறார்..
வடபழனி
சென்னையில் முருகன் என்றதும் யாவருக்கும் முதலில் நினைவில் வரக்கூடியவர் வடபழனி முருகனே. வடபழனி வீற்றிருக்கும் வடிவழகு. பக்தர் தமக்கு அருளும் தனிப்பாங்கு. மிகவும் பரபரப்பான கோவில் இது, எத்துணை சினிமா பெட்டிகள் இங்கு பூஜித்து எடுக்கப்பட்டிருக்கும். எத்தனை புது வண்டிகள் இங்கு பூஜை செய்யப்பட்டிருக்கும். ஒரு நல்ல முகூர்த்த நாளில் காலை கோவில் சென்றால் குறைந்தது ஐந்து திருமணங்களாவது இங்கு நிகழக்காணலாம். பிரகாரங்களில் ஆஞ்சனேயனும், அருணகிரியாரும் இக்கோவிலின் சிறப்பு.
பாலதண்டாயுதபாணி
தேனாம்பேட்டையில் எல்டாம்ஸ் ரோட்டில் அத்தனை பரபரப்புகளையும் தாண்டி அமைதி தவழ குடிகொண்டு இருக்கிறார், பால தண்டாயுத பாணி. கோவிலில் சிவனும், மரத்தடியில் பிள்ளையாரும் பாங்காய் இருக்க பக்தருக்கு அருள் பாலிக்கும் பாலதண்டாயுதபாணியை இங்கு காணலாம்.
கந்தகோட்டம்
சென்னையில் பூக்கடையில் சென்னை மருத்துவ கல்லூரியில் இருந்து சற்றே நடக்கக் கூடிய தொலைவில் இருக்கிறார் கந்தசாமி. மூர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது. கந்தன் இருக்குமிடம் கந்தகோட்டம் எனத்துவங்கும் கானா பாடலை திரைப்படத்தில் கேட்டிருப்பீர்கள். இத்தலம் சென்னையின் இதயப்பகுதியில் அமைந்து இங்கிருக்கும் வணிகர் தொழும் தெய்வமாய் உள்ளது.
சிங்காரவேலன்
மயிலையில் கயிலைநாதனும் கற்பகமுமே சிறப்பு என்றால், அருகிலேயே பிரகாரத்தில் இருக்கிறார் சிங்கார வேலன். ஆறுமுகனாக அருளும் பொருள். மயிலாப்பூர் கபாலி கோவிலில் கந்தன், சீர்மிகு சிங்கார வேலன். மயிலை அமர்ந்த மயில் வாகனன்.
குன்றத்தூர்
குன்றத்தூரில் குன்றில் இருக்கிறார் குமரன். நகரின் பரபரப்புகளை தாண்டி.
போரூரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தாண்டி. பல்லாவரத்தில் இருந்து பம்மல் வழியாகவும் செல்லலாம். அழகிய குன்று. படிகளில் ஏறியும் செல்லலாம். அல்லது வாகனத்தில் மலையில் ஏற இருக்கிறது ஓர் பாதை. ஏறிச்சென்றால் சென்னை முழுதையும் உயர்ந்த இடத்தில் அமர்ந்து தன் அருள்பார்வை பார்த்தவாறு இருக்கிறான் குன்றுதோறும் அமர்ந்து குன்றத்தூரிலும் அமர்ந்த இறைவன்.
அறுபடையப்பன் கோவில்
பெசன்ட் நகரில் கடலோரத்தில் அட்ட லட்சுமி கோவிலைதாண்டி சென்றால், கடல் புரத்திலேயே அமைந்திருக்கிறது அறுபடையப்பன் கோவில். ஆறு படைவீடுகளில் அமர்ந்த முருகனை ஒரே இடத்தில் காணக்கிடைக்கிறது. பழனி, பழமுதிர்ச்சோலை, திருத்தணிகை, திருச்செந்தூர், சுவாமிமலை, திருப்பரங்குன்றம் ஆகிய ஆறுதலங்களின் முருகனையும் ஒரே இடத்தில் காணக்கிடைத்தல் எத்துணை அருமை.
சோளிங்க நல்லூர்
பழைய மகாபலிபும் சாலையில் அந்த முகப்பு முருகன் கோவிலை கட்டியம் கூறி நம்மை வரவேற்கிறது. சற்று தொலைவு சென்றால் ஓர் அழகிய நந்தவனம். நந்தவனத்தில் நடுநாயகனாய் ஆள் அரவமற்ற ஓரிடத்தில் அமைதியின் ஓர் உருவாய் குமரன். பிரகாரத்தில் வீரபாகு, அனுமன், சப்தகன்னிகள். நிசப்தம் எங்கும், அமைதி,அமைதி மட்டும்.
வண்டுகளின் சத்தம் மட்டும் கேட்கும் ஓரிடத்தில் வடிவழகனை காணுதல் எத்துனை ரம்மியமாக இருக்கிறது.
குமரக்குன்று
குரோம்பேட்டையில் சிறிய குன்று, அதில் ஒய்யாரமாய் வீற்றிருக்கிறான் குமரன். எம்.ஐ.டி. கல்லூரி முகப்பிலிருந்து சற்று உள்ளே நடந்து செல்லும் தொலைவில் இருக்கிறது, இச்சிறு குன்று. குன்றின் கீழே அனுமன் மற்றும் பெருமாள் கோவில்கள். பிறகு குன்றின் கீழுள்ள விநாயகனை வணங்கி ஏற, பாதி படிகளை தாண்டியதும், சிவனும் சிந்தையில் நிறைந்த தேவியும். அத்தனை படிகளையும் தாண்டி சென்றால் பாங்குடனே பரிமளிக்கும் முருகன். அற்புதமான கோவில்.
சென்னையின் சுற்றுப்புறம் யாவும் செந்தில் நாதன் அமர்ந்து சென்னையை சிறப்பித்துக் கொண்டுள்ளமை, சொல்ல சொல்ல இனிமையன்றோ.
14 Comments:
//சொல்ல சொல்ல இனிமையன்றோ. //
சொல்லச் சொல்ல இனிக்குதடா.. முருகா..
சொல்லச் சொல்ல....
(என்ன இது! இன்னும் இராகவனைக் காணவில்லை?)
குன்றத்தூர் கோயிலில் முருகர், வள்ளி தெய்வானை சமேதரராக உள்ளார். ஆனால் மூன்று விக்கிரங்களையும் ஒருங்கே பார்க்க இயலாது. ஒரு புறமிருந்து பார்த்தால், முருகரையும் வள்ளியையும், மறுபுறமிருந்து பார்த்தால், முருகரையும், தெய்வானையயும் மட்டுமே பார்க்க இயலும்.
- சிமுலேஷ்ன்
நாமக்கல் சிபி
முருகனருள் கண்ட தங்கள் வருகைக்கு நன்றி..
சிமுலேஷன் அவர்களே வருக..
குன்றத்தூர் முருகன் கோவிலின் சிறப்பை தாங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி..
குன்றுதோறும் ஆடும் குமரனுக்கு சென்னையில் சிறப்புற அமைந்த குன்று குன்றத்தூரே....
சாத்வீகன்
அழகன் முருகன் சென்னையில் அழகாய் உறையும் தலங்கள் பற்றித் தந்தமைக்கு நன்றி!
//கந்தகோட்டம்
மூர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது//
உண்மை, உண்மை!
"சாதா" சென்னைக்கு, "தருமமிகு" சென்னை என்று பேர் வாங்கித் தந்த முருகன் ஆயிற்றே! இங்கே காணலாம் அந்த ஐயாவை!
http://madhavipanthal.blogspot.com/2006/10/blog-post_26.html
குரோம்பேட்டை குமரன் குன்றம், சுவாமிநாத சுவாமி! அப்படியே சுவாமி மலை போலவே அமைப்பு! நாள் எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!
நீங்கள் குன்றத்தூர் தூரம் வந்து விட்டதால், இன்னும் ரெண்டு மூணு முருகனைப் பற்றிச் சொல்லலீனா அடியேன் மனசே ஆறாது!:-))
திருப்போரூர் - இதுவும் கந்த கோட்டம் தான்
வல்லக்கோட்டை முருகன்
சிறுவாபுரி - வள்ளி மணக்கோல முருகன்
பாம்பன் சுவாமிகள் ஆசிரமம், திருவான்மியூர் - மயூர நாதப் பெருமான்! இது மிகவும் அமைதியான இடம். பாம்பன் சுவாமிகளின் சமாதியும் உள்ள தலம்.
நன்றி சாத்வீகன்!
சாத்வீகன்,
தகவல்களுக்கு மிக்க நன்றி. வரும் வருடம் முதல் முறையாகத் தமிழகம் வர எண்ணியுள்ளேன். இம் முருகன் ஆலயங்களுக்கெல்லாம் சென்று தரிசிக்கும் பேறு கிடைக்குதா பார்ப்போம்.
நன்றி.
நன்றி ரவிஷங்கர் கண்ணபிரான்,
இங்கு நான் தரிசித்த கோயில்களை மட்டுமே வழங்கியுள்ளேன்.
//திருப்போரூர் - இதுவும் கந்த கோட்டம் தான்
வல்லக்கோட்டை முருகன்
சிறுவாபுரி - வள்ளி மணக்கோல முருகன்
பாம்பன் சுவாமிகள் ஆசிரமம், திருவான்மியூர் // தலங்கள் நான் தரிசிக்க ஆவல் கொண்டுள்ள தலங்கள்..
தங்கள் மாதவிப்பந்தலில் சஷ்டி தினத்தன்றே தங்கள் கந்தகோட்ட முருகன் பற்றிய கட்டுரையை படித்து பரவசமடைந்தேன். சஷ்டி தினத்தன்று வடபழனி கோவிலில் நிகழும் சூரசம்ஹாரத்தை பார்க்க வேண்டுமே.. சூரன் ஒவ்வொரு உருவாய் மாறி வருதலும், கடைசியில் மாமரத்தை வேல், மயிலெனவும் சேவலெனவும் பிளத்தலுமாய்... அருமையாய் இருக்கும்.
வெற்றி
சென்னையில் இருக்கும் இத்தலங்கள் யாவையும் ஒரே நாளில் தரிசிக்கக் கூடிய வகையில் அருகருகே உள்ளவையே.
வருகைக்கு நன்றி.
சாத்வீகன்,
சென்னையில் தங்கியிருந்த கொஞ்சமே கொஞ்சம் நாட்களில் நீங்கள் சொல்லியிருக்கும் பெரும்பாலான முருகன் கோவில்களுக்குச் சென்று குமரக்கடவுளைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. வளசரவாக்கம் வேங்கடசுப்ரமணியர் திருக்கோவிலையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.
// நாமக்கல் சிபி said...
என்ன இது! இன்னும் இராகவனைக் காணவில்லை? //
வந்தேன். வந்தேன். இன்றே கண்டேன்.
சாத்வீகன்...சென்னையில் இன்னும் சில முருகன் கோயில்கள் இருக்கின்றன. அவைகளில் மிகச்சிறப்புடைத்தது திருப்போரூர் முருகன் கோயில். பழைய கோயில். மிகப் பழைய கோயில். பெரிய திருவுருவோடு தேய்ந்த பழங்காலச் சிற்பமானாலும் தேயாத அருளோடு காத்து நிற்கிறான் கந்தன். முருகனடியவர்கள் கண்டிப்பாகச் சென்று வரவேண்டிய கோயில். பழைய மகாபலிபுரச் சாலையில் அமைந்துள்ளது.
வடபழநி கோயிலை உருவாக்கியவர் ஒரு சித்தர். பெயர் நினைவில்லை. பழநி சென்று கொண்டு வந்த முருகனின் ஆண்டித் திருப்படத்தை வைத்து வழிபாடு செய்து வந்தார். அவர் அங்கேயே இறையடி சேர்ந்தார். அந்த இடமும் இன்றைய வடபழநி கோயில் வளாகத்துக்குள்ளேயே உள்ளது.
தேனாம்பேட்டை முருகன் சினிமா முருகன். தமிழ்சினிமாவில் பெரும்பாலும் தேனாம்பட்டை பாலதண்டாயுதபாணியைத்தான் காட்டுவார்கள். இல்லையென்றால் குன்றத்தூர் மலைப்படிகளைக் காட்டுவார்கள்.
வள்ளலாரும் கந்தகோட்டமும் பிரிக்க முடியுமா? கந்தகோட்டத் தலம் ஓங்கு கந்தவேளே!
அறுபடை முருகன் கோயிலும் அழகு. அந்தந்தக் கோயில் வடிவில் உள்ளன. அந்தந்தத் தலத்துத் திருப்புகழும் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் பழமுதிர்ச்சோலை என்ற பெயரில் வேலாயுதம் மட்டும் வைத்திருக்கிறார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை. பழமுதிர்ச்சோலையில் முருகன் கோயில் இருப்பதை மறந்தார்களோ!
இராகவன். அந்தக் காலத்தில் பழமுதிர்ச்சோலையில் வேல் மட்டுமே வழிபாட்டில் இருந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது காரணமாக இருக்குமோ?
இராகவன்
வடபழனி கோவிலின் தலவரலாறு கல்லில் செதுக்கப்பட்டு கோவிலின் சுற்று சுவரிலே பதிக்கப் பெற்றிருக்க காணலாம். அன்னாஸ்வாமி தம்பிரான் என்பவர் 125 ஆண்டுகளுக்கு முன் பழனி நடந்து சென்று கொணர்ந்த இறைவனின் மூர்த்தியே வழிபாட்டில் உள்ளது. கோவில் திருமுருக கிருபானந்தவாரியார் முதலிய பலராலும் ஆதரிக்கப்பட்டு தொடர்ந்து பணிகள் செய்யப்பட்டு இன்று கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கிறது.
குமரன்
நானும் பழமுதிர்ச்சோலையில் வேலே மூலவராய் வழிபாட்டில் இருந்தது என்று படித்துள்ளேன்.
// குமரன் (Kumaran) said...
இராகவன். அந்தக் காலத்தில் பழமுதிர்ச்சோலையில் வேல் மட்டுமே வழிபாட்டில் இருந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது காரணமாக இருக்குமோ? //
// சாத்வீகன் said...
இராகவன்
குமரன்
நானும் பழமுதிர்ச்சோலையில் வேலே மூலவராய் வழிபாட்டில் இருந்தது என்று படித்துள்ளேன். //
திருமுருகாற்றுப்படையைத் தடவிப் பார்க்கிறேன். குறிஞ்சிமலைக் கிழவோனை வேல் வடிவத்தில் வணங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கோயில் இருந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலும் பழமுதிர்ச்சோலை கோயில் வருகிறது. சிலம்பாறும் வருகிறது. ஆனால் அப்பொழுது "புண்ணிய சரவணம் பொருதுவீராயின்" அதாவது சரவணப் பொய்கையில் நீராடுவீராயின் நல்லது நடக்கும் என்று ஒருவர் சொல்கிறார். ஆனால் கவுந்தியடிகள் அதைத் தடுத்து சமணக் கருத்துகள் சொல்கிறார். ஆனால் பின்னாளில் கோவலன் இறந்து மதுரை எரிந்தபின்..அன்று தடுத்ததை எண்ணி மனம் நொந்து வடக்கிருந்து உயிர் துறக்கிறார்.
எனக்குத் தெரிந்து கதிர்காமத்தில் வேல் வணக்கம் உண்டு. கோயில்பட்டி கதிரேசன் கோயிலில் வேல் வணக்கம் உண்டு. வேறெங்கு என்று தெரியவில்லையே. உலக வரலாறு என்ன சொல்கிறதென்றால் வேல்தான் முதலில் கண்டுபிடிக்கப் பட்ட ஆயுதமாம்.
Post a Comment
<< Home