சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Friday, December 01, 2006

நமது மண்ணின் தெய்வங்கள்

தெய்வங்கள் ஆயிரம் இங்குண்டு. மண்ணின் மகிமை சொல்லும் தெய்வங்கள் அதில் எத்தனையுண்டு...

முனீசுவரன், கருப்புசாமி, காத்தவராயன், ஐயனார், கன்னி சாமி...

இவை மக்களோடு இணைந்த தெய்வங்கள்.. கிராமங்களின் காவல் தெய்வங்கள்..

காலங்கள் மாறி கணினி மயமாகி போன பின்னும் வேல் கம்புடன் தன்னை தாண்டி செல்லும் கேபிள் கம்பிகளையும், தார் சாலைகளையும், மின்சார கம்பிகளையும் கண்டபடி அமைதியாகவும் கம்பீரமாகவும் நிற்கும் இக்கடவுளரை கிராமம் தோறும் காணலாம்.

பெரும்பாலும் ஊரின் எல்லையிலேயே நிற்கும் தெய்வங்கள் இவை..

மண்ணின் மணம் கமழ வரும் மாரியம்மனும் அவ்வண்ணமே...

மாரி யாவது மழை... மழை வேண்டி குடியானவர்கள் தொழும் கொற்றவையாக மக்கள் தெய்வமாக உயர்ந்து நிற்பவள் மாரி...

அமைதியான ஊர்..

ஊரோடு அருகிருக்கும் ஏரி...

ஏரியின் மதகுகளை தாண்டி சென்றால் ஆளரவமற்ற வேலிகாத்தான் முட் செடிகள்...

அழகாய் வீற்றிருக்கிறாள் அந்த அம்மன்..

பெயர் நடவாழி அம்மன்..
அன்பு ததும்பும் முகம்...
கருணை சொரியும் கண்கள்...
கிராமத்து மக்களின் காவல் தெய்வமவள்..

நடவாழி அம்மன் என்று பெயர்..
செல்லும் வழிக்கு துணை வரும் தெய்வம்...



ஊர் சத்தமும் உலக்கை சத்தமும் கேட்காத தொலைவில் அமர்ந்து ஊரை காப்பவள்...

உலக்கைகள் ஒழிந்த கிரைண்டர் காலத்திலும் கிரைண்டர் சத்தம் கேளாத் தொலைவிலேய இருக்கும் தாய்...

எத்துணை மக்கள் தொழுகிறார்கள் அவளை...

அது விழாக்காலம்... வருடம் ஒரு முறை ஊர் கூடி பொங்கல் வைக்கிறது அத் தெய்வத்திற்கு...

திருவிழாக்கோலம் எங்கும்... திருவிழாவின் கடைகள்... குச்சி ஐஸ், மண்ணில் செய்த சொப்புகள், பலூன்காரர்கள், வளையல்காரர்கள், பிளாஸ்டிக் பொம்மைகள், மண்ணில் செய்த கடவுளர் பொம்மைகள், சிறிய தள்ளிச் செல்லக் கூடிய ரங்க ராட்டினம், சத்தமிட்டமிட்ட இங்கும் அங்கும் ஓடும் சிறுவர்கள், அவர்களை விரட்டி பிடிக்க முடியாமல் பெரிய மூங்கில் கூடைகளில் படையலுக்கு வேண்டியதை கொண்டு வரும் பெண்கள்...

ஏற்கனவே வந்து மண்ணில் எருமட்டைகளை பரத்தி பத்த வைத்து அதில் பாத்திரங்களை வைத்து சோறு பொங்கும் பெண்கள்...

அரிசி குக்கர்களிலேயே சோறு வைத்து உண்ட நமக்கு பொங்க சோறு தேவாமிர்தம்...

அம்மனை தரிசித்து வலம் வர அட்ட லட்சுமிகளும் அருகில், நவகோள்களும் நம்மையும் சுற்று என அழைக்க சுற்றி விட்டு வெளியேறினால், வெளிபிரகாரத்தில் நிற்கிறாள் துர்க்கை...

சற்றே தள்ளி வர அரச மரமும் அதனடியில் மேடையும், கற்களை குடைந்து அழகாக வடிக்கப்பட்ட நாக சர்ப்ங்களும்... நாக தேவதைகளை ஒரு சுற்றி வந்தால்..

ஓரமாய் இருந்து ஒய்யாரமாய் அழைக்கிறார் முனீஸ்வரர்... முன்னால் மக்களிட்ட படையல்கள்... வாழை, பொரி, சுருட்டு....

தாண்டி வர தனியாய் இருக்கிறது துளசி மாடம்...

தள்ளி சற்று தொலைவில் புற்றுக்கோவில், பால் ஊற்ற வைக்கப்பட்ட மண் வட்டு, உடைத்து ஊற்றப்பட்ட முட்டைகள்...

கடந்து வந்தால் இருக்கிறது கன்னி சாமி. கன்னி சாமி என்பது பொம்மைகள், மண்ணால் செய்யப்பட்டவை, ஒன்று அல்ல பல பொம்மைகள் அருகருகில், ஓரடிக்கும் மிகாமல்...

ஒரு சில ஒடிந்து...
"கன்னி சாமின்னா அப்படிதான்... புதுசா செஞ்சு வச்சாலும் இந்த கன்னிங்க அதுங்களுக்குள்ளயே சண்ட போட்டுக்கும்.. அப்புறம் ஒடஞ்சு போயிடும்..".
"சரி பெரியவரே."

"கன்னி சாமிக்கு புடிச்சதும் சுருட்டுதான்... இந்த கன்னிங்க இங்க இருக்கின்ற மக்களின் குல தெய்வம்... கன்னிய கும்பிடறவங்களுக்கு கறுப்பு கிடையாது.. அதாவது கறுப்பு கயிறு கட்ட கூடாது.."

"அப்படிங்களா."
"ரொம்ப நன்றி. சரி வர்றங்க"

அப்பாடா எல்லா சாமியும் கும்பிட்டுட்டடோம் அப்படின்னு வெளிய வந்தா...

ஒரு சாமி என்ன கண்டுக்கவே இல்லையே அப்படின்னு முறைச்சு பார்த்த மாதிரி இருந்தது...

அடடா.. பிள்ளையாரப்பா.. இந்த மக்கள் வெள்ளத்தில் உங்களை, முழுமுதற் பொருளை கண்டு கொள்ளாமலேயே உள்ளே போய் விட்டேனா என்ன.. கூரை வேண்டாம்.. கோபுரம் வேண்டாம்.. ஒரு அரச மரத்தடி போதும் என்று அமர்ந்த அண்ணலே... இதோ என் தோப்புகரணங்கள் உனக்கு சமர்ப்பணம்..

சென்று வருகிறேன் பிள்ளையாரே, மீண்டும் அடுத்த திருவிழாவன்று திரும்பி வருகிறேன்...

12 Comments:

Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

சாத்வீகன்
கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் வச்சு எந்த ஊர் அம்மன் என்று சொல்லவே இல்லையே!

நடவாழி அம்மன், முனீஸ்வரர் (பால் முனி, செம்முனி என்றெல்லாம் பல முனீஸ்வரர்கள்), சப்த கன்னியர், பதினெட்டாம் படிக் கருப்புசாமி (கள்ளழகரின் காவல் தெய்வம்), ஐயனார், பொன்னியம்மன், கங்கையம்மன், பேச்சியம்மன், எல்லையம்மன் என்று நம் மக்களின் தெய்வங்களும் எவ்வளவு எளிமையானவை!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்!
அய்யன் வள்ளுவன் வாக்கை, அப்படியே நடைமுறைப்படுத்தியவர்கள் நம் கிராம மக்கள்!

10:02 AM  
Blogger சாத்வீகன் said...

சஸ்பென்ஸ் ஏதுமில்லை KRS

மண்ணின் தெய்வங்கள் அந்த மண்ணின் மைந்தர்களை தவிர மற்றவரால் அறியப்படாதவை..

இங்கே நான் எழுதியிருக்கும் நடவாழியம்மன் வேலூர் மாவட்டம் தொரப்பாடி கிராமத்தில் அமைந்த அம்மன்.

நன்றிகளுடன்
சாத்வீகன்

1:13 PM  
Blogger வெற்றி said...

சாத்வீகன்,
உண்மை. அருமையான பதிவு. ஈழத்தில் எனது ஊர் மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்று. தமிழகத்தில் இருந்து தமிழர்கள் ஈழத்தில் குடியேறத் தொடங்கிய போது எனது ஊரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் தான் முதல் குடியேற்றங்களை அமைத்தனர். அப்படி அமைத்த அவ்வூர்களில் காவல் தெய்வங்களாக வைரவர், அம்மன் , ஐயனார், முனியப்பன் ஆகிய தெய்வங்களுக்கு ஊர்களின் பல பகுதிகளிலும் கோயிலமைத்து[சின்ன கொட்டில் ] வழிபட்டதற்குச் சான்றுகள் உண்டு. இன்றும் எமது ஊரில் இந்த சின்ன கொட்டில் கோயில்கள் உள்ளன. காஞ்சியில்[எனது மூதாதைகளும் இங்கிருந்தே வந்ததாக எனது பாட்டனார் கூறூவார்கள்] இருந்து வந்தவர்கள் அமைத்த வைரவர் கோயில் காஞ்சி வைரவர் எனவும் , மாவடி வைரவர் என இப்படி எம் முன்னவர்கள் அமைத்த ஐயனார் கோவில், முனியப்பர் கோவில் அம்மன் கோவில்கள் வைரவர் கோவில்கள் இன்றும் என் ஊரில் இருக்கிறது. நீங்கள் சொன்னது போல் இவ் ஆலயங்கள் எமது பண்டைய வழிபாட்டு முறைகளை மட்டுமல்ல எம் முன்னோர்கள் வாழ்ந்த முறைகளையும் இயம்பி நிற்கிறது. உண்மையில் இவ் ஆலயங்கள் எமது மண்ணின் மகிமை சொல்பவை தாம்.

நன்றி.

3:32 PM  
Blogger குமரன் (Kumaran) said...

நடவாழி அம்மனைத் தரிசிக்க எங்களையும் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி சாத்வீகன்.

5:12 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி வெற்றி

இப்பதிவு தங்கள் நினைவலைகளை மீட்டு எடுத்திருப்பதால் மகிழ்கிறேன்.
தமிழர் தாம் செல்லும் இடம் தோறும் தம் கடவுளரையும் தம்மோடே எடுத்து செல்லுதலை அழகாக இங்கு சுட்டினீர்கள். அத்துணை தூரம் வாழ்வியலோடு இணைந்த எளிய தெய்வங்கள் அவை..

நன்றி.

6:12 PM  
Blogger சாத்வீகன் said...

வருகைக்கு நன்றி குமரன்.

6:13 PM  
Blogger ஓகை said...

பதிவுக்கு நன்றி சாத்வீகன். சிறு தெய்வ வழிபாடுகள் ஊருக்கு ஊர் வேறுபட்டாலும் பல வகையில் ஒற்றுமை உடையவை. கிடா வெட்டைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். ஊர்மக்கள் வயிராற அசைவ உணவு உண்ண இத்திருவிழாக்கள் வழி செய்கிறது.

8:42 PM  
Blogger சாத்வீகன் said...

ஓகை வருகைக்கு நன்றி

//ஊர்மக்கள் வயிராற அசைவ உணவு உண்ண இத்திருவிழாக்கள் வழி செய்கிறது.//

மக்கள் தாங்கள் உண்ணும் உணவையே தெய்வங்களுக்கு படைக்கின்றனர். அதுவே தெய்வங்களையும் அவர்களையும் நெருங்கி வரச்செய்கிறது.

வேடன் கண்ணப்பன் கதையில் கண்ணப்பன் காட்டுபன்றி இறைச்சியை படைத்து இறைவன் அன்பின் அமைந்தது என்று அதை ஏற்கவில்லையா..

தாங்கள் அளிக்கும் ஊன் உணவையும், சாராயம், சுருட்டையும் தங்கள் காவல் தெய்வங்கள் ஏற்கின்றன என்ற மக்கள் நம்பிக்கையே இதற்கு ஆதாரம்.

9:55 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

அட,தொரப்பாடியா நீங்க!
நமக்கு ஆரணி பக்கத்துல வாழைப்பந்தல்-ங்க!
பல முறை வாலாஜா, ராணிப்பேட்டை வழியா பேருந்தில் வருவது உண்டு!
வேலூர் பாகாயம் ரோட்டில் தெரிஞ்ச மக்கள் இருக்காங்கப்பா!

10:14 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சாத்வீகன்!
வெற்றி கூறியதுபோல்; எங்கள் ஈழத்திலும் இச் சிறு தெய்வ வழிபாடு இருக்கிறது. வைரவர்;ஐயனார்;மாரி அம்மனுடன்; கண்ணகை அம்மன் வழிபாடும் இருந்தது. இச்சிறு வழிபாட்டு முறை கால ஓட்டத்தில்; ஐயரை வைத்துப் பூசை செய்யும் நிலைக்கு பல கோவில்கள் மாறியது.
முக்கியமாக யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர்....சிறு தெய்வ வழிபாட்டில் தொடங்கி இப்போ!!!கோவிலாகி;முறையான ஆகமப் பூசை வழிபாடு நடக்கிறது.
ஈழத்தில் கொக்குவில் தலையாளி வைரவர் கோவில் மிகப் பெரிய கட்டுமானங்களையுடையது எனும் சிறப்புடையது.நித்திய ஆகம பூசை வழிபாடு நடப்பது.
நல்ல விடயங்கள் அடங்கிய பதிவு;தொடரவும்.
யோகன் பாரிஸ்

4:46 AM  
Blogger ரவி said...

சிறப்பாக பதிவு செய்து நேட்டிவிட்டிக்கு ஒரு சாத்வீகன் என்று நிரூபித்திட்டீங்க...

7:11 AM  
Blogger சாத்வீகன் said...

ரவிஷங்கர் கண்ணபிரான்,

நமது வட ஆற்காடு மாவட்டம்தானா நீங்களும். வாழப்பந்தல் வந்ததில்லையே தவிர நிரம்ப கேள்விப்பட்டிருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி..

7:44 AM  

Post a Comment

<< Home