அய்யனார் குதிரை மூக்குல இருந்து வந்த புகை
அய்யனார் குதிரையோட மூக்குல இருந்து புகை வர்றதை முதல்ல முருகேசுதான் பார்த்தான். அடுத்த நிமிஷம் அவன் பின்னாங்கால் பிடறி பட ஓட ஆரம்பிச்சிட்டான்.
ஊருக்குள்ள நுழைஞ்சவன் மூச்சு வாங்க கூட நேரம் எடுத்துக்காம அடுத்த நிமிஷமே கூப்பாடு போடுறான்.
"அய்யனாரு.. அய்யனாரு குதிரயில இருந்து புகை. மூக்குல இருந்து புகையா வருது.."
பொட்டிகடைகாரருதான் முதல்ல அவன் கத்தனத கேட்டு வந்தாரு.
"என்னடா சொல்றே"
"அண்ணே.. அய்யனாரு குதிரை மூக்குல இருந்து புகையா வருது. அண்ணே"
விஷயம் சுப்பாயி கிழவி காதுல விழுந்திருச்சி. "ஏண்டா முருகேசு என்னடா சொல்லுற. அய்யனாரு குதிர புகைய கக்குதா."
"ஆமா. கிழவி."
கிழவி புலம்ப தொடங்கினாள். "அய்யனாரே உனக்கு நாங்க என்ன குறை வெச்சோம். உனக்கு படையல் வெக்கலியா. பொங்க வெக்கலியா. கடா வெட்டலியா. செய்யறத சரியாதான செஞ்சோம். ஏன் இந்த சோதன.."
கடைக்கு கிளம்பிய கந்தசாமி வாத்தியார் காதுல இந்த புலம்பல் விழுந்துச்சி. அவரும் நேரா அங்கிட்டு வந்து சேர்ந்தாரு.
அரசல் புரசலா விஷயம் பரவி ஊரு சனம் மொத்தம் ஒண்ணா சேந்திருச்சி. களத்து மேட்டுல கதிரடிச்சிக்கிட்டு இருந்தவங்க அத அப்பிடியே போட்டுட்டு வந்துட்டாங்க.
ஊருக்கு நடுவுல இருந்த அரசமரத்தடியில மொத்த சனமும் கூடிருச்சி.
இத்தன கூத்துக்கும் பூஜாரிய காங்கலை.
சுப்பாயி பேரன் மணி பூஜாரிய கூட்டிக்கிட்டு வர சைக்கிளை எடுத்துக்கிட்டு போனான்.
ஊரு தலைவருக்கு சொல்லி விட இரண்டு பேரு ஓடினாங்க.
பத்து நிமிஷம் போச்சி. சனங்க அவங்களுக்குள்ள குசு குசுன்னு பேசிக்கிறாங்க.
தலைவரும் பூஜாரியும் ஒருக்கா வந்து சேந்தாங்க.
தலைவரு தொண்டய சொருமி பேச ஆரம்பிச்சாரு "ஏன் எல்லாருமா இப்பிடி கூடியிருக்கீங்க.?"
"அய்யா, முருகேசு அய்யனார் குதிரை மூக்குல இருந்து புகை வர்றதை பாத்திருக்கறான் ஐயா."
"உண்மையா. முருகேசு."
"ஆமா ஐயா. புகையான புகை. குதிரை நகர்ற மாதிரி இருந்திச்சி."
சுப்பாயி கிழவி மீண்டும் ஆரம்பித்தாள் "நான் அப்பவே சொன்னேன். கேட்டீங்களா. இந்த வருசம் ஐயனாருக்கு வெறுமனே சோறு பொங்கி போட்டு கடா வெட்டாம வுட்டுட்டீங்களே. ஐயனாரு கோபத்தை ஊரு தாங்குமா."
பூசாரி எல்லாருக்கும் முன்னாடி வந்தாரு. "ஐயா நாஞ்சொல்ல சொல்ல நீங்களும் வாத்தியாரு ஐயாவுமா சேந்து கடாவெட்ட வேணாம்னு சொல்லிட்டீங்க. இப்ப பாத்தீங்களா."
வாத்தியார் எழுந்தார் பூசாரி. "அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?"
"ஐயா அய்யனாருக்கு கடா வெட்டாததாலதான் ஐயனாரு சாமி கோச்சுக்கிட்டு புகை கக்குது.. இன்னும் என்னென்ன கேடு வரப்போகுதோ."
ஆளாளுக்கு ஏதேதோ பேச ஆரம்பித்தார்கள். ஊரே பயந்து போய் இருந்தது.
"முதல்ல சம்பந்தப் பட்ட இடத்துக்கு போவோம் வாங்கய்யா" வாத்தியார் சொன்னதும் எல்லாருமா சேர்ந்து சிலைய பாத்து போனாங்க.
இப்பவும் புகை வந்து கொண்டிருந்தது. கிட்ட போற தைரியம் யாருக்கும் இல்லை.
வாத்தியார்தான் தைரியமாக போனார்.
கிட்ட போனதும் வாத்தியார் சிரிக்க ஆரம்பிச்சாரு. ஜனங்க புரியாம முழிக்குது.
"யாருடா அது. வெளிய வா"...
பதில் வரலை..
"இப்ப வெளிய வரல.. நடக்கறதே வேற..."
குதிரையோட உடைஞ்ச கால் வழியா இரண்டு பசங்க குதிச்சாங்க.
"ஏண்டா... அய்யனாரு குதிரைக்கு உள்ள உட்காந்து திருட்டுத்தனமா பீடி வலிக்கிறீங்களா.. திருட்டு கழுதைகளா.."
அந்த இரண்டு பேருக்கும் அடுத்தடுத்து அடி விழுந்தது வாத்தியாரிடமிருந்து.
ஊர் ஜனம் தலையிலடிச்சிக்னு திரும்பி போச்சி.
10 Comments:
நல்ல கதை சாத்வீகன். :-)
நன்றி குமரன்.
ஹா ஹா ஹா....
சிரிப்பான கதை; சிறப்பான கதையும் கூட சாத்வீகன்!
சாத்வீகன்,
மிகவும் அருமையான கிராமியக் கதை. கிராமப் புறங்களில் இப்படியான சம்பவங்கள் பல நடப்பதுண்டு. எனது கிராமத்தில் "முனியப்பர் அடித்த" கதைகளும் பல கேள்விப்பட்டிருக்கிறேன்.
சாத்வீகன்!
இப்படிக் கதை இன்னும் கிராமங்களில் இருக்கிறது. முடிவை முதலே ஊகித்தேன். சுவாரசியமான நடை;
யோகன் பாரிஸ்
நன்றி ரவிஷங்கர் கண்ணபிரான்.
வருக வெற்றி..
முனியடித்த கதையும் பேயடித்த கதையும் பல கிராமங்களில் உலவும் கதைகளே.
வருகைக்கு நன்றி.
நன்றி யோகன் பாரிஸ்
யூகிக்க கூடிய கதைதான். அதானால்தான் மிகவும் நீட்டிக்க வில்லை.
நன்றிகள்.
நீங்க கதையும் எழுதுவீங்களோ?
நல்லாருக்கு ... யோகன் சொன்னது போல கொஞ்சம் யூகிக்கவும் முடிந்தது!!!
கதை நல்லா இருந்துச்சு. ஆனால்
யோகன் அய்யா கூறியது போல் யூகிக்க முடிஞ்சுது.
Post a Comment
<< Home