சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Sunday, November 12, 2006

சீதையை பெண் பார்த்த இராமன்

கம்பராமாயணம் கோலம் காண் படலம்

வில்லொடித்த பின், தசரதன் முதலானோர் சீதையை பெண்பார்க்க வந்ததை விவரிக்கும் படலம்.

அதன் அழகியலுக்காக எத்தனை முறை படித்தாலும் அலுக்காத படலம்.

பெண் பார்க்கும் படலத்தில் காபி கொடுத்துவிட்டு குனிந்த தலை நிமிராமல் செல்வதாய் தமிழ் படங்கள் சித்தரிக்கும் இடம்...

கம்பன் காட்டும் காட்சி வித்தியாசமானது...

சீதை அலங்கரிக்கப் படும் விதத்தை கம்பன் சொல்லும் இடம்..

உமிழ் சுடர்க் கலன்கள், நங்கை உருவினை மறைப்பது ஓரார்,
அமிழ்தினைச் சுவை செய்தென்ன, அழகினுக்கு அழகு செய்தார்


அமுதம் ஏற்கனவே இனிமை. அதில் யாராவது சர்க்கரை போடுவார்களா. நகைகள் போட்டு அழகிய சீதையை மேலும் அழகாக்கும் முயற்சி அது போன்றதே...


சீதையின் அழகை கண்டு தோழியர், மயங்கி நிற்றல்


"அழகு எலாம் ஒருங்கே கண்டால், யாவரே ஆற்றவல்லார்?"

"மொத்த அழகும் ஒன்று சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி" - வைரமுத்து

பிறகு சீதை மண்டபம் அடைகிறாள். சீதை மண்டபம் அடைதலும், வணங்குதலும்.. வசிட்டன், விசுவாமித்திரன் அவளை வியத்தலும் அடுத்தடுத்த கவிகளில் கம்பன் அடுக்குகிறான்.

விசுவாமித்திரனின் வியப்பு

அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான்;
பச்சை மலை ஒத்த படிவத்து, அடல் இராமன்,
நச்சுடை வடிக் கண் மலர் நங்கை இவள் என்றால்,
இச் சிலை கிடக்க; மலை ஏழையும் இறானோ?'

இச்சிலை போன்ற சிலை சீதை கிடைக்க இராமன் ஒரு வில்லென்ன, மலை ஏழையும் பொடியாக்க மாட்டானோ?


எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்,
மெய் விளைவு இடத்து, முதல் ஐயம் விடலுற்றாள்,
ஐயனை, அகத்து வடிவே அல, புறத்தும்,
கை வளை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள்


எல்லோரும் இருக்கும் சபை, சீதைக்கு இராமனை பார்க்க வேண்டும். வில்லை உடைத்த வீரன், அன்று தான் பார்த்த அதே வீரனா என ஐயம். எப்படி பார்ப்பாள் சீதை. வளையலை சரி செய்வது போல் கடைக் கண்ணால் பார்க்கிறாளாம்.

கம்பனின் கவிநயம் இங்கு அருமை. கவிதையாய் ஒரு பெண் பார்க்கும் படலத்தை நம் கண் முன் நிறுத்துகிறான்.

4 Comments:

Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

சாத்வீகன்

அருமையான வர்ணனை.
கொஞ்சு தமிழில் ஒரு பெண் பாக்கும் படலத்தை கண் முன்னே காட்டி இருக்கீங்க! நன்றி!

//'இச்சிலை போன்ற சிலை சீதை கிடைக்க இராமன் ஒரு வில்லென்ன, மலை ஏழையும் பொடியாக்க மாட்டானோ?//

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஒர்கடுகாம்
என்ற பாவேந்தர் பாடல் தான் நினைவுக்கு வருகிறது!

அப்படியே நம்ம வீட்டுப் பக்கமும் வந்து போங்க! மாதவிப்பந்தல், மற்றும் பிள்ளைத்தமிழ் பதிவுகள் ஓடிக்கொண்டுள்ளன!

2:35 PM  
Blogger ஜயராமன் said...

குமரன் ஐயா,

ஆகா, அற்புதம். மிகவும் சுவையாக நருக்கென்று வழங்கியிருக்கிறீர்கள்.

இந்து புராணங்களில் எங்கும் ஒரு இடத்திலும் குழந்தை மணம் இல்லை. பெரும்பாலும் காதல் கல்யாணங்கள்தான். அதிலும் இந்த சீதையின் காதை பலரும் வியக்கும் வண்ணம் மாலும், மாலதியும் சேருவதை எழிலோட்ட சொல்கிறது.

என் காலையை மலர்ப்பித்திருக்கிறீர்கள்

நன்றி

8:31 PM  
Blogger ஜயராமன் said...

மன்னிக்கவும்,

தங்கள் பெயர் சாத்வீகன் என்றிருப்பதை ஏதோ கவனத்தில் குமரன் என்று எழுதிவிட்டேன். என் அசட்டுத்தனத்தை நினைத்து சிரித்துக்கொண்டேன்.

நன்றி, சாத்வீகன்..

6:08 AM  
Blogger சாத்வீகன் said...

ஜயராமன், கண்ணபிரான் நன்றி.

கம்பனின் கவிநயத்தை என்றும் வியக்கலாம். அவ்வப்போது கம்பன் காட்டும் ராமனை இப்பக்கங்களில் வியக்கவுள்ளேன். தொடர்ந்து வருகை தரவும். நன்றி.

கண்ணபிரான் மாதவிப்பந்தல் இளைப்பாற நன்று. பிள்ளைத்தமிழும் சுப்ரபாதமும் இனிமை. இதம்.

6:24 PM  

Post a Comment

<< Home