சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Thursday, May 17, 2007

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கதை... எறும்பும் வெட்டுக்கிளியும்..

இது ஈ-மெயிலில் சுற்றிக்கொண்டிருக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான கதை....
அப்படியே மொழிமாற்றம் செய்து இங்கு தந்திருக்கிறேன்.


--------------------------

பழைய கதை.. எறும்பும் வெட்டுக்கிளியும்.

வெயில் காலம். எறும்புகள் வெயிலையும் பொருட்படுத்தாது கடுமையாக உழைத்து உணவை தங்கள் புற்றுகளில் சேர்த்துக்கொண்டிருந்தன. ஆனால் வெட்டுக்கிளிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆடிப்பாடி நேரத்தை கழித்து கொண்டிருந்தன. அவை எறும்புகளை முட்டாள்கள் என்று கேலி பேசின. வெயில்காலம் போய் குளிர்காலம் வந்தது. எறும்புகள் தங்கள் புற்றில் கதகதப்போடு மகிழ்ச்சியாக இருந்தன. பாவம் வெட்டுக்கிளிகள் உணவின்றி குளிரில் வாடின.

புதிய கதை:

எறும்புகள் வெயிலையும் பொருட்படுத்தாது கோடையில் உழைத்து பொருளீட்டின. ஆனால் வெட்டுக்கிளிகள் உழைக்காமல் கேலி பேசி வீணில் பொழுதை கழித்தன.

குளிர்காலம் வந்தது. குளிரில் நடுங்கிய வெட்டுக்கிளிகள் பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டின. குளிர்காலத்தில் தாங்கள் மட்டும் குளிரில் வாடவும் எறும்புகள் மகிழ்வாக இருப்பதுமான சமூக அவலத்தை அவை சாடின.
அனைத்து தொலைக்காட்சிகளும் இந்த கூட்டத்தை ஒளிபரப்பு செய்தன. மேலும் அவை குளிரிலும் பசியிலும் நடுங்கும் வெட்டுக்கிளிகளையும் அதே நேரத்தில் தங்கள் புற்றுகளில் மேஜை முழுதும் உணவுகளை பரப்பி மகிழ்வாக இருக்கும் எறும்புகளையும் காட்டின.

உலகமே இந்த பேதத்தை பார்த்தது. பதறியது. எப்படி வெட்டுக்கிளிகள் இவ்வாறு கஷ்டப்படலாம்.

அருந்ததி ராய் மற்றும் பலர் எறும்பின் புற்றுமுன் போராட்டம் நடத்தினர்.

மேதாபட்கர் பல வெட்டுக்கிளிகளை சேர்த்துக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தார். வெட்டுக்கிளிகளை இந்த குளிரிலிருந்து காப்பாற்ற அவற்றிற்குகந்த இடமாற்றம் வேண்டுமென கோரிக்கை விடு்தார்.

இவற்றை பார்த்த சர்வதேச அமைப்புகள் கோபி அன்னான் போன்றோர் இந்திய அரசாங்கத்தின் வெட்டுக்கிளிகளின் அடிப்படை உரிமைகளை கவனிக்காத போக்கை கண்டித்தனர்.

வலைத்தளமெங்கும் வெட்டுக்கிளிகளுக்கு ஆதரவான கட்டுரைகள்.

எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இடதுசாரிகள் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் விசாரணை கமிஷன் வைக்கக்கோரி பந்த் அறிவித்தனர். கேரள அரசாங்கம் எறும்புகள் கடுமையாக உழைப்பதை தடுக்க சட்டம் இயற்றி எறும்புகளுக்கும் வெட்டுக்கிளிக்கும் இடையே சமத்துவத்தை நிலைநாட்டியது.

லல்லு பிரசாத் வெட்டுக்கிளிகள் பயணிப்பதற்கென தனி இரயில் பெட்டிகளை ஒதுக்கி அறிவித்தார்.

விசாரணை கமிஷனின் முடிவில் 'Prevention of Terrorism Against Grasshoppers Act' [POTAGA] சட்டம் இயற்றப்பட்டது.

அர்ஜுன் சிங் வெட்டுக்கிளிகளுக்கு என கல்விநிறுவனங்களிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தினார்.

போடாகா சட்டத்தின் படி எறும்புகள் தண்டிக்கப்பட்டு அவற்றின் வசமிருந்த புற்றுகள் கைப்பற்றப்பட்டு வெட்டுக்கிளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த வைபவத்தை அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின.

அருந்ததி ராய் இதை 'நீதியின் வெற்றி' என்று கொண்டாடினார்.
லாலு இதை 'சமூக நீதி' என்றார்.
இடதுசாரிகள் இதை "மக்களின் மறுமலர்ச்சி" என்று கொண்டாடினர்.
கோபி அன்னான் வெட்டுக்கிளியை ஐநாவில் உரையாற்ற அழைத்தார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு...

எறும்புகள் இடம்பெயர்ந்து யுஎஸ்ஸில் சிலிக்கான் வேலியில் பில்லியன் டாலர் மதிப்புள்ள கம்பனியை நிறுவின.
100க்கணக்கான வெட்டுக்கிளிகள் இடஒதுக்கீட்டிற்கு பிறகும் எங்கோ இந்தியாவில் பசியால் இறந்து கொண்டிருந்தன...

உழைக்கும் எறும்புகளை உதறித்தள்ளி வெட்டுக்கிளிகளுக்கு ஊட்டிக் கொண்டு இருப்பதால் இந்தியா இன்னும் வளரும் நாடாகவே தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

--------------------


இந்த கதையின் கருத்தில் எனக்கு எவ்விதத்திலும் உடன்பாடு இல்லை என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.


Wednesday, May 16, 2007

மூழ்கிய தீவு... கைவிடப்பட்ட அன்பு....

ஒரு அழகான தீவு.

அதில் மகிழ்ச்சி, துக்கம், அறிவு போன்ற பலவற்றுடன் அன்பும் வசித்து வந்தது.

ஒருநாள் இன்று இத்தீவு மூழ்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு உணர்வும் தங்கள் படகுகளை தயார் செய்து வெளியேற தயாராகின.

அன்புக்கு வெளியேற மனமேயில்லை. அது எந்த ஏற்பாட்டையும் செய்துகொள்ளவில்லை.

தீவு மூழ்கும் நேரம் நெருங்கியது. அன்பு உதவி கேட்க முடிவு செய்தது.

பணம் மிகப்பெரிய படகொன்றில் சென்று கொண்டிருந்தது.
"பணமே. நீ என்னை உன் படகில் ஏற்றிக் கொள்வாயா ?" அன்பு கேட்டது.
"முடியாது. என் படகில் நிறைய தங்கம் வெள்ளி இருக்கிறது. உனக்கு இடமில்லை" பணம் மறுத்து சென்றுவிட்டது.

தற்பெருமை தன் படகில் கிளம்பிக் கொண்டிருந்தது.
"தற்பெருமையே நான் உன்னோடு வரட்டுமா." அன்பு அதனிடம் கேட்டது.
"நீ நனைந்திருக்கிறாய். என் படகு ஈரமாகி விடும். உன்னை ஏற்ற முடியாது". தற்பெருமை அன்பை கைவிட்டது.

அவ்வழியாக மேலும் மகிழ்ச்சி, துக்கம் போன்ற பலவும் கடந்து சென்றன. எவையுமே அன்பை ஏற்றி கொள்ளவில்லை.

அப்போது ஒரு முதிர்ந்த குரல் "அன்பு என்னுடன் வா".

அன்பு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நன்றி சொல்லி அந்த முதியவரின் படகில் ஏறி அன்பு தப்பித்தது.

அன்பை கரையிறக்கி விட்டு அந்த முதியவர் சென்று விட்டார்.

"உதவி செய்த அவர் பெயரை கூட நான் கேட்கவில்லையே" அன்பு வருந்தியது.

"அதுதான் காலம்" அறிவு அன்பிடம் சொன்னது.

"ஆனால் மற்ற எவரும் உதவி செய்யாத போது காலம் எனக்கு உதவியதே.".

"ஆம் அன்பின் அருமை எதையும் விட காலத்திற்குத்தான் தெரியும். அதனால்தான் காலம் உனக்கு உதவி செய்தது." அறிவு விளக்கியது.

-----------

நாம் வாழும்போது பணம், தற்பெருமை, புகழ் இவற்றின் போதையால் உண்மை அன்பை உதாசீனம் செய்கிறோம். காலம் கடக்கும் போது... ஒரு கட்டத்தில் அந்த அன்பை உணர்வோம்.

அதே போல் நமது அன்பை யாரேனும் உதாசீனம் செய்தால் அதற்காக வருந்த வேண்டியதில்லை.
தொடர்ந்து அன்பு செய்வோம். காலம் செல்ல செல்ல நமது அன்பை அவர்களே உணர்வார்கள்.

காலத்ததை போல அன்பின் அருமையை உணர்த்துவது எதுவும் இல்லை.


வள்ளுவம்:

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

Tuesday, May 15, 2007

விரிசல் பானை.....அந்த வீட்டில் இரண்டு பெரிய பானைகள் இருந்தன. அந்த வீட்டின் வேலையாள் அவற்றை ஒரு நீண்ட கழியின் இரு முனைகளிலும் கட்டி கிணற்றிலிருந்து வீட்டிற்கு நீர் கொண்டு வருவான். அதில் ஒரு பானை மிக ஒழுங்காவும் மற்றது சிறு விரிசலுடனும் இருக்கும். ஒவ்வொரு முறை நீர் கொணரும் போதும் விரிசல் பானையிலிருந்து நீர் ஒழுகி வீட்டையடையும் போது அதில் பாதி நீர் தான் இருக்கும்.

இரண்டு ஆண்டுகளாக இதே போல் நிகழ்ந்து கொண்டு இருந்தது. வேலையாளால் ஒன்றரை பானை நீரை மட்டுமே கொணர முடிந்தது.

ஒழுங்கான பானை இதனால் கர்வம் கொண்டு இருந்தது. விரிசல் பானை தனது இயலாமையை நினைத்து வெட்கியது.

இரண்டாண்டு தொடர் தோல்விக்கு பின் விரிசல் பானை ஒருநாள் வேலையாளிடம் பேசியது..
"என்னை மன்னித்து விடு."
"ஏன்?"
"இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக என்னால் முழுமையாக நீர் கொண்டு வர முடியவில்லை. நான் வெட்கப்படுகிறேன்"
வேலையாள் சிரித்தான்.
"நாளை வரும் வழியில் பாதையை நன்கு நோட்டமிடு".

மறுநாளும் அதே போல் நிகழ்ந்தது. விரிசல் பானை ஒழுகியவாறே வந்தது.
ஆனால் பாதையில் இருந்த மலர்ச்செடிகளை பார்த்தவாறே வந்தது.

வேளையாள் விரிசல் பானையிடம் சொன்னான்..
"வழியில் இருக்கும் இந்த மலர்ச் செடிகளை பார்த்தாய் அல்லவா. இவை நீ இருக்கும் பக்கத்தில் மட்டும் வளர்ந்திருப்பதைப் பார். உன்னிடம் விரிசல் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் அதுவும் சாதகமான ஒன்றே. நான் நீ இருக்கும் பக்கத்தில் மலர்ச்செடியின் விதைகளை தூவினேன். உன்னில் ஒழுகிய நீர் அவற்றிற்கான நீராயிற்று. இந்த மலர்கள் நமது வீட்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றன. இது உன்னால் மட்டுமே சாத்தியமாயிற்று".

நாம் அனைவரிடமும் சில குறைகள் இருக்கின்றன. நாம் அனைவரும் விரிசல் பானைகளே. ஆனால் நமது குறைகளுக்காக இயலாமைக்காக நாம் வருந்த வேண்டியதில்லை.
நமது குறைகளே நமது நிறைகளாகவும் அமையக்கூடும். அவற்றை ஏற்றுக் கொள்வோம். வாழ்க்கை மகிழ்ச்சியனாதாக இருக்கக் காண்போம்.

-----------------------------

வள்ளுவம்:

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

டென்ஷன்.. டென்ஷன்.. டென்ஷன்....

நமது வாழ்க்கையில் எல்லாமே அவசரம்... ஆத்திரம்... ஆரவாரம்
இந்த அவசரத்திலும் ஆத்திரத்திலும் நாம் அடுத்தவரை காயப்படுத்தி நம்மையும் காயப்படுத்திக்கொள்கிறோம். அமைதியற்ற வாழ்க்கைக்கு எது காரணம். நிதானமின்மை. பொறுமையின்மை.

----------

அவன்... சிறுகுடும்பத்தலைவன்... அவனைப்போலவே வேலைக்கு செல்லும் மனைவி.. ஐந்து வயது பெண் குழந்தை...

ஒரு நாள் காலை...

எட்டு மணி முப்பது நிமிடம்... அலுவலகங்களும் பள்ளிக்கூடமும் ஒன்பது மணிக்கு... வேலைக்கு செல்லும் அவசரம்..

காலை உணவு... காபி... மேஜை மீது இருந்த காபியை கைதவறுதலாக கொட்டி விட்டது குழந்தை... அவன் சட்டை மீது காபிக்கறை.

கோபம் தலைக்கேறுகிறது அவனுக்கு... குழந்தையை திட்ட துவங்குகிறான்..

"சனியனே... சே... சட்டையெல்லாம் நாசம்..." துடைத்துக்கொண்டே அடுத்தடுத்த வசவுகள்.

குழந்தை அழுகிறது...

மனைவியை பார்த்து திரும்புகிறான்...

"கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா. குழந்தையை பார்த்துக்க கூடாதா...."

"ஏன்... நீங்க பார்த்துக்க கூடாதா... காலையிலிருந்து சமையல்ல இருந்து எல்லாம் நானே செய்யறேன். நான் மட்டும் என்ன மிஷினா.."..

"ஆமா பெரிய வேலை... குழந்தைய பார்த்துக்கன்ன ஓவரா பேசுற..."

சண்டை நீளுகிறது.... நேரம் 8:50..

சண்டையில் நேரம் கரைந்ததை உணருகிறார்கள்...

ஒருவர் மேல் ஒருவருக்கு கோபம்...

மனைவி அவனை திட்டிக் கொண்டே குழந்தையின் உடையை மாற்றுகிறாள்.

குழந்தையின் பள்ளி பேருந்து தவறிவிட்டது. மனைவிக்கும் நேரமாகிறது.

"நீ ஆட்டோ பிடிச்சு போ.. நான் குழந்தைய பள்ளிக்கூடத்துல விட்டுட்டு போகிறேன்." சட்டையை மாற்றி கொண்டு கிளம்புகிறான்.

குறுக்கு வழி... மடக்குகிறார் போலீஸ்காரர்... ஒன் வே.... அவசரம் என்று சொல்லி ஐம்பது ரூபாய் அபராதம் கட்டுகிறான்.

பள்ளியில் குழந்தையை இறக்கிவிட அது சோகமாக இறங்கி போகிறது.

அலுவலகத்தை சென்று சேர 9:30... தாமதம்... அன்று முழுவதும் அலுவல்களில் தடுமாற்றம்.

வரவேண்டிய பிரமோஷன் வரவில்லை.

களைத்துப்போய் மாலை வீடு திரும்புகிறான்... காலையில் பாதியில் விட்ட சண்டை தொடருகிறது....

நரகத்தை உணருகிறான்...

----------------------

இதற்கு யார்காரணம்...

1) காபியை கொட்டிய குழந்தை...
2) குழந்தையை கவனிக்காமல் விட்ட தாய்.
3) ஒன்வேயில் மடக்கிய போலீஸ்....

யாருமில்லை..... அவனேதான்.... எப்படி.... பார்ப்போம்

----------------


குழந்தை காபியை கொட்டுகிறது...

"அச்சச்சோ... தவறிட்டதா... பார்த்து எடுக்கக் கூடாது" குழந்தையை அள்ளி அணைக்கிறான்.

குழந்தைக்கும் ஆடைமாற்றி தானும் தன் சட்டையை மாற்றுகிறான்.

"அப்பாவும் பொண்ணும் காலையிலேயே உங்க லூட்டிய ஆரம்பிச்சாச்சா.. " மனைவி சிரிக்கிறாள்.

பள்ளி பேருந்து வருகிறது. குழந்தை அப்பா அம்மாவுக்கு டாட்டா காண்பித்து சிரித்தவாறு பேருந்தில் ஏறுகிறது.

மனைவியை அவள் அலுவலகத்தில் இறக்கிவிடுகிறான்.

அலுவலகம் செல்கிறான். 8:57.

"பங்சுவாலிட்டியை உன்கிட்டதாம்பா கத்துக்கணும்" பாஸ் மகிழ்கிறார். "உன்னை பிரமோட் பண்ணியிருக்கேன்".

மகிழ்ச்சியோடு வீடு திரும்புகிறான்.

"டாடிக்கு பிரமோஷன் வந்திருக்கு... நாம அத கொண்டாட சினிமாவுக்கு போயிட்டு அப்படியே வெளிய சாப்பிட்டுட்டு வர்றோம்."

"ஏய்..." குழந்தையின் மகிழ்ச்சிக் குரல். மகிழ்ச்சியாக வெளியே செல்கிறார்கள்.

சொர்க்கத்தை உணருகிறான்.

--------------------------------------------


நமது மகிழ்ச்சி நம்மிடம்தான் இருக்கிறது.

வாழ்க்கையின் மகிழ்ச்சி திட்டமிட்டு வருவதில்லை. எந்த கணத்திலும் நாம் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்கிறோமா என்பதில்தான் இருக்கிறது.வள்ளுவம்:

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்

Monday, May 14, 2007

500 ரூபாய் வேண்டுமா...மிகப்பெரிய பேச்சாளர் அவர். 200 பேர் இருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருந்தார்.

அவர் ஒரு 500 ரூபாய் நோட்டை வெளியே எடுத்தார். புத்தம் புதிய சலவை நோட்டு.

"நான் இந்த 500 ரூபாயை உங்களில் ஒருவருக்கு தருவதாக உள்ளேன். யாருக்கு வேண்டும். வேண்டும் என்பவர்கள் கை தூக்கலாம்."

பல கைகள் உயர்ந்தன.

அவர் அந்த 500 ரூபாயை இப்போது கசக்கினார்.

கசங்கிய அந்த நோட்டை கையில் வைத்துக்கொண்டு கேட்டார்.
"இப்போது இந்த 500 ரூபாய் யாருக்கு வேண்டும்".

இப்போதும் பல கைகள் உயர்ந்தன.

அவர் அந்த 500 ரூபாயை இப்போது தரையில் போட்டு. கால்களால் மிதித்தார்.

"இப்போது இந்த 500 ரூபாய் யாருக்கு வேண்டும்".

இப்போதும் பல கைகள் உயர்ந்தன.

"நண்பர்களே இப்போது நீங்கள் மிக முக்கியமான படிப்பினையை அறிந்து கொண்டீர்கள். இதோ இந்த நோட்டின் மதிப்பு 500 ரூபாய். நான் கசக்கிய பிறகும் காலில் போட்டு மிதித்த பிறகும் அதன் மதிப்பு மாறவில்லை. இப்போதும் அது உங்களால் விரும்பப்படுகிறது. நமது வாழ்வில் நாமும் இது போலத்தான் பல தருணங்களில் கசக்கப்படுகிறோம் மிதிக்கப்படுகிறோம். சுயமதிப்பை இழந்து விட்டதாக வருத்தப்படுகிறோம். வாழ்க்கையில் வெறுப்படைகிறோம். ஆனால் உண்மையில் நமக்கு எது நடந்தாலும் நாம் நமது உண்மையான மதிப்பை இழப்பதில்லை. வாழ்க்கையில் எவ்வளவுதான் தோற்றபோதும் பிறரால் அவமானப்படுத்தப் பட்ட போதும் நாம் என்றும் நமக்கு உரியவர்களால் விரும்பப் படுபவர்களாகவே இருக்கிறோம். நமது வாழ்க்கையின் மதிப்பு நாம் என்னவாக இருக்கிறோம் எதை உடையவர்களாக இருக்கிறோம் என்பதில் இல்லை. நாம் நாமாக இருக்கிறோமா என்பதில்தான் இருக்கிறது. உங்கள் மதிப்பு உண்மையில் மிக அதிகம். இதை மறவாதீர்"

---------------

வள்ளுவம்:

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

Friday, May 11, 2007

நசுக்கப்பட்ட விரல்கள்

உண்மையில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் கதை இது. (உண்மையான நிகழ்வா என்பது கேள்விக்குரியது.)

புத்தம் புதியதாக கார் வாங்கியிருந்தான் அவன். அதன் புதிய மெருகின் மீது மெத்த கர்வம் கொண்டிருந்தான்.

ஒருநாள் வெளியே கார் நிற்கும் இடத்தை கண்ணுற்ற அவன் அதிர்ந்தான்.

அவனது மூன்று வயது மகன் சுத்தியலால் காரை தட்டிக் கொண்டிருந்தான். கார் சொட்டையாகி கொண்டிருந்தது.

கோபம்.. கட்டுங்கடங்காத கோபம்.

மகனின் கையிலிருந்து சுத்தியலை பிடுங்கினான்.

"இந்த கைதானே சுத்தியால் காரை நாசமாக்கியது" என்று கத்தியவாறு சிறுவனின் கைகளை இழுத்து வைத்து சுத்தியால் நசுக்கினான்.

கோபம் தீர்ந்தது. சிறுவனின் விரல்களில் இரத்தம்.

"ஐயோ என்ன.. செய்தேன்." அதிர்ந்தான்.

மகனை மருத்துவனைக்கு கொண்டு சென்றான்.

நசுக்கப்பட்ட விரல்களை நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்று மருத்துவர் குழு முடிவெடுத்தது. விரல்கள் வெட்டப்பட்டன.

மகனின் படுக்கையருகே அமர்ந்து அவன் அழுது கொண்டிருந்தான்.

"சாரிப்பா. நான் செஞ்சது தப்பு. காரை சரி செஞ்சிடலாம் இல்லையா..." மகன் தன் கைகளை பார்த்தான்...
"இந்த விரல்லாம் திரும்பியும் வளர்ந்துடும் இல்ல"...

அவனால் தாங்க முடியவில்லை. அன்றே தற்கொலை செய்து கொண்டான்.

-------------------------

ஆத்திரத்தில் அறிவிழந்து பிறரை துன்புறுத்துவதன் மூலம் நாம் சாதிப்பது எதுவுமில்லை.
மாறாக அந்த வலி நம்மைத்தான் வந்து அடையும்.வள்ளுவம்:


சினத்தை பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.


-----------

அறையப்பட்ட ஆணி

அந்த சிறுவனுக்கு மிகவும் கோபம் வரும்.
எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தார் தந்தை.
அவன் கேட்பவனாக இல்லை.

ஒருநாள் தந்தை சிறுவனிடம் நிறைய ஆணிகளை கொடுத்தார்.

"உனக்கு ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும் கோபத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தாதே. அதற்கு பதில் நமது வீட்டு வேலியில் ஒரு ஆணியை அடித்து வா. " என்றார்.

முதல் வாரத்தில் சிறுவன் 25 ஆணிகளை வேலியில் அடித்திருந்தான். நாட்கள் செல்ல செல்ல அவன் அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கை குறைந்தது.

ஒரு கட்டத்தில் அவனால் அவனது கோபத்தை முழுமையாக கட்டுப் படுத்த முடிந்தது. தந்தையிடம் தன்னால் இப்போது கோபத்தை கட்டுப்படுத்த முடிவதாக அவன் சொன்னான்.

அவர் சொன்னார். " எப்போதெல்லாம் உன்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடிகிறதோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை வேலியில் இருந்து பிடுங்கு".

நாட்கள் சென்றன. ஒரு கட்டத்தில் சிறுவன் வேலியில் தான் அறைந்த ஆணிகள் அனைத்தையும் பிடுங்கி விட்டான்.

தந்தை சொன்னார். "மகனே. பாராட்டுகிறேன். இப்போது அந்த வேலியை பார். அதில் ஆணிகள் அடிக்கப்பட்ட இடத்தில் இப்போது துளைகள் உள்ளன. வேலி முன்னைப்போல் இல்லாது இந்த வடுக்களுடன்தான் இனி இருக்கும். கோபத்தில் வெளிப்படும் வார்த்தைகளும் இதுபோலத்தான். இதயத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்துபவை. கத்தியால் குத்தப்பட்ட வடு ஆறிவிடும். வார்த்தைகளின் வடு எளிதில் ஆறாது."

புரிந்து கொண்ட சிறுவன் கோபத்தை முற்றிலும் விட்டொழித்தான்.

----

வள்ளுவம்:

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

-----------