இன்று கந்த சஷ்டி. முருகன் கோயில் தோறும் இது பெருவிழா. முருகன் அசுரன் சூரபத்மனை கொன்று தேவர்க்கு அருளிய நாள்.
கந்தன் பிறப்பு.. கந்தன் சிறுவயது திருவிளையாடல்கள்... கந்தன் போருக்கு புறப்பாடு. போரில் அசுரர்களை அழித்தல். பின்னர் வள்ளி தெய்வானையை மணத்தல். இதுதான் கந்த புராணம்.
கதையளவில் கந்தபுராணம் பெருமளவில் இராமயணக்கதையோடு ஒத்து வருவதைக்காணலாம்.
1. இராமாயணத்தில் இராவணனை கொல்ல இராமன் பிறப்பை தேவர்கள் எதிர்நோக்குதல்.
கந்தபுராணத்தில் சூரபத்மனை கொல்ல கந்தன் பிறப்பை தேவர்கள் எதிர்நோக்குதல்.
2. இராவணன் சிவபக்தன். தவங்கள் பல இயற்றி வரங்கள் பல பெற்றவன்.
சூரபத்மனும் சிவபக்தன். தவத்தின் மகிமையால் சிவத்தின் சக்தியன்றி வேறொன்றால் மரணமில்லையென வரம் பெற்றவன்.
3. இராவணனின் தம்பி கும்பகர்ணன். தங்கை அரக்கியாகிய சூர்ப்பனகை. முனிகுமாரர்கள்.
சூரபத்மனின் தம்பிகள் தாராகாசூரன், சிங்கமுகன். தங்கை ஆட்டுமுகம் கொண்ட அசமுகி. முனிகுமாரர்கள்.
4. இராவணனின் வீரமகன் இந்திரஜித் இந்திரனை வென்றவன்.
சூரபத்மனின் மகன் பானுகோபன் சிறுவயதில் சூரியனை பிடித்து தன் தொட்டில் காலில் கட்டிப்போட்டவன்.
5. இராமன் சீதையை சிறைமீட்க போர்தொடுத்தான்.
கந்தன் ஜயந்தன் முதலான தேவர்களை சிறைமீட்க போர்தொடுத்தான்.
6. போருக்கு முன் இராமனின் தூதனாக அனுமன் கடல்தாண்டி செல்லுதல். சீதையை கண்டு பின் இராவணனிடம் தூதுரைத்து திரும்புதல்.
போருக்கு முன் கந்தனின் தூதனாக வீரபாகு கடல்தாண்டி செல்லுதல். ஜயந்தனை கண்டு சூரபத்மனிடம் தூதுரைத்து திரும்புதல்.
7. போரில் தன்னை எதிர்ப்பவன் மகாவிஷ்ணுவின் அம்சமே என அறிந்தும் இராவணன் தொடர்ந்து போரிட்டு இறைவன் திருவடியை அடைதல்.
எதிர்த்துப் போர்புரியும் குமரன் சிவனின் திருக்குமரனே என அறிந்தும் சூரபத்மன் தொடர்ந்து போரிட்டு மயிலாகவும் சேவல் கொடியாகவும் முருகன் திருவடியை அடைதல்.
இரண்டு காவியங்களிலும் காணும் ஒப்புமைகள் மிக அதிகம்.
இராமயணம் என்ற வைணவ புராணத்திற்கு இணையான சைவ புராணமாக கந்தபுராணம் மிளிர்கிறது என்று சொல்வாரும் உண்டு.
இரண்டில் பழமையானது எது எனப் பார்க்கப் புகின் கந்தபுராணமே பழமையானதாகவும் 18 புராணங்களில் ஒன்றாக, சிவனுக்கு உரிய பத்து புராணங்களில் பத்தாவது புராணமாகவும் மிளிர்கிறது.
கந்தன், கடம்பன், குகன், அறுமுகன், சரவணன், செந்தில் ஆண்டவன், தமிழ் கொண்ட முருகன் அசுரனை கொன்று போரில் வென்ற இத்திருநாள் தீமைகள் யாவும் விலகி நன்மைகள் பெருகும் நன் நாள்.
இந்நாளில் கந்தனை வணங்குவோம்.
ஓம் சரவணபவ.