சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Thursday, December 28, 2006

தமிழிசை துவண்டு கிடப்பதேன் ?


தொன்மையும் இனிமையும் உடையது தமிழ் இசை...
துக்கடாவாக துவண்டு இருக்கிறது...

அனைத்து இடங்களிலும் தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு உண்டு. ஆனால் என்னுள்ளே சில கேள்விகள்.

எந்த ஒரு கலைவடிவமும் ஆதரிப்பவர்களை கொண்டே வளர்கிறது...

தமிழில் இசை வேண்டும் என்று கருத்து சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவதால் இது சாத்தியமில்லை...

இன்றைய நிலையில் தமிழ் இசைக்கு புரவலர்கள் தேவை...

அதைவிட முக்கியமாக ரசிகர்கள் தேவை.. தியேட்டர்களில் கானா பாடல்களுக்கு விசிலடித்துக் கொண்டிருக்கும் நமது சகதமிழனின் ரசனை மாறவேண்டும்.. இது சாத்தியமா என்பது யோசிக்கப்பட வேண்டிய விஷயம்...

நிச்சயமாக எனக்கு தெலுங்கோ தமிழோ, கர்நாடக இசை வடிவத்தை ரசிக்கும் பொறுமை கிடையாது. இதுதான் சராசரி தமிழ் ரசிகனின் மனநிலையும் கூட.

"மேயாத மான்... புள்ளி மேவாத மான்..." என்ற பாடலை இன்று எத்துணை பேர் ரசிக்கிறார்கள். ஒலி அல்லது ஒளி பரப்பப்பட்டால் என்னடா இது இழுவை என்று சொல்பவர்கள்தான் அதிகம்.

எம்.கே. தியாகராஜரின் அருமையான பாடல்களை இன்று கேட்பவர்கள் எங்கு இருக்கிறார்கள்.
தீப்பிடிக்க தீப்பிடிக்க பற்றி எரியும் சரச பாடல்களின் இடையில் அமுங்கிய தொனியில் மட்டுமே அவர் பாடல்கள் இன்று இருக்கின்றன.

எம்.எஸ். அவர்களின் "காற்றினிலே வரும் கீதம்" போன்ற கானங்கள் இன்று திரைப்படங்களில் இடம் பெறாதது ஏன்.
குத்துப்பாட்டுக்களை கேட்டுப் பெறும் தயாரிப்பாளர்களால் இது போன்ற பாடல்களை கேட்டுப் பெற்று திரைப்படத்தில் இணைக்க முடியாதா ?
சராசரி ரசிகன் இது போன்ற பாடல்களை கேட்கும் மனநிலையில் இன்று இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள்.
கானாவும் குத்துப்பாட்டும் தமிழ் கலாச்சாரமாக தமிழ் திரைப்படங்களில் வெளியாவது இதனால்தான். மக்களால் பெருமளவு ரசிக்கப்படுகின்றன என்ற அளவில் இவையும் தமிழிசையின் ஓர் அங்கமே.
ஆனால் தமிழிசை தனது பரந்த தளத்தை இவற்றோடு மட்டும் குறுக்கிக் கொண்டது ஏன் ?


இசை இன்று குறிப்பிட்ட ரசிகர்களுக்காக குறிப்பிட்ட கலைஞர்களால் குறுகிய அளவில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது கூட குறிப்பிட்ட மாதத்தில் மட்டும்.

நாம் வெளியே நின்று நமக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றை விமர்சித்து கொண்டு இருக்கிறோம்.

தமிழில் பாடினால் தனக்கு இன்னும் அதிக பேரும் புகழும் கிட்டுமென்ற நிலை உண்டானால் பாடகர்கள் தன்னால் தமிழில் பாடிவிட்டு போவார்கள்.

கலை மக்களுக்காக மக்களிடமிருந்துதான் உண்டாகிறது. எந்த ஒரு கலை வடிவத்தையும் மக்கள் மீது திணிக்க முடியாது.

சராசரி ரசிகன் தன்னை இக்கலைவடிவத்தோடு இணைத்து பார்க்க முடியாமையால்தான் விலகி நிற்கிறான். தமிழில் பாடல்கள் இந்த இசைவடிவில் கேட்கக் கிடைக்காமையால் அல்ல.
இந்த இசைவடிவத்தை அவனால் ரசிக்க முடியவில்லை என்பதால்தான்.

சிறந்த மாடர்ன் ஆர்ட் ஓவியம் என்கிறார்கள். பார்த்தால் நமக்கு ஒன்றும் புரிவதில்லை.
அதற்காக எனக்கு புரிவது போல் வரை என்று அந்த ஓவியனை நாம் கட்டாயப்படுத்த முடியுமா என்ன. அந்த ஓவிய வகை புரிந்து கொள்ளக் கூடியவர்களுக்காக அவன் வரைகிறான். நமக்கு குப்பையாய் தெரியும் அந்த ஓவியம் ஏதோ ஒருவருக்கு கோடி ரூபாய் மதிப்புள்ளதாக தெரிகிறது. தந்து வாங்கி செல்கிறார்கள்.

ஓவியத்தை வாங்காத நாம் வரைபவனிடம் சென்று புரிகின்ற மாதிரி மட்டும் வரையென்றோ, வாங்குபவனை புரிகின்ற மாதிரி ஓவியத்தை மட்டும் வாங்கு என்றோ சொல்ல முடியாது.

ஓவியத்தை நாம் வாங்குவதாக இருந்தால் மட்டுமே புரியுமாறு வரையச்சொல்லி கேட்டுப் பெறல் இயலும்.

அது போல்தான் இசையும். நமக்கு புரியாத ஒன்றை பாடக்கூடாது என்று கலைஞனை நிர்ப்பந்திக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.

அதே நேரத்தில் நமக்கு புரியும் வகையில் அதை எளிமையாக்கினால் அவனைத் தாங்கி நிறுத்த நாம் இருக்கிறோம் என்ற எண்ணத்தை நாம் ஏற்படுத்தினால் தானாகவே அவர்கள் பறந்து வருவார்கள்.

சிம்பிள் எக்கனாமி. சப்ளை அண்ட் டிமாண்ட்.

டிமாண்ட் இல்லை. அதனால் சப்ளை இல்லை.

சராசரி ரசிகனின் ரசனை அவ்வளவு எளிதாக மாறும் என்று தோன்றவில்லை. எந்த காலத்திலும் எனக்கு கர்நாடக இசை வடிவம் பிடிக்கப் போவதில்லை.
தமிழில் வந்துது என்றால் முதல் ஒரு மணி நேரம் ஆவலாக கேட்பேன்.
பிறகு என்னடா இது இழுவை என்று போய்க்கொண்டே இருப்பேன்.

அதோ அங்கே எனக்கு பிடித்த குத்து மற்றும் கானா பாடல்கள் சுடச்சுட தயாராகி கொண்டு இருக்கின்றன. வரட்டுமா.

13 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

உங்கள் கருத்தை நன்கு சொல்லியிருக்கிறீர்கள் சாத்வீகன்.

10:44 AM  
Blogger சாத்வீகன் said...

நன்றி குமரன்.

11:36 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//எந்த காலத்திலும் எனக்கு கர்நாடக இசை வடிவம் பிடிக்கப் போவதில்லை.//

சாத்வீகன்! ஏன்? இப்படிக் கூறுகிறீர்கள்....இதை எப்படி உங்களால் வரையறுத்துக் கூறமுடிகிறது.நிற்க நமது பாரம்பரிய இசைவடிவான இக் கர்நாடக இசையில் உள்ள தமிழ்ப் பாடல்கள் கேட்டுள்ளீர்களா???
ஆகப் பழையவர்கள் இல்லாவிடிலும் ஜேசுதாஸ்;சஞ்சய் சுப்பிரமணியன்,உன்னி கிருஸ்ணன்;நித்யசிரி,பம்பாய் ஜெயசிரி போன்ற இளம் தலைமுறையினரின் பாணியை முயற்சித்துப் பார்த்தீர்களா????
நான் ஈழத்தில் இருக்கும் போது மேற்கத்தைய இசை வடிவம் கேட்டதும் இல்லை; என்னவென்றே தெரியாது. 84 ல் இங்கு வந்தபோது; சினிமாப்பாடலோ;நம் இசையோ கேட்கும் நிலையில்லை; அத்துடன் இரவில் வீட்டாரை நினைத்து; இவ்விட வாழ்வை நினைத்து நித்திரையும் வருவதில்லை.
என்ன??செய்வது.;;தொலைக்காட்டியைப் போட்டால் நள்ளிரவுக்குப் பின் பாரம்பரிய இசை தான் வரும். என்ன??செய்வது கேட்பேன். அப்போ தான் எனக்கு பவரொற்றி;டொமிங்கோ;ஜெய்சி நொர்மன்;பாபரா கென்றிஸ்; பாரி வைர்;எல்ரன் ஜோன்...இன்னும் பலர் அறிமுகமானார்கள். ஒக்கெஸ்ராவின் நேர்த்தியை ரசிக்கத்தொடங்கினேன். இப்போ..சில பிரன்ஸ் நண்பருடன் இந்த இசை பற்றியும் சம்பாசிக்கக் கூடிய சிற்றறிவு பெற்றுள்ளேன்.
அந்த ஏதும் இல்லை எனும் நிலை....என்னை இப்படி ஆக்கியது.இதன் சுவையையும் உணரவைத்தது.
மேலும் இங்கு வருடாவருடம் நம் இசைக் கலைஞர்களைப் பிரன்சு அரசு அழைத்து நிகழ்ச்சியை நடத்துகிறது. மண்டபம் நிறையும் விரல்விட்டெண்ணக் கூடிய இந்திய ஈழத்தவருடன்;;கேட்ட இந்த நாட்டவர்கள் உங்கள் இசை உணர்வைத் தொடுகிறதென்பார்கள்.
அது ஏன் நம்மவரைத் தொடவில்லை.
மிகுதி உங்கள் விருப்பம்!!!!
யோகன் பாரிஸ்

12:29 PM  
Blogger jeevagv said...


புரிந்து கொள்ள முயற்சித்தால், பொறுமையோடு முயற்சித்தால் முடியும் சாத்வீகன். திரை இசைக்கும் கர்நாடக சங்கீதம் அடிப்படை. மற்றபடி தமிழிசை தனியாக ஏதும் கிடையாது. எல்லா இசையும் ஒன்றுதான்!

திரை இசையில் உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் அவற்றிலும் நல்ல பாடல்கள் வரத்தான் செய்கின்றன. நீங்கள்தான் தேடிப்போய் கேட்க வேண்டும். அல்லது என் இந்த பதிவை படிக்கலாம்:
http://jeevagv.blogspot.com/2006/01/2005.html

2:50 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி திரு யோகன்-பாரிஸ்..

எனக்கு கர்னாடக இசையோடு மெத்த பரிச்சயம் இல்லையென்றாலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு.

அவ்வளவாக புரிபடவில்லையென்று விலகி நின்ற காலம் உண்டு.

அமைதியாக எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாத நிலையில் கர்நாடக இசையை போல் மனதுக்கு அமைதி தருவது இல்லை என்பது என் கருத்து.
அதுவே தமிழில் இருந்தால் இன்னமும் சிறப்பு.

தாள லயக்கட்டுக்களும் ராகங்களின் வகைகளும் நானறியாதவை.

ஆனால் அவசரங்கள் நிறைந்த வாழ்வில் தினசரி வாழ்வில் மற்ற இசை வடிவங்கள் இடம் பெறுவது போல் கர்நாடக இசை இடம் பெறுவது கடினம்
என்பது என் கருத்து.

பொது ரசனை கர்நாடக சங்கீதத்தில் பெருமளவு இல்லை என்பதையே இப்பதிவில் பதிந்துள்ளேன்.

தமிழரால் காவடிச்சிந்து நொண்டிச்சிந்து போன்ற சந்தங்களில் தங்களை பெருமளவு பதிந்து கொள்ளக் கூடிய அளவில் கர்நாடக இசைவடிவில் தங்களை
பொருந்தி பார்க்க இயலவில்லை என்பது எனது கருத்து.

கிராமங்களில் புழங்கும் பம்பை உடுக்கை போன்ற வரத்தியங்கள் பொது மக்களின் இசையாக இருந்து இன்று அருகி வருகின்றன.

கரகாட்டமும் மயிலாட்டமும் ஒயிலாட்டமும் தமிழ்நாட்டில் மட்டும் காணும் வடிவங்கள். இவை நாட்டுப்புற பாடல்கள் என்ற பிரிவில் பிரித்தறிய படுகின்றன.

கர்நாடக இசை ஆரோகண அவரோகணங்களில் சிக்கி வெளியே வரமுடியாது தவிப்பது போல் எனக்கு தோன்றும்.
இது தூர்தர்ஷன் வழங்கிய இசை நிகழ்ச்சிகளை பார்த்து எனது மனதில் பதிந்த பிம்பமாக இருக்கலாம்.

கர்னாடக இசை சார்ந்து எனது தேடல் இன்னும் விரிவடையவில்லை.
ஜேசுதாஸ் அவர்களின் கர்நாடக சங்கீதங்களை இசைத்தட்டுகளில் கேட்டுள்ளேன்.

நீங்கள் குறிப்பிடும் மற்ற இசையாளர்களையும் கேட்டுள்ளேன் என்றாலும் பிரித்தறிய வல்லேன் அல்லன்.
அவர்கள் தமிழிலும் பாடி இசை வெளியீடு செய்துள்ளார்கள் என்று அறிகிறேன். கேட்டு மகிழ எண்ணம் கொண்டுள்ளேன்.

நான் இங்கே சொல்ல வந்தது சங்கீத ஞானம் உள்ளவர்களால் மட்டுமே இசையை ரசிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதாலேயே மக்கள்
இசையை விட்டு வெளியே நிற்கிறார்கள் என்பதே.

நல்ல ஒரு இசையை ரசிக்க அதன் ராகத்தை அடையாளம் காட்டத் தெரிய வேண்டும் என்பது சிலரின் வாதம்.

அது மட்டுமே ஒரு இசை ரசிகனின் தேவையென்றால் நான் இசையை விட்டு ஒதுங்கி நின்று ராகம் ஏதென்று தெரியாமலே ரசித்து விட்டு போகிறேன்.

இயல் இசை நாடகமாக முத்தமிழ் தன்னில், பின்னிரு வடிவங்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய கட்டத்திலேயே நாம் இருக்கிறோம்.

கலைகள் வளர கலைஞனுக்கும் மக்களுக்குமான இடைவெளி குறைய வேண்டியது கட்டாயம்.

இந்த இடைவெளியை குறைக்கும் பொறுப்பு கலைஞர்களிடையே மட்டுமே இருக்கிறது.

மக்களோடு மக்களாக புழங்கி மக்கள் ரசனையை மாற்ற வேண்டியவர்கள் அவர்களே.

தங்களின் பின்னனூட்டத்திற்கு மிக்க நன்றி.

4:54 PM  
Blogger சாத்வீகன் said...

நன்றி திரு ஜீவா

கர்நாடக இசைகுறித்த தேடலில் ஈடுபட்டுள்ளேன். புரிதல் ராகங்கள் மற்றும் அதன் கலைவடிவம் சார்ந்து இருக்க வேண்டும் என்று தேடுகிறேன். இதில் இணையம் பெரிதும் உதவிகரமாக உள்ளது.

அவ்வப்போது வரும் நல்ல திரைஇசைப்பாடல்கள் நம்பிக்கை தருவதாக உள்ளன. தங்கள் வலைப்பக்கத்தை கண்டேன் நல்ல முயற்சி. தங்கட்கு என் நன்றிகள்.

5:17 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

எந்தக் கட்சியும் சாராத பொதுஜனக் கருத்து என்பார்களே! அது போல் இருக்கு சாத்வீகன் இந்தப் பதிவு!

பாராட்டுக்கள்!

5:47 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இன்றைய நிலையில் தமிழ் இசைக்கு புரவலர்கள் தேவை...
அதைவிட முக்கியமாக ரசிகர்கள் தேவை//

"நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே!" என்ற பாடல் எவ்வளவு பிரபலம்!
இது கர்நாடக இசையிலேயே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாட்டு தான்! எப்படி ஹிட் ஆச்சு?

சந்திரமுகியில் வரும் ராரா, சரசுக்கு ராரா பாட்டு முழுக்க தெலுங்கு! ஆனால் அதைக் கடித்துக் குதறியாவது பாடினார்கள் பல தமிழ் மக்கள்!
பொருள் தெரிந்ததா என்று எல்லாம் கேட்கவில்லை! ஏன்?

இதே வாரணமாயிரம் பாட்டு ஹே ராமில் வந்தது. தமிழ் இசை தான்; பொருளும் அவ்வளவு கடினம் அல்ல! ஆனால் ஹிட் என்று சொல்ல முடியாது! ஏன்?

பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது!
இன்று தமிழிசை பற்றிப் பேச அரசியலில்/சமூகத்தில் பலருக்குத் தெரியும்.

ஆனால் கலை வளர நீங்கள் சொன்னது போல் புரவலர் வேண்டும்!
புரவலர் என்றால் பணம் கொடுப்பவர் மட்டும் இல்லை!

சிந்தனை தருபவர், அமைப்பு ஏற்படுத்தித் தருபவர், பாடகர், ரசிகர், தோல்வி வந்தாலும் மனக் கவலை மாற்றும் விமர்சகர், திட்டமிடுபவர், பாடல் எழுதுபவர், பழமைப் புதுமைப் பாலம் இணைப்பவர், என்று இப்படிப் பல புரவலர்கள்!

இது ஒரு இயக்கத்தால் மட்டுமே முடியும்!
கர்நாடக இசைக்கு பக்தி இயக்கமாக அமைந்தது! பணம் காசு, வெற்றி தோல்வி பற்றி எல்லாம் முதலில் யாருமே கவலைப்படவில்லை! அது ஒரு மரமாக வளர்ந்தது! இன்று அதை வைத்துப் பிழைப்பு நடத்தும் அளவிற்கும் வளர்ந்து விட்டது!

அது போல் நம் தமிழ் இசைக்கும், அடி நாதம் இயக்கம் வேண்டும்! ஏற்கனவே இருக்கு! மரமாய் வளரும் காலம் எப்போது என்று கணிக்க முடியாது! ஆனால் நம் பங்குக்கு தினமும் நீர் வார்த்துக் கொண்டு இருக்கலாம் தானே!
தேவை நம் பங்கு மட்டுமே!

6:07 PM  
Blogger jeevagv said...

//நல்ல ஒரு இசையை ரசிக்க அதன் ராகத்தை அடையாளம் காட்டத் தெரிய வேண்டும் என்பது சிலரின் வாதம்.//
நிச்சயமாக இல்லை.
ஒரு பாடலை கேட்டு விட்டு, இது என்ன ராகம் என்று தெரிந்து கொண்டு, பின்னர் அதே சாயலில் இன்னொரு பாடல் கேட்கும் போது, ஞாபகம் வைத்து கொண்டு, அடடா, அன்று கேட்டோமே அதே பாடலின் ராகம் போலத் தெரிகிறதே...என்று துவங்கினால் போதும். இப்படியே கேட்க கேட்க, நாளைக்கு நீங்களே தூய தமிழில் அதே ராகத்தில் பாடல் இயற்றக்கூடும்!


சில சமயம் பாடல் வரிகள் அன்னியமாய் படும், அப்போது இசையை மட்டுமாவது கேட்க முயலுங்கள். எல்லா பாடல்களும், எல்லாருக்கும் எடுத்தமுதலே பிடித்து விடாது. அன்னப்பறவை போல் விரும்பியதை பருகலாமே!

இசையில் என் புரிதலுக்கான தேடல்களை இங்கே தொகுக்கிறேன்:
http://inisai.wordpress.com/
வருகை புரிக, நன்றி.

6:48 PM  
Blogger மணியன் said...

சாத்வீகமான பதிவு :) சொல்ல வந்ததை தெளிவாக கூறியிருக்கிறீர்கள். இசையை மொழிக்குள் கட்டி வைக்க முடியாது தான் என்றாலும் உங்களைப் போன்ற கர்நாடக இசை என்றால் காத தூரம் ஓடுபவர்களை ஈர்க்கத் தான் அதை தமிழில் கேட்கிறார்கள்.

கர்நாடக இசையோ, ஹிந்துஸ்தானி இசையோ, தமிழ் பண்களோ,மேற்கத்திய கிளாசிகலோ அவை இசையின் அரிச்சுவடிகள். சினிமா சங்கீதமோ கானா பாடலோ அந்த அரிச்சுவடியின் சுவடி பற்றியே அமைந்திருக்கின்றன. நன்னூலை விட அகநானூறு நமக்கு பிடிப்பது போல அடிப்படைகளை விட கானா பிடிப்பது இயல்பே.

கணிப் பொறியாளர்கள் தங்களுக்குள் குழுஉக் குறிகள் கொண்டுள்ளது போல் இந்த சங்கீதக்காரர்களும் சில 'சங்கதி'களை பேசி நம்மை வெளியில் வைக்கிறார்கள். இதில் தமிழில் பாட்டுக்கள் இருந்தாவது மழைக்கு பள்ளியில் ஒதுங்கும் சிறுவன்போல நாம் செல்ல ஆரம்பித்து பின் யோகன் போல இதில் பாண்டித்யம் பெறலாம் அல்லவா ?
அதனால் தான் அந்தக் காலத்தில் கல்கியிலிருந்து கச்சேரிகளில் தமிழ் இடம் பெற வலியுறுத்துகிறார்கள்.

நீங்கள் சொல்வதுபோல் சப்ளை & டிமாண்ட்தான். ஆனால் இன்று Product launch stage இல் இருக்க்கிறோம்.

10:16 PM  
Blogger குழலி / Kuzhali said...

//கானாவும் குத்துப்பாட்டும் தமிழ் கலாச்சாரமாக தமிழ் திரைப்படங்களில் வெளியாவது இதனால்தான்
//
இசை பற்றி எழுதுவதற்கு எனக்கு எந்த இசை ஞானமும் இல்லை, ஆனாலும் கானா பாடல்களை ரசனைகுறைவானவர்கள் தான் ரசிப்பார்கள், அது இசையில்லை என்று சட்டென்று ஒதுக்க முடியாது, நாட்டுப்புறப்பாடல்கள் எப்படி கிராமத்து மக்களின் இசையோ அது போல கானாப்பாடல்கள் பெரு நகரங்களில் குடிசைகளிலும் குப்பங்களிலும் வாழ்க்கையத் தேடும் ஏழைகளின் இசை, அதை கொச்சை பாடல்கள் என்ற வட்டத்தில் அடைக்க முடியாது, திரைப்படங்களில் பல கானாப்பாடல்கள் கொச்சையாக பாடப்படுகின்றன, ஆனால் நான் முன்பெல்லாம் விரும்பி வாங்கும் கானாப்பாடல் ஒலிப்பேழைகள் (ஆமாங்க பயணத்தில் ஏதேனும் ஒரு உணவகத்தில் சாப்பிட நிறுத்தும்போது அங்கிருக்கும் கடைகளில் கானாப்பாடல்கள் வாங்கும் பழக்கம் முன்பிருந்தது) பலவற்றில் அற்புதமான பலப்பாடல்கள் பெருநகர குப்பத்து ஏழை மக்களின் வாழ்க்கையை சொல்லும் இலக்கியமாகவும், அதிகாரத்துவத்துக்கு எதிரான (பெரும்பாலும் காவல்துறை, அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிரான) குரல்களும் நிறைய இருந்தன...

நன்றி

11:23 PM  
Blogger குமரன் (Kumaran) said...

குழலி சொல்லும் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். திரையிசையும் கானா பாடல்களும் எந்த விதத்திலும் குறைந்தவை இல்லை. அவையும் ஒரு கலைவடிவங்களே. மக்களின் குரல் எந்த விதத்தில் வெளிப்படுவதற்கு எளிதாக இருக்கிறதோ அந்த வடிவில் வெளிப்படும்.

7:20 AM  
Blogger வெற்றி said...

சாத்வீகன்,
உங்களின் சில கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடு உண்டு.

10:51 AM  

Post a Comment

<< Home