தீபத் திருநாள். கிராமத்து கதையொன்று
கிராமங்களில் கார்த்திகை...
கார்த்திகை திருநாள் தீபங்களின் திருநாள்.
இருளை விளக்கி அருளை பெருக்கும் ஒரு நாள்.
கார்த்திகை செல்வன் கந்தனையும், அடிமுடி காணா அண்ணாமலை தீபத்தையும் இந்நாள் தொழுதல் சிறப்பு.
கிராமங்களில் வீடு தோறும் ஏற்றி வைக்கப்பட்ட விளக்குகள் கார்த்திகையின் புகழை சொல்லாமல் சொல்லும்.
அழகான அகல் விளக்குகள். மண்ணால் செய்து சுட்ட விளக்குகள்.
அவரை இலையையோ அல்லது வேறு அகன்ற இலைகளையோ கொய்து, அவற்றின் மீது சாண உருண்டையை திரட்டி வைத்து, அதன் மீத அகல் விளக்கினை பொருத்தி, எண்ணையும் திரியும் இட்டால் தீபம் தயார். வீட்டின் வாசலிலும், மாடங்களிலும் விளக்குகளை பொருந்தவே வைத்து அந்தி சாயும் நேரத்தில் இவ்விளக்குகளை கிராமங்களில் மக்கள் ஏற்றி வைப்பதை காணலாம்.
கார்த்திகை தீபம் என்றால் சுற்றப்படும் மாவலிகள் மனதில் முதலில் வரும். சிறுவர்கள் பனம் பூவையும், கரியையும், உப்பையும் மூன்றையும் தீப்பிடிக்க தக்கவகையில் துணி மூட்டையாக்கி அதை எருக்கம் குச்சிகளை மூன்றாக எடுத்து அதனிடையே வைத்து கட்டி மாவலியாக்குவர். இதனை நெருப்பேற்றி தலைக்கு மேல் சுற்ற பொறி பறக்கும். தொடர்ந்து சுற்ற பொறி பறந்து ஒரு நெருப்பு வட்டமாய் காட்சி தரும். நான்கைந்து சிறுவர்கள் ஒரே நேரத்தில் மாவலி சுற்ற பார்க்க கன ஜோராய் இருக்கும்.
கார்த்திகை விளக்குகள் சகல செல்வத்தையும் நமக்கு கொண்டு வருவதாக ஐதீகம்.
செல்வத்திருமகள் இலக்குமி இல்லந்தோறும் வரும் நாள் இந்நாள். அவளை வரவேற்கும் முகமாய் விளக்குகள் ஒளிருகின்றன.
இங்கே ஒரு சின்ன கதை கிராமத்து வழக்கிலேயே...
ஒரு ஊருல ஒரு பெரிய ராசா இருந்தாரு.
அவரு ஒரு தடவ காட்டுக்கு வேட்டையாட போகும் போது பரிவாரத்தை விட்டு தனியா போயிட்டாரு...
ராசாக்கு நல்ல தாகம்..
தண்ணி, தண்ணின்னு தேடறாரு..
எங்கியும் கிட்டல.. கொஞ்சம் தலசுத்தலா போயிருச்சு ராசாவுக்கு.
அப்ப அந்த பக்கமா காட்டுல தேன் எடுக்க போன பொண்ணு ஒருத்தி இராசாவ பார்த்தா..
கையில இருந்த தேனை இராசாவுக்கு குடுக்கவும் இராசாவுக்கு உயிர் வந்தது.
"ஏய்.. பொண்ணு நீ எனக்கு உசுரை கொடுத்து இருக்க. என்ன வேணும் கேளு"ன்னாரு ராசா..அந்த பொண்ணு யோசிச்சா.. ராசாகிட்ட என்ன கேக்கறது.. பொண்ணும் மணியும் கேட்டா என்ன மாதிரி கிராத்து பொண்ணு அத எங்க பத்திரப்படுத்திரது...யோசிச்ச அந்த பொண்ணு "ராசா. இந்த தீபத்துக்கு யாரும் தீபம் ஏத்த கூடாது நான் மட்டுந்தான் ஏத்தலாம்னு உத்தரவு போடுங்க" அப்படின்னு கேட்டுக்கிட்டா..ராசாவும் இன்னாடா இது புது வகையான கோரிக்கையா இருக்குதேன்னுட்டு சரி சொல்லி அப்படியே ஒரு உத்தரவா போட்டாரு.
தீபமும் வந்திடுச்சி. ராசா போட்ட உத்தரவால ஊரே இருண்டு கிடக்கு, அரண்மணயோட சேத்துதான். ஊரோட மூலயில ஒரு ஓல குடிசையில மட்டும் அகல் விளக்குங்க எரியுது. ராசாவோடா மேய்ச்சலுக்கு போன பசுமாடுங்க சாயங்காலம் ஆனதும் வீடு திரும்புது. வெளிச்சமா இருக்கிற இடம்தான் அரண்மனைன்னு நினைச்சி மாடுங்க எல்லாம் அந்த பொண்ணோட வீட்டுக்கு போயிடுச்சி.. அந்த கால வழக்கப்படி விளக்கு வச்சதும் மாடுங்க எந்த வீட்டுக்கு போகுதோ அவங்களுக்குதான் அந்த மாடுங்கள்லாம் சொந்தம். அத்தினி மாடுங்களும் அந்த பொண்ணுக்கு சொந்தமாயிடுச்சி.. அந்த பொண்ணு அந்த ஊருலயே பெரிய பணக்காரியாயிட்டா.. அதுக்கப்புறம் பெரிய இடத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாம் ஜாம்னு இருந்தாளாம் அந்த பொண்ணு.
இந்த கதை கார்த்திகை தீபத்தை பற்றி மக்களிடம் வழங்கிய கதை. நான் சிறுவயதில் கேட்டது. கதை சொல்லிகள் இன்று இல்லாததால் காற்றோடு மறைந்து கிட்டத்தட்ட மறைந்து விட்ட கதை...
அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
13 Comments:
புத்திசாலிப் பெண்!
நல்ல கதை!
இதுவரை கேள்விப்படாத கதை சாத்வீகன். மிக நன்றாக இருக்கிறது.
மாடு என்பதற்கே செல்வம் என்பதே பழந்தமிழ் பொருள் என்பதனைப் பற்றி 'சொல் ஒரு சொல்' வலைப்பூவில் இராகவன் ஒரு பதிவு முன்பு இட்டிருந்தார். முடிந்தால் பாருங்கள்.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை இன்று சிதைந்து போய் - அனைத்தும் மைக்ரோ குடும்பங்களாகி விட்டன.அதானால் கதை சொல்லப் பெரியவ்ர்கள் யாரும் இல்லை.
அதோடு இப்பொழுது இருக்கும் பெரியவர்களையும் தொலக்காட்சித் தொடர்கள் அமுக்கிப் பிடித்குக் கொண்டிருக்கின்றன்.
இதைக் கலி முற்றிக் கொண்டிருக்கின்ற கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!
கூட்டுக்குடும்ப வாழ்க்கை இன்று சிதைந்து போய் - அனைத்தும் மைக்ரோ குடும்பங்களாகி விட்டன.அதானால் கதை சொல்லப் பெரியவ்ர்கள் யாரும் இல்லை.
அதோடு இப்பொழுது இருக்கும் பெரியவர்களையும் தொலக்காட்சித் தொடர்கள் அமுக்கிப் பிடித்குக் கொண்டிருக்கின்றன்.
இதைக் கலி முற்றிக் கொண்டிருக்கின்ற கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்!
ஹைய்யா....மாவலி சுத்தினது ஞாபகம் வந்துடிச்சி! மிக்க நன்றி சாத்வீகன்; அதிலும் இந்த பனம்பூவுடன் கட்டிச் சாம்பிராணி வச்சு சுத்துவோம்; தீப்பொறியோடு, புகையும் சேத்து பாக்கவே சூப்பரா இருக்கும்!
இனி சுட்டிப் பொண்ணு மாட்டை எல்லாம் பாதுகாப்பா வச்சிக்கலாம், கிராமத்துல!
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை!
குமரன் சொன்னாப் போல சொல் ஒரு சொல் பக்கம் வந்து பாருங்க!
சாத்வீகன் கதை புதுசா இருக்கு, ஆனா நல்ல கதை சிறுவர் பூங்கா பரஞ்சோதிக்கிட்ட சொல்லி இதை அங்க போட சொல்லவேண்டியது தான்.
கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்
சாத்வீகன்,
நல்ல கிராமிய மணம் வீசும் பல படைப்புக்களைத் தொடர்ந்து தந்து மகிழ்வித்துக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. எனது ஊரில் கார்த்திகைத் தீப நாளை கார்த்திகை விளக்கீடு என்றுதான் சொல்வார்கள். எனது ஊர் ஓர் கடலோரக் கிராமம். கார்த்திகை விளக்கீடு நாளில் கடற்கரைக்குச் சென்று பெரிய அகண்ட சிப்பிகள் எடுத்து வந்து அச் சிப்பிகளில் எண்ணை விட்டு திரியும் வைத்து வீட்டின் பல பகுதிகளில் தீபமாக வைப்போம். குறிப்பாக சாமி அறை, அம்மி , மாட்டுக் கொட்டில் , மற்றும் வீட்டின் அறைகள் எல்லாவற்றிலும் வைப்போம். அத்துடன் வீட்டு வளவுக்குள் இருக்கும் பனம்பாத்தி போன்ற இடங்களில் கிழுவை மரம் எனும் மரத்தில் வெட்டப்பட்ட தடித் துண்டுகளில் வெள்ளைச் சேலை கட்டி எண்ணையில் தோய்த்து நனைத்து கொளுத்தி வைப்போம். அத் தடியையோ அல்லது சிப்பித் தீபங்களையோ குறிப்பிட்ட இடத்தில் வைக்க எடுத்துச் செல்லும் போது கார்த்திகை விளக்கீட்டுப் பாட்டுடன்தான் எடுத்துச் செல்வோம்.
அப்பாட்டு இதுதான்:
மாவிலி மாவிலி
மாட்டையும் கண்டையும்
வீட்டையும் பொருளையும்
காத்துக்கொள்
அடுத்தது, இப் பாட்டை தேவைக்கேற்ற படி மாற்றிப் படிப்போம். எடுத்துக்காட்டாக மாடுகள் கட்டும் கொட்டிலுக்குத் தீபம் எடுத்துச் செல்லும் போது,
மாவிலி மாவிலி
மாட்டையும் கண்டையும்
வீட்டையும் பொருளையும்
மாட்டுக் கொட்டிலையும்
காத்துக் கொள்
அதிலும் பாருங்கள், இப்படிப் பாட்டுகளெல்லாம் பாடி விளக்கேற்றும் முறை ஈழத்தில் உள்ள எல்லா இடத்திலும் புழக்கத்தில் இல்லை. எனது ஊர் மிகவும் பழமை வாய்ந்த படியினால் இம் முறை அங்கு அக்காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இத் தகவல்கள் எனது மாமா கூறியது. நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். கிராமியப் பதிவுகள் என்றால் நிறைய எழுத வந்துவிடுகிறது.
நீங்கள் சொல்லியுள்ள கதையும் அருமை. இது வரை கேள்விப்படாதது.
நன்றி.
வருக எஸ்.கே. அவர்களே
தங்கள் வரவிற்கு நன்றி.
வாருங்கள் குமரன்
மாடு என்பதற்கு செல்வம் என்ற பொருளை கொண்டு, அக்கோணத்தில் இக்கதையை யோசித்துப் பார்க்கவும்.
தீபங்களின் நாளில் செல்வம் வீட்டில் நிறைய வேண்டும், தங்கள் வீட்டில் இலக்குமி நுழைய வேண்டுமென்றே இல்லந்தோறும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.
நன்றி.
சுப்பையா அவர்களே தங்கள் வருகைக்கு நன்றி.
//கூட்டுக்குடும்ப வாழ்க்கை இன்று சிதைந்து போய் - அனைத்தும் மைக்ரோ குடும்பங்களாகி விட்டன.அதானால் கதை சொல்லப் பெரியவ்ர்கள் யாரும் இல்லை. //
ஆம், அவசரங்கள் நிறைந்த இவ்வுலகில் குழந்தைகளுக்கு கதை சொல்வார் யாரும் இல்லை. இத்தீபத்தினத்தில் மாவலி சுற்றும் சிறுவர்கள் குறைந்து வருவதும் கண்கூடு.
நமது அடுத்த தலைமுறைக்கு நமது பண்பாட்டை எடுத்து செல்ல வேண்டியதின் கடமையை நாம் உணரவேண்டும்.
வாருங்கள் கே.ஆர்.எஸ்.
மாடு எனப்பொருள் தரும் வள்ளுவன் குறளை தாங்கள் இங்கு தந்தமைக்கு நன்றி.
சிறு வயதில் நன்றாகவே மாவலி சுற்றுவீர்கள் போலும். தீப திருநாளன்று மாவலி சுற்றும் சிறார்களை பார்த்தே பல தீபதினங்கள் சென்றுவிட்டன...
வாருங்கள் குறும்பன்
கதையை சிலாகித்தமைக்கு நன்றி.
இது நான் சிறுவனாக என் பாட்டியிடம் கேட்ட கதை.
நன்றி.
வாருங்கள் வெற்றி
தங்கள் கார்த்திகை அனுபவங்களையும், கொண்டாடும் முறையையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
சிப்பிகளில் ஏற்றப்படும் விளக்குகள்.
கார்த்திகை தீப விளக்குகளும் அந்த அந்த இடத்தின் பொருளை குறிக்கும் போலும். நான் சொன்னாற் போல் அவரை இலை, அவரை கொடி உள்ள இடங்களிலும், நீங்கள் சொன்னாற் போல் சிப்பி விளக்குகள் கடற்புரத்திலும்.
விளக்கை இடுவதே விளக்கீடு.
தங்கள் விளக்கீட்டுப் பாடல் நன்று. நான் இதுவரை அறியாதது.
தங்களுக்கு என் நன்றிகள்.
Post a Comment
<< Home