சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Wednesday, November 29, 2006

புலால் மறுத்த இராமன்


கம்பன் காட்டும் குகப்படலம்.
இராமன் நாடு நீங்கி காடு போகிறான். கடக்க ஒரு கங்கை இருக்கிறது. கங்கைக் கரையின் தலைவனாம் குகன் இராமனை காண வருகிறான்...

வரும் குகன் இராமனை காண வெறுங்கையோடு வரவில்லை. உண்ண உணவு கொணருகிறான்.


'இருத்தி ஈண்டு' என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த
அருத்தியன், 'தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்?' என்ன, வீரன்
விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்:


அமரச் சொல்லி இராமன் சொல்லியும் குகன் அமரவில்லை. மற்று தான் கொணர்ந்த தேனும் மீனும் ஏற்க சொல்லி வேண்டுகிறான்.


'அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?' என்றான்.


"உள்ளத்தில் அமைந்த அன்பால் நீ கொணர்ந்த இப்பொருட்கள் அமுதத்தை ஒத்தவை. இவை எனக்கு விலக்கத்தக்கவை ஆயினும் உனது அன்பினால் கொணர்ந்தமையால் இவை புனிதமானவை. எனக்கு ஏற்புடையதே. நான் இதனை உண்டவன் ஆகினேன்."

எனக்கூறி இராமன் அதனை விலக்குகிறான். இராமன் சத்திரியன். அவனுக்கு புலால் ஏற்புடையது. ஆயினும் விலக்குகிறான்.

வள்ளுவன் எழுதிய புலால் மறுத்தலுக்கு இங்கு இராமனே ஓர் உதாரணமாய் உயர்ந்து நிற்கிறான்.


தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.


தனது மாமிசப்பெருக்குக்காக பிற உயிர்களின் மாமிசம் உண்பவனிடம் அருள் இருக்குமோ..

இராமன் அருளின் மறுவடிவம்... மாமிசம் அவன் ஏற்கத்தக்கதோ...இராமனின் புலால் மறுத்தல் குகனை மாற்றுகிறது. மற்றோரிடத்தில் குகன் சொல்கிறான்...

'தேன் உள; திணை உண்டால்; தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன் உள; துணை நாயேம் உயிர் உள; விளையாடக்
கான் உள; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ?
நான் உளதனையும் நீ இனிது இரு; நட, எம்பால்;

"தேவரீர், தாங்கள் உண்ண தேனும், திணையும் உள்ளது. நான் உயிர் வாழ ஊன் உள்ளது. விளையாட காடும் நீராட கங்கையும் உள்ளது. நான் உள்ளவரை இங்கிருப்பாய்... " என்கிறான் குகன். ஊன் நீக்கி இராமன் கொள்வதற்காக திணையை கொணர்கிறான்.


இராமனும் குகனின் அன்பை ஏற்று, குகனையும் தனது சகோதரனாய் பாவித்து குகனோடு ஐவரானோம் என்று சொல்லி தந்தை சொல் நின்று கானகம் ஏகுகிறான்.


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்


வள்ளுவன் வாக்குக்கு இணங்க புலால் நீக்கிய இராமனை எல்லா உயிர்களும் தொழுகின்றன.




Saturday, November 18, 2006

கேசினோ ராயல் - ஜேம்ஸ்பாண்டு 007


கேசினோ ராயல்

டேனியல் கிரெய்க் நடித்தது.

நவம்பர் 17ம் தேதிமுதல் திரையிரங்குகளில்.. அடுத்த நாளே பார்த்தாயிற்று.. அதைப்பற்றி வலை பதியாவிட்டால் நன்றாக இருக்குமா...

பியர்ஸ் பிராஸ்னனையே தொடர்ந்து ஜேம்ஸாக பார்த்ததனால், போட்டோக்களில் டேனியல் கிரெய்க்கை ஜேம்ஸ்பாண்டாக ஏற்பது கடினமாக இருந்தது..

ஆனால் திரையில் மனிதர் பின்னுகிறார்...
நடிப்பு அபாரம்...

பிராஸ்னன் படங்கள் யாவிலும் ஜேம்ஸ்பாண்டை விடவும் அவரது உபகரணங்கள், பிரம்மாண்டமான கதை வலுவாக இருக்கும்.

இந்த படம் முற்றிலும் மாறாக இருந்தது.

ஐயான் பிளம்மிங்கின் மூல நூலான கேசினோ ராயலையே தழுவி எடுக்கப்பட்ட படம்..

ஜேம்ஸ் பாண்டு படங்களை அதன் பிரம்மாண்டம், துரத்தல் காட்சிகளுக்காகவே பார்ப்பவர் நீங்கள் என்றால் இந்தப் படம் உங்களுக்கானதல்ல...

கதையின் துவக்கத்தில் ஜேம்ஸ்பாண்டு கொலை செய்து 00 அந்தஸ்தை பெறுகிறார். படத்தின் பெயர்பட்டியல் ஓட துவங்குகிறது படம்..

எடுத்த எடுப்பில் மடகஸ்கரில் வில்லனின் அடியாளைத்துரத்தும் ஜேம்ஸ்.. கிரேனில் ஏறி ஓடும் காட்சிகள், தாவி ஓடும் வில்லனின் அடியாள்... வாவ் அபாரம்..

பிறகு ஜேம்ஸ் தொடர்ந்து வில்லனின் மற்றொரு அடியாள் டிமிட்ரியாஸின் நடவடிக்கைகளை கவனிக்கிறார்.. டிமிட்ரியாசின் நடவடிக்கைகளை அவன் மனைவி மூலம் அறிகிறார். (ஜேம்ஸ் எவ்வாறு அதை அறிவார் என்பது அனைவரும் அறிந்ததே)

டிமிட்ரியாஸை தீர்த்து கட்டும் ஜேம்ஸ் பிறகு ஒரு விமானத்தகர்ப்பை சாகசங்கள் செய்து தடுத்து நிறுத்துகிறார்.

இதன் பின்னால் இருக்கும் வில்லன் யார். யார் இதையெல்லாம் செய்கிறார்கள்...

லே சிஃப் (வில்லன்) சர்வதேச பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்து வாங்குபவன். அவனுடைய பணம் சேர்க்கும் திட்டமே இது என தெரிய வருகிறது..

கடும் பணப்பற்றாக்குறையில் இருக்கிறான் லே சிஃப். அவன் யாருக்கு பணம் தர வேண்டுமோ அவர்கள் அவனை நெருக்குகிறார்கள்.

பணம் சேர்க்க தனக்கு கைவந்த கலையான சீட்டாட்டத்தில் இறங்குகிறான் லே சிஃப். அதை தடுத்து நிறுத்தி அவனை தோற்கடிக்க தோதான ஆள் என கண்டறியப்பட்டு களமிறக்கப் படுகிறார் ஜேம்ஸ்..

ஜேம்ஸ் சீட்டாட வேண்டிய பணத்தை அவருக்கு தர நியமிக்கப் படுகிறாள் வெஸ்பர் லிண்ட் (எவா க்ரீன்). முதல் பார்வையிலேயே இருவருக்குள்ளே காதல் மலர்கிறது...

அடுத்து வரும் காட்சிகளில் சீட்டாட்டமும், வில்லனை துரத்தும் கடன்காரர்களுடன் ஜேம்ஸ் சண்டையும்..

ஜேம்ஸை ஆட்டத்திலிருந்து துரத்த விஷம் கொடுக்கிறான் வில்லன். காப்பாற்றுகிறாள் வெஸ்பர். ஆட்டத்தை தொடரும் ஜேம்ஸ் வில்லனை தோற்கடிக்கிறார்.

ஆட்டத்தில் வென்ற ஜேம்சையும் வெஸ்பரையும் கடத்தி மிரட்டி பணம் கேட்கிறான் வில்லன். வில்லனின் சித்தரவதையில் மயங்கி சாய்கிறார் ஜேம்ஸ்.

லே சிஃப்பின் கடன்காரர்கள் அவனை தீர்த்துகட்ட, ஆஸ்பத்திரியில் கண்விழிக்கிறார் ஜேம்ஸ்.


வெஸ்பர் மீது கொண்ட காதலால் வேலையை ராஜினாமா செய்கிறார். ஜேம்ஸ் வென்ற பணம் சேர வேண்டிய இடத்தில் சேரவில்லை.

வெஸ்பர் பணத்தை யாரிடமோ கொடுக்க செல்வதை பார்க்கும் ஜேம்ஸ் பின்தொடர்கிறார். பிறகு வெனிஸ் நகரில் ஒரு கட்டத்தில் நடக்கிறது சண்டை. கட்டிடமே இடிந்து நீரில் விழ ஜேம்ஸ் வெஸ்பரை காப்பாற்ற முயல, வெஸ்பர் லிஃப்டில் தன்னைத்தானே பூட்டிக்கொண்டு நீரில் மூழ்கி இறக்கிறாள்.


லே சிஃப்பை கொன்ற வொயிட்டிடம் இருந்து தன்னை காக்கவே வெஸ்பர் பணத்தை கொண்டு சென்றாள் என அறியும் ஜேம்ஸ் கதறி அழுகிறார்.

வொயிட்டை தேடிப்பிடித்து காலில் சுட்டு "என் பெயர் பாண்டு, ஜேம்ஸ்பாண்டு" என ஜேம்ஸ் சொல்ல முடிகிறது படம்.

பிரம்மாண்டங்கள் படத்தில் உண்டு என்றாலும் முந்தைய படங்கள் போல அல்ல.. ஜேம்ஸ்பாண்டின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். பார்க்க வேண்டிய படம்.




Friday, November 17, 2006

முன்னை புரிந்த எந்தவம் விளைந்தவனே


அன்னை பாலகுமரனை துயிலெழுப்புதல்

ஓங்கிவளர் கயிலை மலைமாட்டு தலைவைத்து
தூங்கும் ஓர்குமரா பொழுது புலர்ந்ததுகாண்
எங்கள் தவப்புதல்வா நீளும் நித்திரை
நீங்கி நித்தம் அடியார்க்கருள நீயெழுவாய்

முன்னை புரிந்த எந்தவம் விளைந்தவனே
தன்னை மறந்தவன் போல் நாடகமேன்
அன்னை குரல் கேட்டும் துயிலுகின்றாய்
பின்னை நாளில் ஆடிக்களைத்தாய் போலும்


ஆதவனும் ஆங்கு மேற்செலாது நிற்கின்றான்
வேதத்தின் விளைபயனே ஈண்டு தூங்க
இதமான தன்கதிர் பட்டு துயிலெழுந்தால்
நிதமெனக்கு நான்முகன் போல்சிறை எனபயந்தே


இத்தனையும் உன்பொருட்டு இன்னமும் துயில்கொள்வாய்
சாத்திரங்கள் தடுமாறும் நித்திரை நீதொடர்ந்தால்
ஆத்திரம் மூளவில்லை அழகுமுகம் கண்டற்பால்
பாத்திறத்தால் பலசொல்வேன் பாலகனே நீயெழுவாய்.






Thursday, November 16, 2006

வெய்யோனொளி வெட்கித் தோற்கும் முகவழகே

வெய்யோனொளி வெட்கித் தோற்கும் முகவழகே
செய்யும் செயல்யாவும் நின்கருணை கொண்டே
மெய்யாய் உன்புகழ் கூறும் அடியவர்க்கே
உய்யும் வழியுணர்த்தும் உன்பெயரே


பைந்தமிழில் யாண்டும் உனைப்பாட நானுவந்தேன்
செந்தமிழில் மனம் மகிழழும் திருக்குமரா
கந்தா என்கவியாவும் நான்சாற்ற நீஏற்பாய்
எந்தை இறைவா எந்நாளும்


செந்தழல் விளைந்த செல்வத் திருக்குமரா
விந்தைபல விளைத்திடும் வெற்றி வேலழகா
சிந்தையில் சதிராடும் வள்ளி மணாளா
தந்திடும் எனக்கே தமிழ்.


Tuesday, November 14, 2006

தமிழ் நாட்டில் தமிழறியா குழந்தைகள்


"கடைக்குப் போனியே, மிச்சம் எவ்வளவு, இருபது ரூபாயா?"

"இருபதுன்னா எவ்வளவு மாமா ? Thirty தானே..."

"இருபதுன்னா Twenty."

"அதெல்லாம் எனக்கு தெரியாது. Fifty Rupees கொடுத்தேன். Biscuit Twenty. மிச்சம் Thirty."

பத்து வயது சிறுவன். பெற்றோர் தமிழர். தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவன். நகரின் சிறந்த மெட்ரிகுலேசன் பள்ளி...
தமிழில் எண்ணத் தெரியவில்லை...

History, Geography என்று சொல்லாமல் வரலாறு, புவியியல் என்று சொல்லும் நான் அச்சிறுவனின் கண்ணில் வித்தியாசமாகத் தான் தெரிகிறேன்.

வரலாறு என்றால் அஜித் படமாக மட்டும் அறிந்திருக்கும் குழந்தைகள்.

நமது பள்ளிகள் வெறுமனே ஆங்கிலத்தில் பேசி பொதி சுமக்கும் சமுதாயத்தையா உருவாக்கி வருகின்றன?

Sunday, November 12, 2006

புதுக்கவிதை புனைதல்

வலைத்தளம் எங்கும் புதுக்கவிதைகள்.
எளிமையும் புரிதலும் மட்டும் புதுக்கவிதைகளா..

புதுக்கவிதைக்கென இலக்கணம் உண்டா...

வார்த்தைகள்
ஒன்றின் கீழ்
ஒன்றுதான்
புதுக்கவிதையோ ?

சீதையை பெண் பார்த்த இராமன்

கம்பராமாயணம் கோலம் காண் படலம்

வில்லொடித்த பின், தசரதன் முதலானோர் சீதையை பெண்பார்க்க வந்ததை விவரிக்கும் படலம்.

அதன் அழகியலுக்காக எத்தனை முறை படித்தாலும் அலுக்காத படலம்.

பெண் பார்க்கும் படலத்தில் காபி கொடுத்துவிட்டு குனிந்த தலை நிமிராமல் செல்வதாய் தமிழ் படங்கள் சித்தரிக்கும் இடம்...

கம்பன் காட்டும் காட்சி வித்தியாசமானது...

சீதை அலங்கரிக்கப் படும் விதத்தை கம்பன் சொல்லும் இடம்..

உமிழ் சுடர்க் கலன்கள், நங்கை உருவினை மறைப்பது ஓரார்,
அமிழ்தினைச் சுவை செய்தென்ன, அழகினுக்கு அழகு செய்தார்


அமுதம் ஏற்கனவே இனிமை. அதில் யாராவது சர்க்கரை போடுவார்களா. நகைகள் போட்டு அழகிய சீதையை மேலும் அழகாக்கும் முயற்சி அது போன்றதே...


சீதையின் அழகை கண்டு தோழியர், மயங்கி நிற்றல்


"அழகு எலாம் ஒருங்கே கண்டால், யாவரே ஆற்றவல்லார்?"

"மொத்த அழகும் ஒன்று சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி" - வைரமுத்து

பிறகு சீதை மண்டபம் அடைகிறாள். சீதை மண்டபம் அடைதலும், வணங்குதலும்.. வசிட்டன், விசுவாமித்திரன் அவளை வியத்தலும் அடுத்தடுத்த கவிகளில் கம்பன் அடுக்குகிறான்.

விசுவாமித்திரனின் வியப்பு

அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான்;
பச்சை மலை ஒத்த படிவத்து, அடல் இராமன்,
நச்சுடை வடிக் கண் மலர் நங்கை இவள் என்றால்,
இச் சிலை கிடக்க; மலை ஏழையும் இறானோ?'

இச்சிலை போன்ற சிலை சீதை கிடைக்க இராமன் ஒரு வில்லென்ன, மலை ஏழையும் பொடியாக்க மாட்டானோ?


எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்,
மெய் விளைவு இடத்து, முதல் ஐயம் விடலுற்றாள்,
ஐயனை, அகத்து வடிவே அல, புறத்தும்,
கை வளை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள்


எல்லோரும் இருக்கும் சபை, சீதைக்கு இராமனை பார்க்க வேண்டும். வில்லை உடைத்த வீரன், அன்று தான் பார்த்த அதே வீரனா என ஐயம். எப்படி பார்ப்பாள் சீதை. வளையலை சரி செய்வது போல் கடைக் கண்ணால் பார்க்கிறாளாம்.

கம்பனின் கவிநயம் இங்கு அருமை. கவிதையாய் ஒரு பெண் பார்க்கும் படலத்தை நம் கண் முன் நிறுத்துகிறான்.

Saturday, November 11, 2006

மரபு கவிதைகள் எங்கே......

வலைத்தளம் முழுதும் சுற்றி வந்தும் மரபு கவிதைகளை பார்க்க முடியவில்லை. தமிழில் மரபு கவிதைகள் அருகி வருகின்றன.
இன்றைய கவிஞர்கள் தங்களை நவீனம் சார்ந்து புதுக்கவிதைகளுடனேயே இணைத்துக் கொள்கிறார்கள்...

வணிக பத்திரிகைகளில் கவிதைக்கு இடமில்லை என்று பார்த்தால்
தீவிர தளத்தில் இயங்கும் இதழ்களில் புதுக்கவிதைகள் மட்டும்...

வெளியிடப்படும் கவிதை நூல்கள் யாவும் நவீனம் சார்ந்து, பாரதியை தாண்டி மரபு தமிழில் இருப்பதாகவே தெரியவில்லை...

மரபு மரபழிந்து போக யார் காரணம்..
பொது விருப்பத்தில் மரபிற்கு இடமில்லை என்று கருதி மரபை புறம் தள்ளிய கவிஞர்களா..
மரபிலிருந்து மாறுபட்டவர்களாய் தோற்றமளிக்கும் வாசகர் வட்டமா...


நவீனமோ, மரபோ கவிதைகளை அவற்றின் கனத்திற்காக, அழகியலுக்காக ஏற்றுக் கொள்ளும் வட்டம் என்றும் உண்டு...

கவிதை தொழில் என்று கொள்ளும் கவிஞர்காள்...
மரபிலும் சற்று கவி படைப்பீர்......