தொலைந்த நண்பன்... சிறுகதை
பேருந்து கிளம்பியது. சென்னை செல்லும் கூட்டம், திங்கள் கிழமை காலை. சென்னை செல்லும் பேருந்துக்கள் பிதுங்கி வழியும் நாள். ஞாயிறு விடுமுறை கழிந்த பின் அலுவலகங்களுக்கு செல்பவர், கல்லூரிக்கு திரும்பி செல்லும் மாணவர்கள் கூட்டத்திற்கு குறைவு இல்லை.
படிக்கட்டிற்கு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்த படி நான்.
ஓடி வந்து ஏறிய இளைஞனை எங்கேயோ பார்த்த நியாபகம். முன் வழுக்கை. அவனும் என்னை உற்று பார்ப்பதாக தோன்றியது.
நிமிடங்கள் கரைந்தன..
எனக்குள் ஒரு சந்தேகம்.. அவனுக்குள்ளும் ஏதோ..
"என்னை நியாபகம் இருக்கா.. தலீவா..."
அந்த கரகர குரல். தலீவா என்று அவன் சொன்ன விதம்.
"பிரகாஷ் !!!"
"கண்டுபுடிச்சிட்டியே.." சிரித்தான்
"அடப்பாவி, உன்னை எல்லாம் எப்படி மறப்பேன். எப்படியிருக்கே.."
"நல்லா இருக்கேன் தலீவா.. நீ எப்படி இருக்க.."
*********************************************************
பிரகாஷ்...
பிரகாஷ் நான் ஆறாவது சேர்ந்த அதே பள்ளியில் அவனும் சேர்ந்தான், என்னை விட இரண்டு வயது பெரியவன்.
தமிழ் வழிக்கல்வி. என்னை போல் அவன் பள்ளிக்கு அருகே இருப்பவனல்ல.
இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராமத்திலிருந்து தினமும் பள்ளிக்கு பேருந்தில் வருபவன்..
மிக பயங்கரமான பேருந்து அது. எந்த நேரமும் அச்சு முறிவதை போல. ஒரு ஆளுக்கு ஒரு மூட்டை என்ற கணக்கில் அந்த பேருந்து வரும்.
பத்தாவது வரை ஒன்றாக படித்தோம். ஆரம்பத்தில் அடித்துக் கொண்டு ஆசிரியரிடம் திட்டு வாங்கி ஒன்றாக முட்டி போட்டு அதன் காரணமாக நண்பர்களாகி, ஒன்றாக கிரிக்கெட் விளையாடி..
------
"நம்ப கிளாஸ்க்கு லீடர் தேவை.. பொண்ணுங்கள்ல இருந்து லதா.
பாய்ஸுக்கு ஸ்ரீதர்..." வகுப்பாசிரியர் வாசுதேவன்.
"பிரபுதான் சார் லீடர்.." பிரகாஷின் குரல்..
தன்னிடம் டியூசன் படிக்கும் ஸ்ரீதர் லீடராக மறுக்கப்பட்டது அவருக்கு கோபம் மூட்டியது. மறைத்து கொண்டார்.
"சரி. போட்டின்னு வந்துருச்சி ஜனநாயகம்தான். ஸ்ரீதர் லீடர்னு சொல்றவங்க எல்லாம் கைய தூக்குங்க.. "
ஸ்ரீதர் மட்டும் கையை தூக்கிக் கொண்டு இருந்தான். மீதமுள்ள இருபத்தோரு கைகளில் எதுவும் எழவில்லை.
"பிரபுதான் லீடர்னு சொல்றவங்க கைய தூக்குங்க.. "
நான் கையை தூக்கவில்லை. வாசுதேவன் இருபத்தோரு கைகளை எண்ணினார். பிரகாஷ் என்னை பார்த்து கண்ணடித்த படி இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டிருந்தான்.
இப்படித்தான் நான் பிரகாஷுக்கு தலைவனானேன்.
----
அவன் முதன் முதலாக காதல் கடிதம் தந்தபோது என்னை அழைத்து சென்றான்..
நாங்கள் ஏழாம் வகுப்பு அந்த பெண் எட்டாம் வகுப்பு. பிஎஸ்ஏ எஸ்எல்ஆர் சைக்கிளில் பள்ளிக்கு வருவாள்.
"நீ இங்கயே இரு தலீவா.. இதோ வந்துடறேன். "
என்னை சைக்கிள் ஸ்டான்டின் ஒரு மூலையில் நிற்க வைத்து விட்டு அவளை சைக்கிளோடு நிறுத்தினான்.
அவள் முகம் மலர்ந்தது. சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தான். ஏதோ கடிதம் கொடுப்பது எனக்கு தொலைவில் இருந்து தெரிந்தது.
சற்று நேரத்தில் திரும்பி வந்தான்.
"சும்மா ஜாலிக்கு தலீவா. கண்டுக்காத. "
நான் அதற்குபிறகு கண்டுகொள்ளவில்லை. அவள் அப்பாவுக்கு மாற்றலானதால் அவள் அடுத்த வருடம் எங்கள் பள்ளியில் இல்லை. பிரகாஷும் அலட்டிக்கொள்ளவில்லை.
-----
பத்தாம் வகுப்பில் நாங்கள். பொதுத் தேர்தல் முடிந்தது.
"நான் ஓட்டுபோட்டேன்" என்றான்.
"அடப்பாவி உனக்கு பதினேழு வயசுதானே ஆகுது.. "
"கள்ள ஓட்டு" சிரித்தான். "நாலு தடவை வேற வேற பூத்ல போட்டேன். விரல் மசியை அழிக்கிறதுக்கு நம்ம கிட்ட டெக்னிக் இருக்கு இல்ல."
"அடப்பாவி.. "
"நம்ம கட்சி நிக்குது. இந்த வேலைய கூட நாம பண்ணமாட்டமா தலீவா. "
-----
பொதுத்தேர்வு நெருங்கியது.
"தலீவா கணக்கு சொல்லி தர்றியா. "
"உனக்கு கணக்கு நல்லா வருமே பிரகாஷ். "
"வரும். ஆனா எனக்கு உன்ன மாறி நூத்துக்கு நூறு வாங்கணும். "
"வீட்டுக்கு வாயேன்.. சேர்ந்து படிப்போம். "
வந்தான். அம்மா அவனுக்கும் காபி பலகாரம் தந்தார்கள். படித்தோம்.
பரீட்சையும் எழுதினோம். முடிவும் வந்தது.
நான் வகுப்பில் முதல் மாணவனாக தேறியிருந்தாலும் கணக்கில் மட்டும் 99. அவன் கணக்கில் 100. மற்ற பாடங்களில் சராசரி.
"குருவ மிஞ்சிட்டடா. "
மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தான்.
"பிரகாஷ். நம்ப பள்ளி கூடத்துலயே பிளஸ் ஒன் சேருவயில்லை. "
"இல்ல தலீவா. நான் பாலிடெக்னிக் படிக்க போறேன். சீட்டு கிடைச்சிரும். "
அதுதான் நான் அவனை கடைசியாக பார்த்தது.
********************************
"நல்லா இருக்கேன் பிரகாஷ். நீ எப்படிடா இருக்க.. என்னடாது இது தலை முடி உள்ள வாங்கிருச்சி. "
"வயசாவுது இல்ல" சிரித்தான் அந்த இருபத்தி நான்கு வயது இளைஞன்.
"அப்புறம். நீ என்ன பண்ற. வேலை பாக்குறியா தலீவா. "
"இல்லை பிரகாஷ். டிகிரி முடிச்சிட்டு மேல மாஸ்டர்ஸ் படிக்கிறேன். நாம பாத்து ஏழு வருஷம் இருக்கும் இல்ல. நீ என்ன பண்ற.. "
"உனக்கு தெரியுமே. பாலிடெக்னிக் படிச்சேன். அப்புறமா கொஞ்ச நாள் சும்மா. இப்போ மெட்றாஸ்ல ஒரு கம்பெனியில ஃபுளோர் இஞ்சினியர். "
மேல் விசாரிப்புகள் தொடர்ந்தன.
"ஏதோ பிழைப்பு ஓடுது தலைவா. பேருதான் புளோர் இஞ்சினியர். இரண்டாயிரம் ரூபா தர்றான். "
"அவ்வளவுதானா. "
"நான் எல்லாம் என்ன தலீவா உன்னமாதிரியா. உங்க வீட்ல படிக்க வைக்கறாங்க. அம்மா நல்லா இருக்கறாங்களா. நான் உங்க வீட்டுக்கு வந்தா சாப்பாடு போடாம அனுப்ப மாட்டாங்களே. "
"நல்லா இருக்காங்க. உங்க வீட்ல. "
"அப்பா மூணு வருசத்துக்கு மின்னாடி இறந்துட்டாரு. கொஞ்சம் நோய் வாய் பட்டு. அவருக்கு அண்ணன் மேல பெரிய கவலை. அண்ணன் சரியா படிக்கல. பத்தாவது நாலு தடவை எழுதி பாஸ் பண்ணான். இருக்கற இரண்டு நஞ்சைய அண்ணன் மேல எழுதிட்டாரு. "
கேட்டுக்கொண்டிருந்தேன். தொடர்ந்தான்.
"உனக்கு தெரியுமே. அண்ணனுக்கு போன வருஷம் கல்யாணம் ஆச்சு, பத்திரிகை அனுப்பினனே. "
"கிடைச்சிச்சு பிரகாஷ். எக்சாம் டைம் வரமுடியல. "
"அண்ணன் இப்ப கிளார்க்கு. அப்பா வேலையில இருந்தப்பவே இறந்துட்டாரு இல்ல. சாகறதுக்கு முன்னாடி அப்பா என்னை கேட்டுக்னது ஒண்ணே ஒண்ணுதான். பிரகாஷ், நான் செத்தா கம்பாஸினேட் கிரவுண்டுல புள்ளைக்கு வேலை வரும். நீ அதை உங்க அண்ணனுக்கு விட்டு கொடுப்பியான்னாரு. சரிப்பான்னேன். நீ புத்திசாலி என்னை மாதிரி, என் கவலையெல்லாம் உங்க அண்ணனை பத்திதான். அவனுக்கு ஒரு வழி பண்ணிட்டேன்னா போதும். நீ கையோடும் காலோடும் பிழைச்சிப்ப. சரிப்பான்னு சொன்னேன். சத்தியம் பண்ண சொன்னாரு. பண்ணினேன்.
அந்த வேலை அண்ணனுக்கு கிடைச்சிருச்சி. "
"நீ உனக்குன்னு உங்க அப்பா கிட்ட எதுவுமே கேட்கலியா பிரகாஷ். "
"இல்லை" சிரித்தான். "அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லுது. நான் இருக்கற இருப்பு அதுக்கு எங்க தெரியுது. இரண்டாயிரம் ரூபா வாங்கிக்கிட்டு நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது. எங்க கம்பெனியில அடுத்த வருஷம் சம்பளத்தை அதிகமாக்கறதா சொல்லியிருக்காங்க. மூவாயிரம் ஆக்குவாங்க. அப்ப வேணா கல்யாணம் பத்தி யோசிக்கலாம்."
"மூவாயிரம் போதுமா. "
"ஊருக்கு வெளியில ஒரு வாடகை வீடு. வர்றவளுக்கு சாப்பாடு அவ்வளவுதான் நம்மால முடியும். இருந்தாலும் இது போதும். நமக்குன்னு ஒருத்தி பொறந்து இருக்க மாட்டாளா.
என் கவலையெல்லாம் அப்படி வர்றவா அம்மாவ பாத்துப்பாளான்றதுதான்.
எங்க அண்ணி நான் சொல்ல கூடாது, இப்ப அவங்கதான் அம்மாவ பாத்துங்கறாங்க. ஆனா அம்மாவ ஒழுங்க நடத்தறது இல்லை. "
கண்கலங்கினான். "நான் கொஞ்சம் வாழ்க்கையில முன்னேறி எங்க அம்மாவ கூட்டி வந்து வெச்சிக்கணும்னு ஆசை. பார்ப்போம். "
போரூர் வந்தது. "என் கம்பெனி இங்கதான்." பேர் சொன்னான். "இந்த பக்கம் வந்தினா பாரு." சரியென்று தலையாட்டினேன்.
நிறுத்தத்தில் இறங்கி கூட்டத்தோடு சேர்ந்து கரைந்து போனான்.
அதற்கு பிறகு நான் அவனை பார்க்கவில்லை. அவனைப்பற்றிய செய்தி எதுவுமில்லை.
அவன் நல்லமனசிற்கு எங்கு இருந்தாலும் அவன் நன்றாக இருப்பான். நம்பிக்கை மட்டும்.
12 Comments:
சாத்வீகன்,
நண்பன் நல்லவனாகக் கிடைப்பது அதிர்ஷ்டம்.
தலீஐவுக்குனுக்குக் கிடைத்த வாழ்க்கை நண்பனுக்கும் அமியவில்லை.
நெகிழ்ச்சியான கதை.
உண்மையும் கூட.
அழகான கதை!
வாழ்த்துக்கள்!! :)
ஒரே ஒரு வார்த்தை...
'நெகிழ்ச்சி'...
நன்றி வல்லிசிம்ஹன்
நன்றி CVR
நன்றி ஜி
//ஊருக்கு வெளியில ஒரு வாடகை வீடு. வர்றவளுக்கு சாப்பாடு அவ்வளவுதான் நம்மால முடியும்//
என்ன ஒரு தெளிவு! கருத்தில் துணிவு!
நன்கு சொல்லப்பட்ட கதை சாத்வீகன்!
//எங்க அண்ணி நான் சொல்ல கூடாது, இப்ப அவங்கதான் அம்மாவ பாத்துங்கறாங்க. ஆனா அம்மாவ ஒழுங்க நடத்தறது இல்லை//
வார்த்தையில் கண்ணியம் குறையவில்லை பாருங்கள்!
தொலைந்த நண்பன் இல்லை அவன்!
தொலையாமல் எண்ணங்களில் உலாவும் நண்பன்!
நன்றி... கேஆர்எஸ்
கதை மிகவும் நன்றாக இருக்கிறது.
யதார்த்தமானதாக இருக்கிறது.
நல்ல கதை சாத்வீகன்
நல்ல கதை சாத்வீகன்...
இன்னும் நிறைய எழுதுவோம்...
//"ஊருக்கு வெளியில ஒரு வாடகை வீடு. வர்றவளுக்கு சாப்பாடு அவ்வளவுதான் நம்மால முடியும். இருந்தாலும் இது போதும். நமக்குன்னு ஒருத்தி பொறந்து இருக்க மாட்டாளா.
என் கவலையெல்லாம் அப்படி வர்றவா அம்மாவ பாத்துப்பாளான்றதுதான்.
எங்க அண்ணி நான் சொல்ல கூடாது, இப்ப அவங்கதான் அம்மாவ பாத்துங்கறாங்க. ஆனா அம்மாவ ஒழுங்க நடத்தறது இல்லை. "//
இந்த வரிகள் நெகழ்ச்சியாக இருந்தது...
நன்றி லட்சுமி, குமரன் மற்றும் வெட்டிப்பயல்.
Post a Comment
<< Home